ச. தமிழ்ச்செல்வன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ச.தமிழ்ச்செல்வன்
S. Tamilselvan
பிறப்புச. தமிழ்ச்செல்வன்
(1954-05-27)27 மே 1954
நாகலாபுரம், தூத்துக்குடி மாவட்டம்
தொழில்எழுத்தாளர், திறனாய்வாளர்
மொழிதமிழ்
இலக்கிய இயக்கம்தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்"வெயிலோடு போய்"
குறிப்பிடத்தக்க விருதுகள்தமிழக அரசின் சிறந்த கதாசிரியர் விருது, 2008
துணைவர்இரா.வெள்ளதாய்
பிள்ளைகள்சித்தார்த்
இணையதளம்
www.tamilwriters.in.

ச.தமிழ்ச்செல்வன் (S. Tamilselvan) தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். சிறுகதை எழுத்தாளராகவும்,[1][2] களப் பணியாளராகவும், மாற்றுக் கல்வியாளராகவும் அறியப்படுகிறார். பூ திரைப்படத்தின் திரைக்கதை எழுதியதற்காக தமிழக அரசின் சிறந்த கதாசிரியர் விருதைப் பெற்றார். கரிசல் மண்ணின் கதைகளை தொடர்ந்து எழுதுகிறார். இவரது `வெயிலோடு போய்' சிறுகதை, தமிழில் வெளிவந்த சிறுகதைகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவற்றில் ஒன்றாகும். அரசியல் எனக்குப் பிடிக்கும் என்ற கட்டுரைத் தொகுப்பு, பரவலான வாசகர்களை ஈர்த்தது.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

1954 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதி தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தில் சண்முகம்-சரசுவதி இணையருக்கு மகனாகப் பிறந்தார். விருதுநகர் மாவட்டம் நென்மேனி மேட்டுப்பட்டியில் வளர்ந்து பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார். கோவில்பட்டியில் கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் அஞ்சல் துறையிலும், இராணுவத்திலும், மீண்டும் அஞ்சல்துறையிலும் என மாறி மாறி பணியாற்றினார். எழுத்தாளர் கோணங்கி , நாடகவியலாளர் ச. முருகபூபதி. ஆகியோர் இவரது சகோதரர்களாவர்.

நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி என விரிவடைந்த வாசிப்புத் தளம் கல்லூரி காலங்களில் இவரை எழுதத் தூண்டியது. கோவில்பட்டியிலிருந்து வெளியான நீலக்குயில் என்ற சிறுபத்திரிக்கையில் இவரது முதல் கவிதை "ஒருநாள் டைரி" 1972 ஆம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து கவிதைகள் எழுதி வந்தவர் பின்னர் சிறுகதை எழுதத் தொடங்கினார். 1978 ஆம் ஆண்டில் முதல் சிறுகதையான திரைச்சுவர்கள் தாமரை இதழில் வெளிவந்தது. தொடர்ந்து கதைகள் எழுதினார். முதல் கதைத் தொகுப்பு வெயிலோடு போய் 1984 ஆம் ஆண்டில் வெளிவந்தது. அசோகவனம், வெயிலோடு போய் சிறுகதைகள், பூ என்ற திரைப்படத்தின் மூலக்கருவாகின. இத்திரைப்படத்திற்காக தமிழக அரசு 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த கதாசிரியர் விருதை இவருக்கு வழங்கியது.

படிப்பறிவை சமூகத்தில் பரவலாக்கும் நோக்கில் துவக்கப்பட்ட அறிவொளி இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு, அதற்காக ஊதியமற்ற விடுமுறை எடுத்துக்கொண்டு முழுநேரமும் விழிப்பணர்வு சேவையாற்றினார். சேவைப் பணியிலும், இலக்கிய படைப்பிலும், தமிழ்நாட்டு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்புகளிலும் திறம்பட இயங்குவதற்காக அஞ்சலகப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது தனது இணணயர் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் இரா.வெள்ளதாயுடன் சிவகாசியில் வசித்து வருகிறார்.

விருதுகள்[தொகு]

தமிழக அரசின் சிறந்த திரைக்கதையாளர் விருது (பூ-2008)
ஆனந்த விகடன் சினிமா விருது
ஜெயகாந்தன் விருது
மக்கள் தொலைக்காட்சி விருது

வெளிவந்துள்ள நூல்கள்[தொகு]

  • வெயிலோடு போய் -1984-சிறுகதைகள்[3]
  • வாளின் தனிமை-1992- சிறுகதைகள்[4]
  • மிதமான காற்றும் இசைவான கடலலையும்-முழுச்சிறுகதைத்தொகுப்பு-2006[5]
  • இருளும் ஒளியும்-அறிவொளி இயக்க அனுபவங்கள்
  • ஜிந்தாபாத் ஜிந்தாபாத்-தொழிற்சங்க வாழ்க்கை அனுபவங்கள்
  • ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது[6]
  • இருட்டு எனக்குப் பிடிக்கும்-குழந்தைகளுக்கான கட்டுரைகள்[7]
  • அரசியல் எனக்குப் பிடிக்கும்-[8] 3 லட்சம் பிரதிகளைத்தாண்டி விற்பனை
  • நான் பேச விரும்புகிறேன் -சில கலை ஆளுமைகளின் வாழ்வை முன்வைத்த கட்டுரைகள்
  • வீரசுதந்திரம் வேண்டி - (ஜா.மாதவராஜுடன் இணைந்து)
  • பெண்மை என்றொரு கற்பிதம்
  • பேசாத பேச்செல்லாம்
  • இருவர் கண்ட ஒரே கனவு
  • சந்தித்தேன்
  • வலையில் விழுந்த வார்த்தைகள்
  • அவ்வப்போது எழுதிய நாட்குறிப்புகள்
  • ஒரு சாப்பாட்டுராமனின் நினைவலைகள்
  • எசப்பாட்டு-ஆண்களோடு பேசுவோம்
  • தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்

சிறு நூல்கள்[தொகு]

  • 1947
  • 1806
  • நமக்கான குடும்பம்
  • வ.உ.சியின் தொழிற்சங்க இயக்கமும் சுதேசிக்கப்பலும்
  • அலைகொண்ட போது.. -சுனாமி மீட்புப்பணிகளில் வாலிபர் சங்கம்
  • தமிழக தொழில் வளச்சியில் கம்யூனிஸ்ட்டுகள்
  • பிள்ளை பெற்ற பெரியசாமி-படக்கதை
  • எது கலாச்சாரம்?
  • அறிவொளி புதிய கற்றோருக்கான சிறுநூல்கள் 30- க்கு மேல்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் பரிந்துரைக்கும் 5 புத்தகங்கள்!". ஆனந்த விகடன். https://www.vikatan.com/literature/arts/113292-writer-satamilselvan-s-suggests-these-books-for-chennai-book-fair. பார்த்த நாள்: 5 May 2024. 
  2. "ச.தமிழ்ச்செல்வன்", Hindu Tamil Thisai, பார்க்கப்பட்ட நாள் 2024-05-05
  3. "நெல்லை புத்தகத் திருவிழா 2024: "உணவுக்காக மற்றவர்களைச் சார்ந்திருப்பது ஆண்தான்" - ச.தமிழ்ச்செல்வன்". ஆனந்த விகடன். https://www.vikatan.com/literature/books/tamil-writer-sa-tamilselvan-speech-at-thirunelveli-book-fair. பார்த்த நாள்: 5 May 2024. 
  4. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-05-05
  5. தமிழ்ச்செல்வன், ச (2006), மிதமான காற்றும் இசைவான கடலலையும், தமிழினி, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87641-82-7, பார்க்கப்பட்ட நாள் 2024-05-05
  6. "ஆண்கள் சமைப்பது அதனினும் இனிது (Aankal Samaippathu Atha…", Goodreads (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2024-05-05
  7. "தவறவிடக் கூடாத சிறார் புத்தகங்கள்". இந்து, தமிழ் திசை. https://www.hindutamil.in/news/supplements/maya-bazar/206680-.html. பார்த்த நாள்: 5 May 2024. 
  8. "Books by ச. தமிழ்ச்செல்வன் (Author of அரசியல் எனக்குப் பிடிக்கும்)", www.goodreads.com, பார்க்கப்பட்ட நாள் 2024-05-05
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._தமிழ்ச்செல்வன்&oldid=3948677" இலிருந்து மீள்விக்கப்பட்டது