சோலே
| சோலே शोले | |
|---|---|
| இயக்கம் | ரமேஷ் சிப்பி |
| தயாரிப்பு | ஜி. பி. சிப்பி |
| திரைக்கதை | சலீம்-ஜாவேத் |
| இசை | ராகுல் தேவ் பர்மன் |
| நடிப்பு | தர்மேந்திரா சஞ்சீவ் குமார் அமிதாப் பச்சன் ஹேம மாலினி செய பாதுரி பச்சன் அம்ஜத் கான் |
| ஒளிப்பதிவு | துவார்க்கா திவேச்சா |
| படத்தொகுப்பு | எம். எஸ். சிண்டே |
| கலையகம் | யுனைட்டட் ப்ரொட்யூசர்ஸ் சிப்பி பிலிம்ஸ் |
| விநியோகம் | சிப்பி பிலிம்ஸ் |
| வெளியீடு | 15 ஆகத்து 1975 |
| ஓட்டம் | 204 நிமிடங்கள்[1] |
| நாடு | இந்தியா |
| மொழி | இந்தி |
சோலே அல்லது ஷோலே 1975இல் வெளிவந்த இந்தி அதிரடி-சிலிர்ப்புத் திரைப்படமாகும். ரமேஷ் சிப்பி இயக்கிய இப்படத்தில் சஞ்சீவ் குமார், தர்மேந்திரா, அமிதாப் பச்சன், அம்ஜத் கான், ஹேம மாலினி, செய பாதுரி பச்சன் ஆகியோர் நடித்திருந்தனர். ராகுல் தேவ் பர்மன் இசையமைப்பு செய்தார். இப்படம் 3.25 மணி நேரம் ஒடக்கூடிய பெரிய திரைப்படம் ஆகும். 2005இல் நடைபெற்ற 50ஆம் பிலிம்பேர் விருதுகளில் இப்படத்தை ஐம்பது ஆண்டுகளில் தலைசிறந்த திரைப்படம் என்று குறிப்பிடப்பட்டது. இந்திய வரலாற்றில் மிகுந்த வசூல் பெற்ற திரைப்படங்களில் சோலேயும் ஒன்று.[2] இப்படம் பாகிஸ்தான் நாட்டில் முதல்முறையாக மார்ச் 2015இல் திரையில் வெளியிடப்பட்டது.[3]
கதைச் சுருக்கம்
[தொகு]வீருவும் ஜெயும் சிறிய திருடர்கள். அவர்கள் சிறையிலிருந்து விடுதலையான பின், முன்னாள் காவல்துறை ஆய்வாளர் தாகூர் பல்தேவ் சிங் அவர்களை ஒரு பணிக்கு அமர்த்துகிறார். உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்கப்பட்டால் ₹50,000 பரிசு விதிக்கப்பட்ட கப்பர் சிங் என்ற பயங்கரமான குழுக் கொள்ளைக்கார தலைவனைப் பிடிக்க வேண்டும் என்பதே அந்த பணி. ஒரு முறை இரயில் கொள்ளையில் இருந்து இவ்விருவரும் தாகூரைக் காப்பாற்றியதால், தாக்கூர் இவர்களை இந்தப் பணிக்கு தேர்வு செய்கிறார். காவல்துறை அறிவித்த தொகைக்குக் கூடுதலாக ₹20,000 பணம் அளிப்பதாக வாக்களிக்கிறார். இருவரும் தாகூரின் கிராமமான இராம்கடுக்கு புறப்படுகிறார்கள். இராம்கடு கிராமத்து வெளிபுறத்தில் கப்பர் தங்கியிருந்து கிராமவாசிகளை பயமுறுத்திக் கொண்டிருக்கிறான்.
இராம்கட் சென்றதும், வீரு, பசந்தி என்ற துடுக்கான, வாயாடி குதிரை வண்டி ஓட்டியைக் காதலிக்கிறான். ஜெய், தாகூரின் விதவையான மருமகள் இராதாவைச் சந்தித்து அவளைக் காதலிக்கிறான். பின்னர் அவளும் அவன் காதலை மௌனமாக ஏற்றுக்கொள்கிறாள். இருவரும் பணம் பறிக்க வந்த கப்பரின் கள்ளர்களைத் தோற்கடிக்கிறார்கள். ஹோலி பண்டிகையின் போது, கப்பரின் கூட்டம் கிராமத்தைத் தாக்குகிறது. அவர்கள் ஜெயையும் வீருவையும் சுற்றி வளைக்கிறார்கள். ஆனால் இருவரும் அவர்களைத் தாக்கி கிராமத்திலிருந்து விரட்டுகிறார்கள்.
தாகூரின் செயலின்மையால் (ஜெயும் வீருவும் சுற்றி வளைக்கப்பட்டபோது, தாகூரின் கைக்கு எட்டிய இடத்தில் துப்பாக்கி இருந்தும் அவர் உதவிக்கு வரவில்லை) இருவரும் மனம் வருந்தி, பணியை கைவிட எண்ணுகிறார்கள். அப்போது தாகூர் கடந்த காலத்தில் நடந்த சில நிகழ்வுகளை விவரிக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன், கப்பர் அவரது குடும்பத்தை (இராதாவையும் இராம்லாலையும் தவிர) கொன்றதோடு, அவரது இரு கைகளையும் வெட்டி விட்டான். எப்போதும் சால்வை போர்த்திக் கொண்டிருப்பதால் இந்த உண்மை யாருக்கும் தெரியவில்லை. அதனால்தான் அவரால் துப்பாக்கியைப் பயன்படுத்த முடியவில்லை.
தாகூர் படும் துன்பத்தை உணர்ந்து, ஜெயும் வீருவும் பரிதாபப்பட்டு, கப்பரை உயிருடன் பிடிப்போம் என்று சபதம் எடுக்கிறார்கள். இருவரின் வீரச்செயல்களைக் கேள்விப்பட்ட கப்பர், கிராமத்து இமாம் இரஹீம் அவரின் மகன் அகமதைக் கொலை செய்கிறான். கிராமவாசிகள் ஜெயையும் வீருவையும் அவனிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மிரட்டுகிறான். கிராமவாசிகள் மறுத்து, பதிலாக சிறுவனின் மரணத்திற்குப் பழிவாங்க கப்பரின் பல ஆட்களை இருவரும் கொல்ல ஏற்பாடு செய்கிறார்கள்.
கோபமடைந்த கப்பர், பழிவாங்க வீருவையும் பசந்தியையும் தன் ஆட்களைக் கொண்டு பிடிக்கிறான். ஜெய் வந்து அந்த குகையைத் தாக்குகிறான். மூவரையும் கொள்ளையர்கள் பின்தொடர, கப்பரின் குகையிலிருந்து தப்பிக்கிறார்கள். பாறையின் பின்னால் இருந்து சுடுகையில், ஜெயும் வீருவும் குண்டுகள் தீர்ந்துவிடும் நிலையை அடைகிறார்கள். ஜெய் துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்ததை வீரு அறியாமல், மேலும் குண்டுகள் எடுக்கவும் பசந்தியை பாதுகாப்பான இடத்தில் விடவும் வீரு புறப்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறான்.
ஜெய் தன்னை தியாகம் செய்துகொள்கிறான். தனது கடைசி குண்டை பயன்படுத்தி அருகிலிருந்த டைனமைட்டு குச்சிகளை வெடிக்கச் செய்து, பாலத்தில் இருந்த கப்பாரின் ஆட்களைக் கொல்கிறான். வீரு கிராமத்தில் இருந்து திரும்பி வருகிறான். ஆனால் ஜெய் இறந்துவிட்டான். இது ராதாவையும் வீருவையும் தவிக்கச் செய்கிறது. சீற்றமடைந்த வீரு, கப்பரின் குகையைத் தாக்கி மீதமுள்ள ஆட்களைக் கொன்று, கப்பரைப் பிடித்து கிட்டத்தட்ட அடித்துக் கொல்கிறான்.
தாகூர் அங்கு தோன்றி, கப்பரை உயிருடன் ஒப்படைக்க வேண்டும் என்ற சபதத்தை வீருவுக்கு நினைவூட்டுகிறார். தாகூர் தனது முள் உள்ள காலணிகளைக் கொண்டு கப்பரையும் அவன் கைகளையும் கடுமையாகக் காயப்படுத்துகிறார். தாகூர் கப்பரைக் கொல்லப் போகும் தருணத்தில், காவல்துறையினர் வந்து சேர்கிறார்கள். காவல் அதிகாரி தாகூரிடம் கப்பரை விடுவிக்கச் சொல்லி, அவரும் ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்தவர் என்றும், அவரது முன்மாதிரி நடவடிக்கைகள் புகழ்பெற்றது என்றும் சொல்லி சமாதானப்படுத்துகிறார். தாகூர் உடன்பட்டு விடுவிக்கிறார். காவல்துறை கப்பரை அவன் குற்றங்களுக்காக கைது செய்கிறது.
ஜெயின் இறுதிச்சடங்குக்குப் பிறகு, வீரு இராம்கட்டை விட்டு செல்ல முடிவு செய்கிறான். தாகூர் அவனை அனுதாபத்துடன் புரிந்துகொள்கிறார். ரயிலில் ஏறியதும், பசந்தி ரயிலில் தனக்காக காத்திருப்பதை வீரு காண்கிறான். இருவரும் கட்டிப்பிடிக்கிறார்கள்.
நடிகர்கள்
[தொகு]- தர்மேந்திரா - வீரு
- சஞ்சீவ் குமார் - தாக்கூர் பல்தேவ் சிங், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி
- ஹேம மாலினி - பசந்தி, வீரு இவரை காதலிக்கிறார்
- அமிதாப் பச்சன் - ஜெயதேவ், "ஜெய்"
- செய பாதுரி பச்சன் -இராதா, பல்தேவ் சிங்கின் மருமகள், ஜெய் இவரை காதலிக்கிறார்
- அம்ஜத் கான் - கப்பர் சிங், தேடப்பட்டு வரும் குழுக் கொள்ளைக்காரன்
- லீலா மிஸ்ரா - பசந்தியின் அத்தை
- கீதா சித்தார்த் - கீதா, பல்தேவ் சிங்கின் இன்னொரு மருமகள்[4]
- ஹெலன் "மெஹபூபா மெஹபூபா" பாடலில் சிறப்புத்தோற்றம்
- ஓம் சிவ்புரி கப்பர் சிங்கின் தாக்குதல்களை விசாரிக்க வரும் காவல் அதிகாரி
வரவேற்பு
[தொகு]1975இல் வெளியான போனது 100 திரையரங்குகளில் வெள்ளிவிழாவும் (25 வாரங்கள்), 60 திரையரங்குகளில் பொன் விழாவும் (50 வாரங்கள்) கண்டது. மும்பையில் 1500 பேர் அமரக்கூடிய திரையரங்கமான மினர்வாவில் 5 வருடங்கள் தொடர்ச்சியாக ஓடி ஷோலே சாதனை படைத்தது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sholay (PG)". British Board of Film Classification. Retrieved 12 April 2013.
- ↑ ஷோலே திரைப்படம் வெளியாகி 40 ஆண்டுகள்
- ↑ தினமலர். "பாகிஸ்தானில் முதல் முறையாக ஷோலே திரைப்படம் ரிலீஸ்". dinamalar.com. Retrieved 2025-12-21.
- ↑ "Parichay And Sholay Actor கீதா சித்தார்த் Kak Passes Away". India.com இம் மூலத்தில் இருந்து 14 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201014034125/https://www.india.com/entertainment/parichay-and-sholay-actor-gita-siddharth-kak-passes-away-3878236/.
- ↑ ராஜமருதவேல் (2025-07-01). "50 வருடங்களுக்கு பின் திரையில் மீண்டும் வெளியாகும் ஷோலே திரைப்படம்! எப்போது தெரியுமா?". Kalki Online. Retrieved 2025-12-21.