சோம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலை
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Apiales
குடும்பம்: அபியேசியே
பேரினம்: பிம்பினெல்லா
இனம்: P. anisum
இருசொற் பெயரீடு
பிம்ம்பினெல்லா அனிசம்
கரோல்லஸ் லின்னேயஸ்

சோம்பு(Anise) /ˈænɪs/,[1] என்பது அபியேசியே (Apiaceae) குடும்பத்தைச் சேர்ந்த நறுமணமிக்க ஒரு பூக்கும் தாவரம் ஆகும். கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி மற்றும் தென்மேற்கு ஆசியாப் பகுதியைத் தாயகமாகக் கொண்டது. சோம்பு அதிமதுரம், அண்ணாசிப்பூ, மற்றும் பச்சடி வகையில் பயன்படுத்தப்படும் சில செடிகளுக்கு இணையான சுவையை உடையது.

உயிரியல்[தொகு]

சோம்பு மருத்துவத்திற்குப் பயன்படும் ஒரு மூலிகைத் தாவரம் ஆகும். குட்டையாக இருக்கும் இச்செடி 3 அடி (0.91 மீ) உயரமே வளரும் ஓராண்டுத் தாவரமாகும். இத்தாவரத்தின் இலைகள் தண்டின் அடிப்பகுதியில் நீண்டும் 0.5–2 அங் (1.3–5.1 cm) செ.மீ. அளவுடையதாக சற்றே கதுப்பாக குழியுடையதாகவும் காணப்படும். ஆனால் தண்டின் மேற்பகுதியில் உள்ள இலைகள் பல இலைகளாகப் பிரிந்து ஒரு சிறகைப் போலக் காணப்படும். இதன் மலர்கள் வெண்மை நிறமுடையது. சுமார் 3 மி.மீ விட்டத்துடன் ஓர் அடர்ந்த குடை போல இருக்கும். இதன் பழங்கள் உலர்ந்து 3 முதல் 5 மி.மீ வரை ஒரு நீள்வட்டமாக இருக்கும். இவை பொதுவாக சோம்பு விதைகள் என அழைக்கப்படுகின்றன.[2]

சோம்பு லேபிடோப்டேரா இனத்தைச் சேர்ந்த சிலவகைப் பூச்சிகளான வண்ணத்துப்பூச்சி, அந்துப்பூச்சி போன்றவற்றின் உணவாகவும் பயன்படுகிறது

பயிரிடும் முறை[தொகு]

சோம்பு நல்ல ஒளியும் செழுமையான செறிவூட்டப்பட்ட மண்ணும் உள்ள பகுதிகளில் மிகச்சிறப்பாக வளரும். பெரும்பாலும் வசந்த காலத்தில் இதன் விதைகள் மண்ணில் விதைக்கப்படுகின்றன. இவை நன்றாக மண்ணில் வேரூன்றி வளரத் தொடங்கியபின் இவற்றை பெயர்த்து நடுவது இல்லை. ஏனெனில் இவைகள் உறுதியான ஆணிவேரை உடையன. எனவே நாற்று சிறியதாக இருக்கும்போதே இவை பெயர்த்து நடப்பட வேண்டும்.[3]

உற்பத்தி[தொகு]

சோம்பு விதைகள்

சோம்பில் அனித்தோல் எனப்படும் மணம் மிகுந்த எண்ணெய் பெறப்படுகிறது. இதன் மருத்துவத்தன்மை, மணம் மற்றும் சுவைக்காக மேற்கத்திய சமையல் முறைகளில் சில உணவு வகைகள், பானங்கள், மற்றும் மிட்டாய்கள் செய்ய சோம்பு பயன்படுத்தப்படுகிறது. தற்போது தென்கிழக்கு ஆசிய, மற்றும் கிழக்கு ஆசிய உணவுகளில் சோம்பிற்குப் பதிலாக தக்கோலம் அல்லது அண்ணாசிப்பூ (அண்ணாசி மொக்கு) எனப்படும் சோம்பு இனத்தைச் சேராத மசாலாப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் சோம்பின் உற்பத்தி கணிசமாகக் குறைந்து அண்ணாசிப்பூ உற்பத்தி அதிகரித்துள்ளது. மேற்கத்திய சந்தைகளில் சோம்பின் இடத்தினைப் அண்ணாசிப்பூ பிடித்துள்ளது. 1999 களில் சோம்பிலிருந்து உற்பத்தி செய்யப்படும் எண்ணெய் 8 டன்னாகவும் அதே நேரம் அண்ணாசிப் பூவிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட எண்ணெய் 400 டன்னாகவும் இருந்தது.[4]

 

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோம்பு&oldid=3694556" இலிருந்து மீள்விக்கப்பட்டது