செர்ப்பா
செர்ப்பா அல்லது ஷெர்ப்பா என்றழைக்கப்படும் மக்கள் நேபாளத்தில் உயர்மலைப்பகுதியாகிய இமய மலைப் பகுதியில் வாழும் ஓரினத்தவர். திபெத்திய மொழியில் ஷர் என்றால் கிழக்கு என்று பொருள்; பா என்னும் பின்னொட்டு மக்களைக் குறிக்கும். எனவே ஷெர்ப்பா என்னும் சொல் கிழக்கத்திகாரர்கள் என்னும் பொருள்படும் சொல். ஷெர்ப்பாக்கள் ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு திபெத்தில் இருந்து நேபாளத்திற்கு குடிபெயர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது. ஷெர்ப்பா இனப் பெண்களைக் குறிக்க ஷெர்ப்பாணி என்னும் சொல் ஆளப்படுகின்றது.
ஷெர்ப்பா மக்கள் மலையேறுவதில் தேர்ந்தவர்கள். மிகுந்த பளுவைத் தூக்கிக்கொண்டு கடினமான மலைப்பாதைகளில் அயர்வின்றி ஏறும் இவர்கள் திறமை உலகப்புகழ் பெற்றது. உலகில் யாவற்றினும் மிக உயரமான எவரெஸ்ட் மலை மீது முதன்முதலாக ஏறி வெற்றி நாட்டியவர்களில் தேஞ்சிங் நோர்கே என்னும் ஷெர்ப்பா ஒருவர் (இவர் எட்மண்ட் ஹில்லரியுடன் சேர்ந்து இந்த அரிய செயலை செய்து புகழ் நாட்டினார்).
வாழிடம்
[தொகு]பெரும்பாலான ஷெர்ப்பாக்கள் நேபாளத்தின் வடகிழக்கு பகுதிகளான சோலுகும்பு மாவட்டம் அல்லது ஃவராக் என்னும் பகுதியில் வாழ்கின்றனர். ஒரு சிலர் மேற்கே தொலைவில் உள்ள ரோல்வாலிங் பள்ளத்தாக்கிலும், சிலர் காத்மாண்டு நகருக்கு வடக்கே உள்ள ஹெலம்பு பகுதியிலும் வாழ்கின்றனர். பங்போச்சோ என்னும் ஊர்தான் நேப்பாளத்தில் ஷெர்ப்பாக்கள் வாழும் மிகப்பழைய ஊர். இச்சூர் ஏறத்தாழ 300 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. ஷெர்ப்பா மக்கள் தங்களின் தனி மொழியாகிய ஷெர்ப்பா மொழியைப் பேசுகிறார்கள். இது திபெத்திய மொழியின் ஒரு கிளை மொழி போல உள்ளது. ஷெர்ப்பா மக்கள் உயர் நிலங்களில் கோதுமை, பார்லி போன்றவற்றை பயிர் செய்வதும், வணிகம் செய்வதும் வழிவழியாக செய்துவரும் தொழில்கள். இவர்களில் சிலர் நாம்ச்சே பசார் என்னும் இடத்தில் வாழ்கிறார்கள். ஷெர்ப்பா மக்களுக்கு நெருக்கமான அன மக்கள் ஜிரேல் என்னும் மக்கள். இவர்கள் ஜிரி என்னும் இடத்தில் வாழ்கிறார்கள். இந்த ஜிரேல் மக்கள் ஷெர்ப்பாவின் கிளை மக்கள் என்கிறார்கள் (ஷெப்பா பெண்களுக்கும் சுனுவார் என்னும் மக்களின் ஆண்களுக்கும் பிறந்தவர்கள்). இந்தியாவில் ஷெர்ப்பா மக்கள் டார்ஜிலிங் கலிம்ப்பாங் ஆகிய இடங்களிலும் சிக்கிம் மாநிலத்திலும் வசிக்கிறார்கள். 2001 ஆம் ஆண்டு நேப்பாள கணக்கெடுப்பின் படி 154,622 ஷெர்ப்பாக்கள் நேப்பாலத்தில் வாழ்கிறார்கள். இவர்களில் 92.83% மக்கள் புத்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள், 6.26 மக்கள் இந்து மதத்தைப் பின் பற்றுகிறார்கள், 0.63% மக்கள் கிறிஸ்துவ மதத்தைப் பின் பற்றுகிறார்கள், 0.20% மக்கள் போன் (Bön) வழியைப் பின்பற்றுகிறார்கள்.
புகழ்பெற்ற ஷெர்ப்பாக்கள்
[தொகு]- 1953ல் எட்மண்ட் ஹில்லரியுடன் இணந்து இமய மலையை முதன்முதலாக ஏறி வெற்றி கொண்ட தேஞ்சிங் நோர்கே
- பெம்பா டோர்ஜீ (Pemba Dorjie), லக்பா 'கேலு (Lhakpa Gelu) என்னும் இரு ஷெர்ப்பாக்கள் இமயமலை அடிக்கூடாரத்தில் இருந்து புறப்பட்டு யார் மிக விரைவாக எவரெஸ்ட் உச்சிக்குச் செல்லமுடியும் என்னும் போட்டியில் அண்மையில் பங்கு கொண்டனர். மே 23, 2003 ஆம் நாள் டோர்ஜீ 12 மணிநேரம் 46 மணித்துளிகளில் ஏறினார். மூன்று நாட்கள் கழித்து 'கேலு இந்த அரிய செயலை 2 மணிநேரம் குறைவாக எடுத்து வெற்றி நாட்டினார். அதாவது 10 மணி நேரம் 46 மணித்துளிகள் நேரத்தில் எவரெஸ்ட் உச்சியை அடைந்தார். ஆனால் மே 24, 2004ல் டோர்ஜி மீண்டும் பங்கு கொண்டு 8 மணி நேரம் 10 மணித்துளிகளில் ஏறி அரும் வெற்றி பெற்றார் [1]
- மே 16, 2007 அன்று அப்பா ஷெர்ப்பா என்பவர் எவரெஸ்ட் மலையை 17 ஆவது முறையாக ஏறி தன்னுடைய பழைய அரிய செயலை விஞ்சி உள்ளார். இவரே எவரெஸ்ட் மலையை மிக அதிகமான தடவை ஏறியவர் [2].
- ஷெர்ப்பாணிகளில் இருமுறை எவரெஸ்ட் மலையை ஏறி வெற்றி நாட்டிய பெம்பா டோமா ஷெர்ப்பா புகழ்பெற்றவர். இவர் மே 22, 2007ல் லோட்ஸே மலையில் இருந்து விழுந்ததால் இறந்துவிட்டார்.[3]
குறிப்புகள்
[தொகு]- ↑ "New Everest Speed Record upheld". EverestNews.com. Archived from the original on டிசம்பர் 11, 2006. பார்க்கப்பட்ட நாள் Feb 4, 2007.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ "Super sherpa's new Everest record". BBC News. May 16, 2007. பார்க்கப்பட்ட நாள் May 16, 2007.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ "Famous female Nepal climber dead", BBC News, 23 May 2007