சீதா தேவி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீதா தேவி கோயில் (Seetha Devi Temple) என்பது தென்னிந்திய மாநிலமான, கேரளத்தின், வயநாடு மாவட்டத்தில் புல்பள்ளியில் உள்ள ஒரு கோயில் ஆகும். இது கேரள கோயில்களில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள கோயிலாகும். ஏனெனில் இது இராமன் மற்றும் சீதையின் குழந்தைகளான இலவன், குசன் ஆகியவர்களுக்கு நிறுவபட்ட ஒரே கோயில் ஆகும். சீதையின் புராணக்கதையுடனும், அவரது குழந்தைகளான இலவன் மற்றும் குசன் ஆகியோர் இந்த கோயிலுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. புல்பள்ளி என்ற பெயர் கூட புல் படுக்கையுடன் (தர்பைப் புல்) தொடர்புடையது என்று நம்பப்படுகிறது, அதில் இலவன் ஒரு குழந்தையாக விளையாடியதாக நம்பப்படுகிறது.

புராணம்[தொகு]

இக்கோயில் குளமானது வயநாட்டில் மிகப்பெரிய ஒன்றாகும். "சீதை" என்ற சொல்லின் பொருள் மண் அல்லது பூமியைக் குறிக்கிறது. இந்த இடமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் இந்து காவியமான இராமாயணத்தின் முக்கிய இடங்களாக நம்பப்படுகின்றன. சீதையை இராமன் கைவிட்டபோது, அவர் புல்பள்ளியை அடைந்தார், வால்மீகி முனிவரால் அடைக்கலம் பெற்றார் என்று நம்பப்படுகிறது. சீதை இலவன், குசானைப் பெற்றெடுத்த புல்பள்ளி வால்மீகி ஆசிரமம் என்று அழைக்கப்படுகிறது. புராணக் கதைகளின்படி, சீதா தேவியின் இரண்டு மகன்களும் அஸ்வமேத யாகத்தின் ஒரு பகுதியாக இராமன் அனுப்பிய குதிரையைப் பிடித்தனர். குதிரையை விடுவிக்க இராமன் வந்தபோது, அவர் சீதையைப் பார்த்தார், உடனடியாக சீதை தன்னுடைய தாயான பூமியில் இறங்கி காணாமல் போனார்.

கீழே செல்லும் சீதையின் தலைமுடியை இராமன் பிடித்தார். இதனால் அந்த இடத்திற்கு செட்டாடின்காவு அல்லது ஜடயட்டகாவு என்று பெயர் வந்தது. இந்த கோவிலின் சப்தமாதருடன் சீதாத்திலம்மா (சீதா தேவி) தலைமை தெய்வமாக உள்ளார். இந்த கோயில் தற்போதைய சீதா கோயிலிலிருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது. நெய் விளக்கு இங்கே ஒரு முக்கிய வழிபாடு ஆகும்.

புல்பள்ளியின் சீதா தேவி கோயில் 18 ஆம் நூற்றாண்டில் பழசி ராஜாவால் கட்டப்பட்டது. அவர் பல ஆண்டுகளாக கோயிலை நிர்வகித்தார். இந்த கோவிலின் முற்றத்தில் அவர் தனது இராணுவத் தலைவர்களுடனான சந்திப்புகளையும், கலந்துரையாடல்களையும் நடத்தியுள்ளார். இந்த கோயிலின் நிர்வாகம் பின்னர் குப்பத்தோட் குடும்பம் மற்றும் வயநாட்டில் உள்ள புகழ்பெற்ற நாயர் குடும்பத்தின் கைகளுக்கு வந்தது. அந்த நேரத்தில் வயநாட்டில் உள்ள பெரும்பாலான முக்கியமான கோயில்கள் வெவ்வேறு நாயர் குடும்பங்களால் நிர்வகிக்கப்பட்டன. குப்பத்தோட் குடும்பத்தின் மூபில் நாயர் (தலைவர்) குடும்பத்தின் தலைமையகமான நெல்லாரட் எடோமில் தங்கியிருந்தார். இப்போது கூட, இந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கோவிலின் நிர்வாகத்திற்கான அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளார். [1]

இராணுவத் தாக்குதலின் போது, மைசூரைச் சேர்ந்த திப்பு சுல்தான் இந்த கோவிலை அழிக்கத் திட்டமிட்டார். ஆனால் சீதை தேவியின் அற்புத சக்தியால் நண்பகலில் உருவாக்கப்பட்ட இருள் காரணமாக அவர் பின்வாங்க வேண்டியிருந்தது என்று நம்பப்படுகிறது.

இந்த கோயிலின் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், வயநாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மிகவும் பொதுவாக காணப்படும் அட்டைகள் இந்த கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் காணப்படுவதில்லை. புராணத்தின் படி, சீதை இலவனையும் குசனையும் கடித்த அட்டைகளைச் சபித்து புல்பள்ளியில் இருந்து வெளியேற்றினார் எனப்படுகிறது. இந்த இடத்தைப் பற்றிய மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், பல்வேறு இடங்களில் ஏராளமான புற்று மேடுகளை (வால்மீகம்) காணலாம். இது இராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவருடன் தொடர்புடையது. சனவரி முதல் வாரத்தில் கொண்டாடப்படும் இந்த கோயில் திருவிழாவில் திருவிழாவானது பிராந்திய திருவிழாவாகவும் கருதப்படுகிறது. இதில் பல்வேறு சாதிகள், மதங்களைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படும் இந்த கோயில் திருவிழாவுக்கு, வயநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து செல்கின்றனர்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதா_தேவி_கோயில்&oldid=3034163" இலிருந்து மீள்விக்கப்பட்டது