சி. வி. வேலுப்பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சி. வி. வேலுப்பிள்ளை
C.Vs.jpg
பிறப்புசெப்டம்பர் 14, 1914(1914-09-14)
வட்டகொடை மடக்கொம்பரை தோட்டத்தில்
இறப்புநவம்பர் 19, 1984(1984-11-19) (அகவை 70)
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுகவிஞர், நாவலாசிரியர், தொழிற்சங்கவாதி, பாராளுமன்ற உறுப்பினர்,ஈழத்து எழுத்தாளர்

சி. வி. வேலுப்பிள்ளை (செப்டம்பர் 14, 1914 - நவம்பர் 19, 1984) இலங்கை மலையகத்தின் முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவர். ஆசிரியர், அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி, கவிஞர், பத்திரிகை ஆசிரியர் எனப் பன்முக ஆளுமையாளராகத் திகழ்ந்தவர். கவிதைகள், நாவல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ள இவர் இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக 1947 ஆம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

வேலுப்பிள்ளை இலங்கையின் மலையகத்தில் மடக்கொம்பரையில் பெரிய கங்காணிக்கு மகனாக பிறந்தார். அவர் கொழும்பில் நாலந்தா கல்லூரியில் கல்வி கற்றார். சேக்ஸ்பியர் முதலியோரின் ஆக்கங்களை இவர் படித்துத் தேறினார்.[2] ஆசிரியராகப் பணியாற்றினார்.

எழுத்துலகில்[தொகு]

இலங்கை வானொலியான வொயிஸ் ஒஃப் லங்கா (Voice of Lanka) அவரது Tea Pluckers என்ற ஆங்கிலக் கவிதையை அறிமுகம் செய்தது. அவரது திறமையை வியந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் எஸ். தொண்டமான் தனது "காங்கிரஸ் நியூஸ்" என்ற ஏட்டின் ஆசிரியராக அமர்த்திக் கொண்டார்.[2]

கதை என்னும் இலக்கிய இதழ், மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மாவலி என்ற மாத இதழ் ஆகியவற்றின் ஆசிரியராக இருந்து செயல்பட்டார்.[3] அந்நாளில் தினகரன் ஆசிரியராக இருந்த பேராசிரியர் க. கைலாசபதி மலையகப் படைப்பாளிகளை ஊக்குவித்து மலையக இலக்கியங்களை வெளியிட்டு வந்தார். அவர் சி. வி. வேலுப்பிள்ளையின் நிறைய படைப்புகளை வெளிக்கொணர்ந்தார். பொன். கிருஷ்ணசாமி இவரது ஆங்கிலக் கவிதைகளை மொழிபெயர்த்து தினகரனில் வெளியிட்டார்.[2]

1934 ஆம் ஆண்டில் இரவீந்திரநாத் தாகூர் இலங்கை வந்­தி­ருந்த போது அவரை 1934 மே 14 இல் கொழும்பில் சந்தித்து தன்னுடைய விஸ்மாஜினி என்ற இசை நாடக நூலை வழங்கி ஆசி பெற்றார்.[4]

1961 இல் வீரகேசரியில் "காலம் பதில் சொல்லட்டும், சாக்குக்காரன் என்ற இரு சிறுகதைகளை இவர் எழுதினார்.[4]

வேலுப்பிள்ளை சிங்களப் பெண் ஒருவரை விரும்பித் திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவியும் சில கவிதைகளை எழுதியுள்ளார்.

அரசியலில்[தொகு]

1947 இல் சோல்பரி அரசியல் சாசனப்படி இடம்பெற்ற முதலாவது நாடாளுமன்ற தேர்தலில் மலையகத்திலிருந்து சென்ற 7 பேரில் ஒருவராக தலவாக்கலை பிரதேசத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். ஆயினும் அன்றைய ஐக்கிய தேசியக் கட்சி அரசு நிறைவேற்றிய பிரசா உரிமைச் சட்டத்தால் அவர்கள் உறுப்புரிமை இழந்தனர். என்றாலும் மேற்படி சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 7 பிரதிநிதிகளும் வெளிநடப்பு செய்தனர்.

பின்னாளில் அவர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் இருந்து விலகி வி. கே. வெள்ளையன் தலைமையில் 1965 இல் அமைந்த தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து கொண்டார். 1977 நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இவரது நூல்கள்[தொகு]

 • விஸ்மாஜினி (இசை நாடகம்)
 • Way Farer (1949)
 • In Ceylon's Tea Garden (1952)
 • இலங்கை தேயிலைத் தோட்டத்திலே (தமிழாக்கம்: சக்தி பாலையா)
 • வீடற்றவன்
 • இனிப்படமாட்டேன்
 • வாழ்வற்ற வாழ்வு (புதினம், தமிழாக்கம்: பொன். கிருஷ்ணசாமி)
 • எல்லைப்புறம் (புதினம், தமிழாக்கம்: பொன். கிருஷ்ணசாமி)
 • காதல் சித்திரம் (புதினம், தமிழாக்கம்: பொன். கிருஷ்ணசாமி)
 • நாடற்றவர் கதை (கட்டுரைகள்)
 • மலைநாட்டு மக்கள் பாடல்கள் (நாட்டார் பாடல்களின் தொகுப்பு)

நினைவுப் பதிவுகள்[தொகு]

 • சி. வி. வேலுப்பிள்ளை நினைவில் அஞ்சல்தலை ஒன்று இலங்கை அஞ்சல் திணைக்களத்தால் 2014 செப்டம்பர் 21 இல் வெளியிடப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

Noolagam logo.jpg
தளத்தில்
சி. வி. வேலுப்பிள்ளை எழுதிய
நூல்கள் உள்ளன.
 1. 1.0 1.1 "மலையக முன்னோடி எழுத்தாளர், மக்கள் கவிமணி ஸி.வி வேலுப்பிள்ளைக்கு தபால் முத்திரை வெளியீடு". tamil.adaderana.lk. பார்த்த நாள் 8-09-2017.
 2. 2.0 2.1 2.2 "மலையக இலக்கிய கருத்தரங்கில் சீ. வீ. பற்றிக் கேட்டவை". தினகரன் (சனவரி 17, 2010). மூல முகவரியிலிருந்து 2010-01-21 அன்று பரணிடப்பட்டது.
 3. மல்லியப்பூசந்தி திலகர் (சூன் 10 2014). "சி. வி. வேலுப்பிள்ளையின் பன்முக ஆளுமையும் பணிகளும்". வீரகேசரி. 
 4. 4.0 4.1 சாரல்நாடன் (சூலை 13 2014). "மலையகத்தில் ஆங்கில ஆக்க இலக்கியம்". வீரகேசரி. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._வி._வேலுப்பிள்ளை&oldid=3243897" இருந்து மீள்விக்கப்பட்டது