உள்ளடக்கத்துக்குச் செல்

சிறு முக்குளிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்குளிப்பான்
முக்குளிப்பான் - இனவிருத்திகால சிறகுத்தோற்றத்தில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Tachybaptus
இனம்:
T. ruficollis
இருசொற் பெயரீடு
Tachybaptus ruficollis
(Pallas, 1764)
முக்குளிப்பானின் பரவல்
வேறு பெயர்கள்

Podiceps ruficollis

முக்குளிப்பான் (Tachybaptus ruficollis) என்பது முக்குளிப்பான் என்ற பேரினத்தைச் சார்ந்த குட்டைச் சிறகுடைய வாலில்லாத நீர்ப்பறவை ஆகும். இதன் கால்கள் உடலில் பின்னால் தள்ளி இருக்கும். முன் விரல்கள் மூன்றும் தரமாக வளர்ந்திருக்கும். விரல்களின் இரு புறமும் தட்டையான இலை போன்று அகன்ற பாகங்கள் உண்டு. இவையே இது நீந்த உதவுகின்றன, எனவே விரல் இலையின் நடு நரம்பு போல அமைந்துள்ளது, முக்குளிப்பான் குடிபெயராத/புலம்பெயராத சுமார் 23 செ.மீ அளவுடைய ஒரு இந்திய வாத்தாகும். ஊரல், குளிவை, குளுப்பை ஆகியவை இதன் வேறு பெயர்கள்.[2]

கள சிறப்பியல்புகள்

[தொகு]

பழுப்பு நிறம் கொண்ட உருண்டு திரண்டிருக்கும் நீர்ப் பறவை இது. இதன் அடிப்பாகம் பட்டுப் போல் இருக்கும். குட்டையான, கூரான அலகு உண்டு. வாலற்ற இந்தப் பறவை ஏரிகளிலும் (வேடந்தாங்கல்) குளங்களிலும் இணையாகவோ கூட்டமாகவோ காணப்படும்.முட்டையிடும் காலத்தில் தலையும் கழுத்தும், அடர்ந்த மாநிறமாக மாறும். வாயின் அடிப்பாகம் மஞ்சள் நிறமாக மாறும். குளம் குட்டை போன்ற நீர்நிலைகளில் வாழும். இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் சமவெளியிலிருந்து 2500 மீ உயரம் வரை காணப்படும்.

பண்புகள்

[தொகு]

முக்குளிப்பான் நன்றாக நீந்தவல்லது; அடிக்கடி நீரில் மூழ்கி சற்று தூரத்திற்கப்பால் எழுந்திருக்கும். சிறு குட்டைகளில் இரண்டு அல்லது மூன்றாகச் சேர்ந்து காணப்படும். பெரிய குளங்களில் ஐம்பதுக்கும் மேலாகச் சேர்ந்து திரியும். தேர்ந்த மூழ்கி. சிறு அலை கூட எழுப்பாமல் மிகவும் வேகமாக மூழ்கும் திறனுடையது. சிறு துப்பாக்கியால் இதனைச் சுடும்போது தோட்டா இதனைத் தொடும் முன் பறவை நீருக்குள் மூழ்கி மறைந்து விடும். இதனை விரட்டினாலும் தண்ணீரை விட்டு வெளியேறாமல் அங்குமிங்கும் ஓடியும், மூழ்கியும் தப்பவே பார்க்கும். குட்டையான சிறகு இருப்பினும் முக்குளிப்பான் நன்றாகப் பறக்கக்கூடியது.பொதுவாக அதிக இயக்கம் இல்லாது இருந்தாலும் தேவைப்படும் போது அதிக தூரம் பறக்கவல்லது. குளத்தில் நீர் வற்றி விட்டால் வெகு தூரத்திலுள்ள மற்றொரு குளத்திற்கு பறந்து செல்லும். மாலை வேலைகளில் தண்ணீரின் பரப்பில் ஒன்றையொன்று விரட்டிக் கொண்டு 'கிச் கிச்' என்ற ஒலி எழுப்பும்.

உணவு

[தொகு]

நீர்ப்பூச்சிகள், அவற்றின் நுண்புழுக்கள், தலைப்பிரட்டைகள், தவளைகள், நத்தைகள், சிறுமீன்கள் ஆகியவையே இதன் உணவுகள் ஆகும். மிதக்கும் தாவரங்களுக்கிடையே உள்ள இதன் உணவையும் இது விடாது கொத்தித் திண்ணும். சிறு மீன்களைச் சில சமயங்களில் நீருக்கடியில் விரட்டியும் பிடிக்கும்.

கூடும் குஞ்சுகளும்

[தொகு]
முக்குளிப்பான்களின் முட்டைகள்

முக்குளிப்பான் பறவையின் கூடு கசங்கிய புல்லாலும் செடிகளாலும், தண்ணீருக்கடியில் மூழ்கி நிற்கும் செடிகளின் மேல் கட்டப்படும். இப்பறவைகள் மூன்று முதல் ஐந்து முட்டைகள் இடும். இடும்போது வெண்மையாக இருக்கும் முட்டைகள் சில நாட்களில் அழுக்கடைந்தது போல் நிறம் மாறிவிடும். முக்குளிப்பான் இரை தேடவோ வேறு காரணங்களுக்காகவோ கூட்டை விட்டு வெளியே செல்லும்போது அழுக்குப் புற்களால் முட்டைகளை மூடிவிட்டுச் செல்லும் அதனாலேயே இதன் முட்டைகள் நிறம் மாறுகின்றன. இதன் குஞ்சுகள் வரிகளை உடைய உடலைப் பெற்றிருக்கும். அவை தாய்ப்பறவையின் முதுகில் ஏறி சவாரி செய்யும். தாய் அவற்றுடன் நீரில் மிதந்து செல்லும்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tachybaptus ruficollis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
  2. ரத்னம், க. (1998). தமிழில் பறவை பெயர்கள். சூலூர்: உலகம் வெளியீடு. p. 104.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறு_முக்குளிப்பான்&oldid=3771644" இலிருந்து மீள்விக்கப்பட்டது