சிறிய புள்ளி ஆந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாட்டின், கோயமுத்தூர் வேளாண் பல்கலைக் கழக வளாகத்தில் சிறிய புள்ளி ஆந்தை

சிறிய புள்ளி ஆந்தை அல்லது கூகை (southern spotted owlet, உயிரியல் பெயர்: Athene brama brama) என்பது புள்ளி ஆந்தையின் துணையினம் ஆகும். இது தென்னிந்தியாவில் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

மைனா அளவுள்ள அந்த ஆந்தை சுமார் 21 செ. மீ நீளம் கொண்டது. இதன் அலகு பச்சை நிறந் தோய்ந்த மஞ்சள் நிறத்திலும், விழிப்படலம் நல்ல மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இதன் காலின் மேல்வெண்மையான தூவிகள் காணப்படும். இதன் கால் அழுக்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும். சிறிய புள்ளி ஆந்தையின் உடல் வெள்ளைப் புள்ளிகளுடன் கூடிய கருஞ்சாம்பல் பழுப்பு நிறத்தில் இருக்கும். தலை வட்ட வடிவில் இருக்கும். உடலின் கீழ்ப்பகுதி வெண்மையாக பழுப்புப் பட்டைகளோடு காணப்படும். வயிற்றிலும் வாலடியிலும் பட்டைகள் தெளிவாகத் தெரியாது. ஆண் பெண் பறவைகளுக்கு இடையே பால் ஈருருமை இல்லை.[1]

பரவலும் வழிடமும்[தொகு]

சிறிய புள்ளி ஆந்தை தென்னிந்தியா முழுவதும் காணப்படுகிறது. மாந்தோப்புகள், சாலையோரங்களில் உள்ள வயதான மரங்கள், பாழடைந்த கட்டங்க்ள், கோயில்கள், கோட்டைகள் ஆகியவற்றில் வாழும். நகரங்களிலும், சிற்றூர்களிலும் மனிதர்களின் வாழ்விடத்தை அடுத்தும் விளை நிலங்களைச் சார்ந்தும் காணப்படும். இப்பறவைகள் தமிழ்நாட்டின் இராமேசுவரத்தின் முனைவரை காணப்பட்டாலும், இந்த இனம் இலங்கையில் காணப்படவில்லை.[2][3]

நடத்தை[தொகு]

சிறிய புள்ளி ஆந்தையானது ஆணும் பெண்ணுமாக மூன்று முதல் நான்கு வரையான குடும்பக் கூட்டமாக வாழும். காலை மாலை அந்தி வேளைகளில் தன் இருப்பிடத்தில் இருந்து வெளிவந்து இரை தேடும். மாலை அந்தியில் வழக்கமான ஓரிடத்தில் தந்திக் கம்பங்கள், வேலிக்கம்பங்களில் போன்றவற்றின் மீது அமர்ந்து எழுந்தெழுந்து தாவிப் பறந்து பீச்சிகளைப் பிடிக்கும். விரைவாக இறக்கை அடித்து மேலும் கீழுமாகத் ஆழ்ந்தும் எழுந்தும் பறக்கும். பகலில் ஓரளவு பார்வை தெரியும் என்றாலும் காக்கை போன்ற பிற பறவைகளின் தொந்தரவுக்கு அஞ்சி தன் இருப்பிடத்திலேயே மறைந்து இருக்கும். பகலில் இது அமர்ந்திருக்கும் இடத்தை யாராவது நெருங்கினால் வேடிக்கையான முறையில் முறைத்தும் தலையைச் சுற்றி வளைத்தும் பார்க்கும்.[1]

சிறிய புள்ளி ஆந்தையானது நண்டு, வெட்டுக்கிளி, புழு பூச்சி, ஓணான், சுண்டெலி, சிறிய பறவைகள் போன்றவற்றை பிடித்துத் திண்ணும். இது குழறுவதைப் போன்ற தொனியில் 'விட்ச்வியூ விட்ச்வியூ' என்றும் 'ச்சீர்ர்இர் ச்சீகர்இர்' என்றும் அலறும். ஒன்று அலறத் துவங்கியவுடன் மற்றவையும் சேர்ந்து அலறத் துவங்கும்.

சிறிய புள்ளி ஆந்தைகள் நவம்பர் முதல் மார்ச் வரை இனப்பெருக்கமு செய்யும். மரப் பொந்துகள், சுவர்களில் உள்ள துளைகள், தாழ்வாரங்கள் போன்ற இடங்களில் புற்களையும், தூவிகளையும் கொண்டு மெத்தென்று ஆக்கி மூன்று முதல் நான்கு வரையிலான வெள்ளை முட்டைகளை இடும். முட்டைகளை கால இடைவெளியுடன் இடும். இதனால் கடைசி கடைசியில் பொரிக்கப்படும் குஞ்சுகள் முழு வளர்ச்சியடையாமல் இருக்கும். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 268-269. 
  2. Ali, S; S D Ripley (1981). Handbook of the birds of India and Pakistan. 3 (2nd ). Oxford University Press. பக். 299–302. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-562063-1. 
  3. Baker, E. C. S. (1919). "Descriptions of subspecies of Carine brama". Bulletin B.O.C. 40: 60–61. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறிய_புள்ளி_ஆந்தை&oldid=3783873" இலிருந்து மீள்விக்கப்பட்டது