சிப் சந்திர தேவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிப் சந்திர தேவ்
பிறப்பு(1811-07-20)20 சூலை 1811
இறப்பு12 நவம்பர் 1890(1890-11-12) (அகவை 79)
தேசியம்பிரிட்டிசு இந்தியன்
பணிதுணை ஆட்சியர்

சிப் சந்திர தேப் (Sib Chandra Deb) (1811 சூலை 20 - 1890 நவம்பர் 12) இவர் முன்னணி இளம் வங்காளிகளில் ஒருவராக இருந்தார். கிட்டத்தட்ட ஆங்கிலம் அறிந்த இந்தியர்களின் முதல் தலைமுறையாவார். இவர் 1825இல் இந்து கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் இந்தியக் கவிஞரும், கொல்கத்தா இந்துக் கல்லூரியின் [1] உதவி தலைமை ஆசிரியரும் மற்றும் புரட்சிகர சிந்தனையாளருமான டெரோசியோவால் ஈர்க்கப்பட்டார். ஒரு சிறந்த மாணவர் இந்து கல்லூரியில் படிக்கும் போது உதவித்தொகையையும் பெற்றார். ஒரு மாணவராக, இவர் எப்போதாவது இராசாராம் மோகன் ராய் நிறுவிய பிரம்ம சபையின் கூட்டங்களில் கலந்து கொண்டார். இவர் உயர் கணிதத்தில் தேர்ச்சி பெற்றதால் ஆரம்பத்தில், கணக்கெடுப்புத் துறையில் சேர்ந்தார் ஆனால் பொது நிர்வாகத்திற்கு மாறி 1838 இல் துணை ஆட்சியாளராக ஆனார். ஆங்கிலேயர்கள் 1833இல் இந்தியர்களை துணை ஆட்சியாளர்களாக பணியமர்த்த அனுமதித்தனர். அரசாங்கச் சேவையில் ஆரம்பத்தில் ஆங்கிலம் அறிந்த இந்திய அதிகாரிகளில் ஒருவராக இருந்தார்.

பிரம்ம சமாஜம்[தொகு]

இவர் 1843 ஆம் ஆண்டில் தேபேந்திரநாத் தாகூரைப் போலவே பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தார். மேலும் 1850களில் அதன் முக்கிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். இவர் 1846இல் மதினிபூர் பிரம்ம சமாஜத்தையும், 1863இல் கொன்னகர் பிரம்ம சமாஜத்தையும் நிறுவினார். இந்தியாவின் பிரம்ம சமாஜம் நிறுவப்பட்ட நேரத்தில், இவர் முற்போக்குவாதிகளுடன் இருந்தார். மேலும் இயக்கத்திற்கு பல வழிகளில் உதவினார். சதாரன் பிரம்ம சமாஜம் நிறுவப்பட்ட நேரத்தில், இவரது ஆதரவு போராட்டக் கட்சியுடன் இருந்தன. சிவநாத் சாத்திரி, ஆனந்த மோகன் போஸ், உமேஷ் சந்திர தத்தா மற்றும் துர்கா மோகன் தாசு ஆகியோருடன் 1878ஆம் ஆண்டில் நிறுவப்பட்டபோது, சதாரன் பிரம்ம சமாஜத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்தார். அதன் முதன் தலைவராகவும், பின்னர் அதன் தலைவராகவும் பல ஆண்டுகளாக இருந்தார். பிரம்ம இயக்கத்தின் முறிவுக்குப் பிறகு, கொன்னகரில் உள்ள இவரது வீடு புதிய சமாஜ உறுப்பினர்களுக்கு புனித யாத்திரைக்கான இடமாக மாறியது.

சமுதாயப் பணி[தொகு]

இவர் பெண்கல்வியின் வலுவான ஆதரவாளர்களில் ஒருவராக இருந்தார். ஏனென்றால் பெண்கள் கல்வி கற்றாலொழிய சமூகம் முன்னேற முடியாது என்று இவர் உறுதியாக நம்பினார். இவர் தனது மகள்களை பெதுன் கல்லூரியில் சேர்த்தார். 1860ஆம் ஆண்டில், இவர் தனது சொந்த வீட்டில் ஒரு பெண்கள் பள்ளியைத் திறந்தார். பின்னர் அது வேறொரு சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. பெண்களின் பயன்பாட்டிற்காக சிசுபலன் (குழந்தை பராமரிப்பு) என்ற புத்தகத்தையும் எழுதினார்.

24 பர்கானாக்களில் சிறிது காலம் பணியாற்றிய இவர், கொல்கத்தாவின் சமூக வாழ்க்கையில் தீவிரமாக பங்கேற்றார். 1856 ஆம் ஆண்டில் கொன்னகர் இரயில் நிலையம் மற்றும் 1858இல் ஒரு அஞ்சல் அலுவலகம் திறப்பு உள்ளிட்ட கொன்னகரின் வளர்ச்சிக்கு இவர் கணிசமான பங்களிப்பை வழங்கினார். 1865 முதல் 1878 வரை சிறிராம்பூர் நகராட்சியின் ஆணையாளராகவும் இருந்தார். இவரது தந்தை பிரஜா கிசோர்தேவ் அரசுப் பணியில் இருந்தார்.

பிரம்ம திருமண கலக்கம்[தொகு]

சிப் சந்திர தேவின் மகன் சத்யபிரிய தேவ், 1876 ஆம் ஆண்டில், கேசப் சுந்தர் செனின் நெருங்கிய நண்பரும் பக்தருமான காளிநாத் போசின் மகள் சரத்குமாரியை மணந்தார். பிரம்ம சமாஜத்தின் சீர்திருத்த விதிகளின்படி திருமணம் குறித்து இந்தியன் மிரர் என்ற இதழில் வெளியான ஒரு அறிவிப்பால் சிக்கல் ஏற்பட்டது. இது பிராமண பூசாரிகள் முன்னிலையில்லாமலும், எந்த சாலகிராம் சிலையும் (குடும்ப தெய்வம்) அல்லது பாரம்பரிய வேள்வி அல்லது அக்னி சாட்சி இல்லாமல் ஏற்பாடு செய்யப்பட இருந்தது. பாரம்பரிய இந்து சமுதாயத்திற்கும் அமைப்புகளுக்கும் இது ஒரு சவாலாக பலர் கருதினர். திருமணத்தைப் பற்றி கணிசமான மக்களின் எதிர்ப்பும், முன்மொழியப்பட்ட திருமண சடங்குகளுக்கு எதிராக பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களும் நிகழும் வாய்ப்பும் பெருமளவில் இருந்தன. பின்னர் காவலர்களின் உதவியுடன் திருமணம் நடைபெற்றது.

சிவநாத் சாத்திரி இந்த திருமணத்தை அந்தக் காலத்தின் குறிப்பிடத்தக்க சமூக சம்பவங்களில் ஒன்றாக தனது ராம்தானு லஹிரி ஓ தட்கலின் பங்கா சமாஜ் என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். சரத்குமாரி தேவ் தனது அமர் சன்சார் என்ற புத்தகத்தில் திருமண விழா பற்றிய தெளிவான விவரங்களை வழங்கியுள்ளார்.

குறிப்புகள்[தொகு]

  1. "Derozio and the Hindu College". Archived from the original on 2009-02-04. பார்க்கப்பட்ட நாள் 2020-06-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்_சந்திர_தேவ்&oldid=3675494" இலிருந்து மீள்விக்கப்பட்டது