சிதம்பரநாதன் செட்டியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சிதம்பரநாதன் செட்டியார் (ஏப்ரல் 3,1907 - நவம்பர் 22, 1967) கும்பகோணத்தில், அமிர்தலிங்கம் - பார்வதி என்பவருக்குப் பிறந்தார்.தமிழிலும்,ஆங்கிலத்திலும் புலமை பெற்ற இத்தமிழ் அறிஞர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்து முதுகலைப் பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றவர். 1943ஆம் ஆண்டு "தமிழ்ச் செய்யுள் வரலாறு" என்ற தலைப்பில் ஆய்வு செய்து, முனைவர் பட்டத்தை முதன்முதலில் பெற்ற சிறப்புக்குரிய தமிழறிஞர் ஆவார்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

இவர் குடந்தை என்றழைக்கப்படும் கும்பகோணத்தில் "நேட்டிவ் உயர்நிலைப்பள்ளி"யில் பள்ளியிறுதி வகுப்புவரை படித்துத் தேர்ந்தார். 1928ஆம் ஆண்டில் குடந்தை அரசுக் கல்லூரியில், இளங்கலைத் தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவராக சிறந்த தேர்ச்சி பெற்று. "டாக்டர் ஜி. யு. போப் நினைவு" தங்கப் பதக்கத்தை வாங்கினார்.அருந்தமிழ்த் தொண்டின் மூலம் முத்திரை பதித்த இவரை தருமபுரம் ஆதீனம், "செந்தமிழ்க் காவலர்" எனும் சிறப்புப் பட்டம் தந்து கெளரவித்தது.

கிராமப்புற மக்களே, நம் மொழியை இயல்பாகப் பேசித் தமிழைப் பேணி, பாதுகாத்து வருகின்றனர்; நகர்ப்புறங்களில் வாழ்வோர் ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்களைக் கலந்து பேசுவதையே நாகரிகமாகக் கொண்டுள்ளனர்; இவர்களால் தமிழ் சீரழிந்து வருகிறது என்பது உண்மை, எனக் கூறியுள்ளார்.

பணிக்காலம்[தொகு]

சென்னை புதுக்கல்லூரியிலும், பாலக்காடு அரசினர் கலைக்கல்லூரியிலும் விரிவுரையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணியாற்றினார். 1948ஆம் ஆண்டில் அப்பல்கலைக்கழகத்தின் இடைக்காலத் துணைவேந்தராகவும் பொறுப்பேற்றார். துணைவேந்தராகப் பணியாற்றிய, முதல் தமிழ் பேராசிரியர் இவர் தான்.பட்டதாரிகள் தொகுதியில் இருந்து பல்கலைக்கழகச் செனட்டிற்கும், பட்டதாரி ஆசிரியர் தொகுதியில் இருந்து, அகாதெமிக் கவுன்சிலுக்கும் தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழாசிரியர் இவரே ஆகும்.

மலேசியா, சிங்கப்பூர்,இங்கிலாந்து,இசுக்கொட்லாந்து,பிரான்சு,இத்தாலி,சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளுக்குச் சென்று, தமிழின் சிறப்பை நன்கு உணர்த்தினார்.1960ஆம் ஆண்டு, உருஷிய நாட்டுத் தலைநகரம் மாஸ்கோ நகரில் நடைபெற்ற அனைத்துலக புலவர் மாநாட்டுக்கு இந்திய நாட்டின் பிரதிநிதியாகச் சென்றார்.

1961ஆம் ஆண்டில் தில்லியில் நடைபெற்ற அனைத்துலக இலக்கியப் பேரறிஞர் கருத்தரங்கில் பங்கேற்று, உலக மொழிகளில் விழுமிய தமிழிலக்கியங்களின் செறிவை உலகுக்கு உணர்த்த விரும்பி, ஆங்கிலத்தில் உரையாற்றிப் பெரும் புரட்சியை ஏற்படுத்தி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார்.1964ஆம் ஆண்டு பட்டதாரி ஆசிரியர் தொகுதியிலிருந்து கடும் போட்டிக்கிடையே சென்னை மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலவையில் இவரது உரை அனைவரும் பாராட்டும் வண்ணம் அமைந்தது. ஆசிரியர் சமுதாயத்திலுள்ள குறைபாடுகளைக் களைய இவரது செயல்பாடு பேருதவியாக இருந்தது.

எத்தனையோ கல்லூரிகளில் பணியாற்றினாலும், தம் இறுதிக்காலத்தில், மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியின் முதல்வராக 1965ஆம் ஆண்டு முதல் 1967 வரை பணியாற்றியதையே, தம் வாழ்வில் கிட்டிய பெரும்பேறாகக் கூறியுள்ளார். மிகச்சிறந்த தமிழ்ச் சான்றோர்களான,

  • வி.கல்யாணசுந்தரனார்
  • மறைமலையடிகள்
  • ஞானியாரடிகள் போன்றவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டார்.

இவர் இயற்றிய நூல்கள்[தொகு]

இவர் எழுதிய நூல்களில் பின்வருவன முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

சான்றாவணங்கள்[தொகு]

இதையும் காணவும்[தொகு]

அண்ணாமலைப் பல்கலைக்கழக அறிஞர்கள்