உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்கமும் சுண்டெலியும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிங்கமும் சுண்டெலியும் கதைக்காட்சி.

சிங்கமும் சுண்டெலியும் (The Lion and the Mouse) என்பது ஈசாப்பின் நீதிக்கதைகளுள் ஒன்றாகும். இது, பெர்ரி பொருளடக்கத்தில் 150 ஆவது கதையாக உள்ளது. கீழைநாடுகளிலும் இக்கதை, பல்வேறு விதமாக வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து கதைகளுமே உருவத்தையும் தகுதியையும் தாண்டி உயிரினங்கள் ஒன்றையொன்று சார்ந்து வாழும் கருத்தையே வலியுறுத்துகின்றன. ஆனால் ஐரோப்பின் மறுமலர்ச்சி காலத்தில் இக்கதையானது சமூகத்தகுதிக்கு மீறி ஆசைப்படுவதைக் கண்டிக்கும் விதமாக மாற்றப்பட்டது.

இலக்கியத்தில்

[தொகு]

பண்டையக் காலக்கதைப்படி, ஒரு சுண்டெலி சிங்கத்தைத் தூக்கத்திலிருந்து எழுப்பிவிட்டதால், சிங்கம் சுண்டெலியைக் கொன்றுதின்றுவிவேன் என்று மிரட்டுகிறது. சுண்டெலியோ தன்னை மன்னிக்கும்படிக் கெஞ்சுவதோடு, தன்னைப்போன்ற அற்ப இரையால் சிங்கத்துக்குப் பெருமை எதுவும் ஏற்படாது எனவும் கூறுகிறது. அதைக்கேட்ட சிங்கம், சுண்டெலியை விட்டுவிடுகிறது. சில காலத்துக்குப் பின்னர் ஒரு நாள் சிங்கமானது வேட்டைக்காரர்களின் வலையில் சிக்கிக்கொள்கிறது. சிங்கத்தின் கர்ச்சனையைக் கேட்ட சுண்டெலி முன்னொருநாள் சிங்கம் தனக்கு உயிர்பிச்சையளித்ததை நினைத்து சிங்கத்துக்கு உதவுகிறது. தனது கூரிய சிறு பற்களால் சிங்கத்தைச் சுற்றியிருந்த வலையைக் கடித்து சிங்கத்தை விடுவித்தது. நாம் ஒருவருக்குக் காட்டும் இரக்கம் பின்னொரு நாள் நமக்கு நன்மை பயக்கும் என்பதையும் சிறு உருவங்கொண்டவையும் பெரியவற்றுக்கு உதவ முடியும் என்பதையும் இக்கதை சுட்டுகிறது. இக்கதையின் பிற்கால ஆங்கில வடிவங்களும் தன்னை மன்னித்து விடுதலை செய்த சிங்கத்துக்குப் பின்னாளில் உதவுவேன் என்று சுண்டெலி வாக்களிப்பதாக அமைந்து மேற்கூறிய நீதியையே வலிவுறுத்துகின்றன.

இராபர்ட்டு ஹென்றிசன் என்ற ஸ்காட்டுலாந்துக் கவிஞர் அவரது கவிதை நூலில் (Morall Fabillis)இக்கதையைக் கூறியுள்ளார்.[1] பிரான்சிஸ் பார்லோவின் 1687 ஆம் ஆண்டுப் பதிப்பில் இக்கதை வாறொரு அரசியல் பாடத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அதில் "அப்ரா பென்" என்ற கவிஞர், இரண்டாம் சார்லசு அரசர் வொர்செஸ்டர் போரின்போது தப்புவதற்கு மறைவிடமாக ஒரு ஓக் மரம் உதவியதைச் சொல்லி, எந்தவொரு சிறு உதவியையும் அலட்சியப்படுத்திவிட முடியாது என்ற கருத்தை முன்வைக்கிறார்.[2]

16 ஆம் நூற்றாண்டின் கிளிமெண்ட் மாரட் என்ற பிரெஞ்சு கவிஞர் அவரது நண்பருக்கு எழுதிய கடிதத்தில், இக்கதையை இணைத்திருக்கிறார். இது முதன்முதலில் 1534 இல் வெளியிடப்பட்டது.[3] [4]

உருசிய எழுத்தாளர் ஐவான் கிரைலோவ்வின் கதையில் (1833) சுண்டெலி, சிங்கத்தைத் தூக்கத்தில் தொந்திரவு செய்ததாகக் கூறப்படவில்லை. மாறாக, சிங்கத்தின் இடத்தில் தனக்கு ஒரு சிறு வீடு கட்டிக்கொள்ள அனுமதி கேட்டதாகவும் அதற்குப் பலனாக தான் ஒருநாள் சிங்கத்திற்குப் பயனுள்ளவனாக இருப்பேன் என்று சுண்டெலி கூறுவதாகவும் கதையில் கூறப்பட்டுள்ளது. அந்த சின்ன வடிவ சுண்டெலி தனக்கு உதவ முடியும் என்று நம்பாத சிங்கம், சுண்டெலியைப் பார்த்து உடனே அங்கிருந்து உயிர்பிழைத்து ஓடிவிடு என்று கூறியதாகவும் ஆனால் பின்னர் சிங்கம் மாட்டிக்கொண்டபோது சுண்டெலியின் உதவியால் தப்பிய போதுதான் தான் கொண்டிருந்த தற்பெருமை தவறானது என்பதை உணர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.


எதிர்க்-கதை

[தொகு]

புதிய லத்தீன் மொழி கதையாக்குநரான லாரன்ட்டியஸ் அப்ஸ்ட்டமியஸ் என்பவர் பழைய சிங்கமும் சுண்டெலியும் கதையிலிருந்து மாறுபட்ட கதையை உருவாக்கினார். இக்கதையின்படி, சிங்கமானது தன்னை விடுவித்ததற்காகச் சுண்டெலியிடம் தேவையான பரிசைக் கேட்டுப்பெற்றுக்கொள்ளும்படிக் கூற, சுண்டெலி சிங்கத்தின் மகளைத் தனக்குத் திருமணம் செய்து தருமாறு கேட்கிறது. சிங்கமும் ஒப்புக்கொண்டு திருமணம் செய்து கொடுக்கிறது. ஆனால் திருமணமான இரவில், மணமகள் தவறுதலாக மணமகனான சுண்டெலியை மிதித்துவிடுகிறது.[5] சமூக அடுக்கில் எந்நிலையில் உள்ளவர்களையும் இழிவாகக் கருதக்கூடாதென்பதை ஈசாப்பின் கதை எடுத்துரைக்க, இக்கதையோ ஒருவர் திருமணத்தின் மூலம் தனது நிலையிலிருந்து உயர ஆசைப்படக்கூடாதென்பதை வலியுறுத்துகிறது. இதைத் தொடர்ந்து தோன்றிய பிந்தைய வடிவங்களிலும் இச்செய்தியே வலியுறுத்தப்பட்டுள்ளது.[6] ஆனால் இங்கிலாந்தின் எழுத்தாளர்கள் பிரான்சிஸ் பார்லோ (1687), ரோஜர் லெஸ்ட்ரெயிஞ்ச் (1692) ஆகிய இருவருவரும் இருவிதமான கதைகளையும் வெளியிட்டனர்.[7]

கீழைநாட்டுக் கதைகள்

[தொகு]

பொது ஊழிக்கால துவக்கத்திலேயே எகிப்திய புராணக்கதைகளில் இக்கதையும் இடம்பெற்றது.[8] மற்ற விலங்குகளைக் கொல்லும் ஒரு மனிதனைக் கொல்வதற்காக ஒரு சிங்கம் செல்லும் வழியில் அதன் காலுக்கடியில் ஒரு சுண்டெலி மாட்டிக்கொள்கிறது. அதனைச் சிங்கம் மன்னித்து விடுவித்து விடுகிறது. அதற்கு பதிலாகச் சுண்டெலி சிங்கத்திற்கு என்றாவதொருநாள் உதவுவதாக வாக்களிக்கிறது. மனிதன் விரித்த வலையில் ஒருநாள் சிங்கம் சிக்கிக்கொள்ள அச்சுண்டெலி அவ்வலையைக் கடித்து சிங்கத்தை விடுவிக்கிறது. கிரேக்க மூலக்கதையிலிருந்து இக்கதை எகிப்திய புராணக்கதைகளில் மாற்றங்களோடு இணைக்கப்பட்டுள்ளது.[9]

இக்கதையின் ஒரு இந்திய வடிவம் பஞ்சதந்திரத்தில் உள்ளது. ஆனால் அக்கதை சுண்டெலியும் யானைகளையும் கதாபாத்திரங்களாகக் கொண்டுள்ளது. இக்கதை வலியவர் அல்லது மெலிந்தவர் என்று பாராமல் எல்லோருடனும் நட்புப் பாராட்ட வேண்டும் என்ற செய்தியைக் கூறுகிறது.[10] புத்தமதத் துறவிகளால் இக்கதை இந்தியாவிலிருந்து சீனாவிற்குப் பரவியது. அங்கு சிங்கத்திற்குப் பதிலாகப் புலி இடம்பெறுகிறது.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. This is fable 8, a modernised version of which can be found on the Glasgow University website பரணிடப்பட்டது 2017-11-09 at the வந்தவழி இயந்திரம்
  2. "Facsimile edition online". Mythfolklore.net. பார்க்கப்பட்ட நாள் 2012-07-02.
  3. An analysis of the poem can be found online பரணிடப்பட்டது 2024-05-13 at the வந்தவழி இயந்திரம்
  4. "Elizur Wright's 1841 translation". Readbookonline.net. Archived from the original on 2012-04-15. பார்க்கப்பட்ட நாள் 2014-06-08.
  5. "Fable 52". Aesopus.pbworks.com. பார்க்கப்பட்ட நாள் 2012-07-02.
  6. Phryx Aesopus, 1564, fable 150
  7. "Fable 32, "The Fatal Marriage"". 1788. பார்க்கப்பட்ட நாள் 2012-07-02.
  8. Geraldine Pinch, Handbook of Egyptian Mythology, Santa Barbara CA, 2002 pp.72-3
  9. Francisco Rodríguez Adrados & Gert-Jan van Dijk, History of the Graeco-Latin fable, Vol.1, Leiden NL 1999 p.710-13
  10. "Panchatantra II.8". Epanchatantra.com. Archived from the original on 2012-04-02. பார்க்கப்பட்ட நாள் 2012-07-02.
  11. Priyadarsi Mukherji, “The Indian influence on Chinese literature”, in East Asian literatures: Japanese, Chinese and Korean : an interface with India, New Delhi 2006, p.187

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிங்கமும்_சுண்டெலியும்&oldid=4110358" இலிருந்து மீள்விக்கப்பட்டது