சலஞ்சர் ஆய்வுப் பயணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எச்.எம்.எசு சலஞ்சர் கப்பலின் படம்.

சலஞ்சர் ஆய்வுப் பயணம் என்பது பொதுவாக 1872 - 76 ஆண்டுக் காலப் பகுதியில் இடம்பெற்ற ஒரு அறிவியல் ஆய்வுக்கான கடல் பயணத்தைக் குறிக்கும். இவ்வாய்வுகளின் போதான பல கண்டுபிடிப்புக்கள் கடலியல் துறையின் தொடக்கத்துக்கான அடிப்படையாக அமைந்தது.

எடின்பரோ பல்கலைக்கழகம், மேர்ச்சிசுட்டன் காசில் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த இசுக்காட்லாந்தியரான சார்லசு வைவில் தாம்சன் (Charles Wyville Thomson) என்பவரின் ஆலோசனைப்படி இலண்டன் அரச கழகம், 1872 ஆம் ஆண்டில் அரச கடற்படையிடம் இருந்து எச்.எம்.எசு சலஞ்சர் என்னும் ஒரு கப்பலைத் தனது அறிவியல் ஆய்வுப் பயன்பாட்டுக்காகப் பெற்றது. அதில் இயற்கை வரலாறு, வேதியியல் ஆகியவற்றுக்கான ஆய்வுகூடங்களையும் அமைத்துக்கொண்டது.

இக்கப்பல் 1872 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள் இங்கிலாந்தில் உள்ள போர்ட்சுமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. தாம்சனின் அறிவியல் தொடர்பான மேற்பார்வையின் கீழ் இக் கப்பல் ஏறத்தாழ 70,000 கடல் மைல் தூரம் பயணம் செய்து அளவீடுகளை எடுத்ததுடன் ஆய்வுகளையும் நடத்தியது. இதன் ஆய்வு முடிவுகள், 1873-76 ஆம் ஆண்டில் எச்.எம்.எசு சலஞ்சரின் ஆய்வுப் பயணத்தின் போது, கிடைத்த அறிவியல் முடிவுகள் தொடர்பான அறிக்கை என்ற பெயரில் வெளியிடப்பட்டது. பிற பல கண்டுபிடிப்புக்களோடு, இது 4,000 முன்னர் அறியப்படாத உயிரினங்களைப் வகைப்படுத்தியது. இவ்வெளியீட்டை மேற்பார்வை செய்தவரான ஜான் முரே என்பார், இவ்வறிக்கையை, பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளில் இடம்பெற்ற பெரும் கண்டுபிடிப்புக்களுக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப் பெரிய அறிவு தொடர்பான முன்னேற்றம் என விளக்கினார்.

1876 மே மாதம் 24 ஆம் நாள் ஹம்ப்சயரில் உள்ள இசுப்பிட்டெட் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்த இக்கப்பல், மொத்தமாக 68,890 கடல் மைல்கள் (127,580 கிலோ மீட்டர்) தூரம் பயணம் செய்திருந்தது. இது இதன் பயணக் காலமான 1606 நாட்களில், 713 நாட்களைக் கடலில் செலவிட்டது. இது 492 ஆழ்கடல் அளவீடுகள் உட்படப் பல நூற்றுக்கணக்கான ஆய்வுகளில் ஈடுபட்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சலஞ்சர்_ஆய்வுப்_பயணம்&oldid=3366989" இலிருந்து மீள்விக்கப்பட்டது