சரசுவதி ராசாமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சரசுவதி ராசாமணி (Saraswathi Rajamani) இந்திய தேசிய இராணுவத்தின் வீரராக இருந்தார். இராணுவத்தின் இராணுவப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றியதற்காக இவர் நன்கு அறியப்பட்டவர். சமீபத்தில் யூடியூப்பில் கௌசிக் ஸ்ரீதர் என்பவர் இயக்கிய 'இந்தியனின் குரல்' என்ற குறும்படத்தில் தோன்றினார்.

குழந்தைப் பருவம்[தொகு]

இராசாமணி 1927 சனவரி 11 அன்று பர்மாவின் ரங்கூனில் பிறந்தார் (இன்றைய மியான்மரின் யங்கோன்). இவருடைய தந்தை தங்கச் சுரங்கம் வைத்திருந்தார். மேலும் ரங்கூனில் உள்ள பணக்கார இந்தியர்களில் ஒருவர். இவரது குடும்பம் இந்திய சுதந்திர இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்களாக இருந்து இயக்கத்திற்கு பொருளுதவியையும் அளித்தனர்.[1] [2]

ரங்கூனில் சுபாஷ் சந்திர போஸின் உரையால் ஈர்க்கப்பட்ட இவர் தனது 16 வயதில், தனது அனைத்து நகைகளையும் இந்திய தேசிய இராணுவத்துக்கு வழங்கினார். இந்த இளம்பெண் நகைகளை அப்பாவியாக வழங்கியிருக்கலாம் என்பதை உணர்ந்த நேதாஜி, அதைத் திருப்பித் தருவதற்காக இவரது வீட்டிற்குச் சென்றார். இருப்பினும், நகைகளை இராணுவத்திற்குப் பயன்படுத்துவதில் இராசாமணி உறுதியாக இருந்தார். இவரது உறுதியால் ஈர்க்கப்பட்ட போஸ் இவருக்கு "சரசுவதி" என்று பெயர் சூட்டினார்.[2]

இந்திய தேசிய இராணுவத்தில் வேலை[தொகு]

1942ஆம் ஆண்டில், இராசாமணி இந்திய தேசிய இராணுவத்தின் ஜான்சி ராணி படைப்பிரிவிற்கு பணியமர்த்தப்பட்டார். மேலும், இராணுவத்தின் இராணுவ புலனாய்வு பிரிவின் ஒரு பகுதியாக இருந்தார்.[3]

ஏறக்குறைய இரண்டு வருடங்கள், இவரும் இவருடைய சில பெண் சகாக்களும் சிறுவர்களாக வேடமிட்டு உளவுத் தகவல்களைச் சேகரித்தனர். ஒரு சிறுவனாக தனது பெயரை மணி என மாற்றிக் கொண்டார். ஒருமுறை, இவருடைய சக ஊழியர் ஒருவர் பிரித்தானியத் துருப்புக்களால் பிடிபட்டார். அவளைக் காப்பாற்ற, இவர் ஒரு நடனக் கலைஞரின் உடையணிந்து பிரித்தானிய முகாமில் ஊடுருவினார். பிரித்தானிய அதிகாரிகளுக்கு போதை மருந்து கொடுத்து தனது சகாவை விடுவித்தார். இவர்கள் தப்பித்துக் ஓடும்போது ஒரு பிரித்தானிய காவலரால் காலில் சுடப்பட்டார். ஆனாலும் அவர்களிடமிருந்து தப்பிக்க முடிந்தது.[2]

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நேதாஜி இந்திய தேசிய இராணுவத்தை கலைத்தபோது இராணுவத்தில் இவரது பணி முடிந்தது.[2]

பின் வரும் வருடங்கள்[தொகு]

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இராசாமணியின் குடும்பத்தினர் தங்கச் சுரங்கம் உட்பட அனைத்து செல்வங்களையும் அங்கேயே விட்டுவிட்டு இந்தியா திரும்பினர்.[2] 2005ஆம் ஆண்டில், ஒரு செய்தித்தாள் இவர் சென்னையில் வசிப்பதாகவும், சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் பெற்று வந்தாலும், இவர் வாழ்வதற்கு சிரமப்படுவதாகவும் செய்தி வெளியிட்டது. இவர் உதவிக்காக தமிழ்நாடு அரசிடம் முறையிட்டார். பின்னர் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா 5 இலட்சம் பரிசுத் தொகையும் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் ஒரு இலவச வீடு ஒன்றையும் வழங்கி உதவினார்.

ஒடிசாவின் கட்டாக்கில் நேதாஜி சுபாஷ் போஸ் பிறந்த இட தேசிய அருங்காட்சியகத்தின் இந்திய தேசிய இராணுவக் கலைக்கூடத்துக்கு இவர் தனது சின்னங்களை வழங்கியுள்ளார்.[4]

2016 ஆம் ஆண்டில், எபிக் தொலைக்காட்சியில் அத்ரிசியா என்ற தொலைக்காட்சி தொடரில் இவரது கதை ஒளிபரப்பப்பட்டது.[5]

இறப்பு[தொகு]

சுதந்திரப் போராளி திருமதி. சரசுவதி ராசாமணி சனவரி 13, 2018 அன்று மாரடைப்பால் இறந்தார். இவரது இறுதிச் சடங்குகள் சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் காலனியில் நடைபெற்றது.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரசுவதி_ராசாமணி&oldid=3822838" இருந்து மீள்விக்கப்பட்டது