சரக சம்ஹிதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சரக சம்ஹிதை என்பது ஒரு மருத்துவ நூலாகும்[1][2] . சரகரின் குரு அக்னிவேஷர் இயற்றிய மருத்துவ நூலைத் தொகுத்து உருவாக்கப்பட்டதே சரக சம்ஹிதை. சரகர் முடிக்காத பகுதிகளை த்ருடபலா பூரணம் செய்தார் என்று சம்ஹிதையின் சில அத்தியாயங்களின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக, வெவ்வேறு காலகட்டத்தை சேர்ந்த அக்னிவேஷர், சரகர், த்ருடபலர் என மூவர் சரக சம்ஹிதையின் உருவாக்கத்தில் பங்களிப்பாற்றியுள்ளார்கள் என வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

நூலைப்பற்றி[தொகு]

சரகர் எனும் சொல் சர எனும் சம்ஸ்க்ருத வேர்சொல்லில் இருந்து உருவானது, சர என்றால் அலைந்து திரிந்தல் (சரியான சொல் நடமாட்டம், வழிதல் ) எனப் பொருள் கொள்ளலாம், நாடெங்கும் தேசாந்திரியாக அலைந்து திரிந்ததால் அமைந்த காரணப்பெயர்தான் சரகர். எட்டு பிரிவுகளில் 120 அத்தியாயங்களை உள்ளடக்கியது இந்த நூல். மருத்துவ நூல் என்று குறுக்கிவிட முடியாத அளவிற்கு தன்னளவில் விரிவானது, பிரபஞ்சம் உருவாவதில் தொடங்கி, கரு உருவாதல், மாதாமாதம் அது கொள்ளும் வளர்ச்சிகள் மற்றும் மாற்றங்களை பற்றி, நோய்மையை பற்றி, நோய் தீர்க்கும் வழிமுறைகளைப் பற்றி, பிணி அண்டாதிருக்கும் வழிமுறைகளைப் பற்றி, மரண குறிகளை பற்றி, அன்றாட செயல்விதிகளை பற்றி, உணவு பழக்கங்களை பற்றி, உணவின் குணம் பற்றி, மண் பற்றி, இயற்கையைப் பற்றி, கால சுழற்சி பற்றி என வாழ்க்கையின் அனேக துறைகளை உள்ளடக்கியது இந்நூல். இந்த எட்டு பிரிவுகளில் சிகிச்சை பிரிவு சரகரின் சிறப்பு என்று பிற்காலத்தில் வந்த பல உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

வரலாற்றாய்வாளர்களின் கருத்து[தொகு]

சரகரின் காலகட்டம் சார்ந்து பல குழப்பங்கள் இன்றும் நீடிக்கிறது. ஆயுர்வேதத்தின் முப்பெரும் நூல்கள் என்று சரக சம்ஹிதை, சுசுருத சம்ஹிதை மற்றும் வாக்பட்டரின் அஷ்டாங்க ஹ்ருதயத்தை குறிப்பிடுவார்கள். இதில் அஷ்டாங்க ஹ்ருதயம் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பது ஓரளவிற்கு நிறுவப்பட்டுள்ளது, இன்று கிடைக்கும் சரக சம்ஹிதை சுசுருதரின் காலத்திற்கு பின்னர் திருடபலரால் தொகுக்கப்பட்டது கி.பி இரண்டாம் நூற்றாண்டிலிருந்து நான்காம் நூற்றாண்டிற்குள் உள்ள காலகட்டத்தைச் சேர்ந்தது இந்நூல் என்று நம்பப்படுகிறது. சரகரின் சம்ஹிதையும், அதன் மூலமான அக்னிவேஷரின் சம்ஹிதையும் பௌத்த காலகட்டத்திற்கு முன்பானவையாக இருக்கலாம் என்று வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Meulenbeld, G. J. A History of Indian Medical Literature (Groningen, 1999-2002), vol. IA, pp. 7-180.
  2. Valiathan, M. S. (2003) The Legacy of Caraka Orient Longman ISBN 81-250-2505-7 reviewed in Current Science, Vol.85 No.7 Oct 2003, Indian Academy of Sciences seen at [1] June 1, 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரக_சம்ஹிதை&oldid=2696838" இருந்து மீள்விக்கப்பட்டது