சம்மக்கா சாரக்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சம்மக்கா சாரக்கா என்பது ஆந்திராவின் தெலுங்கானாபிரதேசத்தில் பழங்குடியின பெண்களைக் காட்டுத் தெய்வங்களாகக் கருதி நடாத்தப்படும் காட்டுத் திருவிழா ஆகும். இது இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். சம்மக்கா சாரக்கா யாத்திரா எனவும் இது அழைக்கப்படும்.

ஐதீகக் கதை[தொகு]

ஆந்திராவின் மேடாரம் பகுதியில் வசித்த பழங்குடி மக்களிடம் காக்கத்தியா மன்னன் வரி கேட்டுத் துன்புறுத்தி வந்துள்ளான். வறட்சிக் காலமாகையால் மக்கள் வரிசெலுத்த முடியாது தமது பழங்குடியினத் தலைவனிடம் முறையிட்டுள்ளனர். தம் தலைவனின் ஆலோசனைப் படி வரி செலுத்துவதில்லை என முடிவு செய்தனர். மன்னனின் படையினர் மக்கள் மீது தாக்குதல் நடத்தின. இக்கடும் போரில் இருப்பக்கமும் இறப்புகள் நிகழ்ந்தன. பழங்குடியினத் தலைவனும் இறந்தான். தலைவனின் மகன் ஐம்பன்னாவும் போரில் ஈடுகொடுக்கமுடியாமல் ஏரியில் மூழ்கி இறந்தான். இதன் பின் தலைவரின் மனைவி சம்மக்காவும் அவரது மகள் சாரலம்மா எனப்படும் சாரக்காவும் போரைத் தொடர்ந்தனர்.இவர்களின் பலம் குறையவே காட்டுக்குள் சென்றுவிட்டனர். காட்டுக்குள் சென்றவர்கள் திரும்பி வரவே இல்லை. பல ஆண்டுகள் சென்ற பிறகு பழங்குடியினப் பெண்கள் காட்டுக்குள் சென்ற பொழுது அங்குள்ள மரம் மற்றும் புற்றுக்கு அருகில் குங்குமம் சிதறிக் கிடந்ததை அவதானித்தனர். இன்னும் சம்மக்கா சாரக்கா வனதேவதைகளாக வாழ்வதாகக் கருதிய பழங்குடியினரின் நம்பிக்கை விழாவாகக் கொண்டாடப்படுகின்றது.[1]

கொண்டாடப்படும் முறை[தொகு]

இப்பயணம் வாரங்கல் மாவட்டத்தின் தத்வை மந்தலில் இருக்கின்ற மேடாரம் வனப்பகுதியில் இருந்து ஆரம்பமாகும். [2]. நான்கு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பெருந்தொகையான பக்தர்கள் கலந்துகொள்வர். இவ்விழாவின் போது கோவில் வளாகத்திலுள்ள மரங்களுக்கு எடைக்கு எடை வெல்லத்தை வீசி எறிந்தால் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.[1]

ஆதாரம்[தொகு]

  1. 1.0 1.1 வீரகேசரி, தமிழ் நாளிதழ்,இலங்கை, 09.02.2012 பக்.21
  2. http://www.hindu.com/2008/02/21/stories/2008022154400400.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்மக்கா_சாரக்கா&oldid=2064462" இருந்து மீள்விக்கப்பட்டது