சங்கர நேத்ராலயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கர நேத்ராலயா
வகை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்
கண்களுக்கான சிறப்பு மருத்துவமனை

சங்கர நேத்ராலயா (Sankara Nethralaya) இந்திய நாட்டின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள சென்னை மாநகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் கண் மருத்துவமனையாகும். இலாபம் ஈட்டா பொதுசேவை செய்யும் தொண்டு நிறுவனமாக இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கண் மருத்துவத்துறையில் கவனம் செலுத்தும் இந்த நிறுவனத்தின் முதலாவது பெயர் சங்கரா என்பதாகும். காஞ்சி காமகோடி பீடத்தை சார்ந்த ஆதிசங்கராச்சாரியார் பெயரையும் "கண்களுக்கான ஆலயம்" என்ற பொருளில் நேத்ராலயா என்பதையும் இணைத்து சங்கர நேத்ராலயா என்ற பெயர் உருவாக்கப்பட்டது. இந்தியா முழுவதிலுமிருந்தும், அனைத்துலக அளவிலும் பல கண் நோயாளிகளுக்கு இம்மருத்துவமனை சிகிச்சை அளித்து வருகிறது. சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஒரு நாளைக்கு 1200 நோயாளிகளுக்கு சிகிச்சையும் தினம் நூறு கண் அறுவை சிகிச்சைகளும் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. மருத்துவமனையின் ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 100 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

1976 ஆம் ஆண்டு காஞ்சி காமகோடி பீடத்தின் அப்போதைய மடாதிபதியாக இருந்த சிறீசெயேந்திர சரசுவதி சுவாமி மருத்துவர்களுக்கான உள்ளரங்கு கூட்டம் ஓன்றில் பேசும்போது தமிழ்நாட்டில் பல்வேறு மருத்துவ சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதைப் பற்றி குறிப்பிட்டு பேசினார். அதை கருத்தில் கொண்ட மருத்துவர் செங்கமேடு சிறீனிவாச பத்ரிநாத் தன்னைப் போன்று தொண்டுள்ளம் கொண்ட மருத்துவர்கள் சிலருடன் இணைந்து கண் மருத்துவத்திற்கான ஒரு பொதுச் சேவை நிறுவனத்தை துவங்கினார். இந்த மருத்துவ நிறுவனத்தின் துவக்க நிகழ்ச்சி விசயா மருத்துவமனையில் மருத்துவர் அகர்வால் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

1978 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆறாம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று கண்களுக்கான கோவில் என்று பொருள்படும் வகையில் இந்த மருத்துவமனை சங்கர நேத்ராலயா என்ற பெயரில் இயங்கத் தொடங்கியது.

ஆரம்பித்த நாள் முதல் கண் மருத்துவ சிகிச்சையில் வெற்றிகரமாக பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறது. தற்போது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் ஐந்து இடங்களிலும், கொல்கத்தா நகரத்திலும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் திருப்பதி நகரத்திலும் சங்கர நேத்ராலயா மருத்துவமனை கிளைகளுடன் செயல்படுகிறது. இதன் மூலம் இலட்சக்கணக்கான இந்திய மற்றும் வெளிநாட்டு மக்களின் கண் மருத்துவச் சிகிச்சைக்கான தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

மருத்துவ சேவை அளிப்பது மட்டுமல்லாது பல்வேறு கண் மருத்துவ பிரிவுகளில் பாடங்களையும் கற்பித்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் போன்றவர்களையும் இந்நிறுவனத்தின் மூலம் சங்கர நேத்ராலயா கல்வி நிறுவனம் உருவாக்கி வருகிறது. இருவிழிப்பார்வை, பார்வை நோய்நீக்கல், விழியுள் வில்லை, குறைவுப் பார்வை போன்ற கண் தொடர்பான பாடங்களின் அனைத்து பிரிவுகளும் இங்கு கற்றுக் கொடுக்கப்பட்டு வருன்றன. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இந்த கல்வி நிறுவனம் கண் மருத்துவ பிரிவில் இளம் அறிவியல் மற்றும் முதுநிலை அறிவியல் படிப்புகளை நடத்திவருகிறது. மேலும் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள சாசுத்திரா பல்கலைக்கழகத்திலும் இந்நிறுவனத்தின் சார்பில் கண் மருத்துவ படிப்புகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்[தொகு]

சங்கர நேத்ராலயா மருத்துவமனை கண் மருத்துவ சேவைக்காக பல்வேறு விருதுகளையும் அங்கீகாரங்களையும் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் பெற்றுள்ளது.

2007 ஆம் ஆண்டு சங்கர நேத்ராலயா எகனாமிக் டைம்சு குழுமத்தால் வழங்கப்பட்ட பெருநிறுவன குடிமக்கள் விருதை இதன் சிறப்பான நிர்வாக நடவடிக்கைக்காக பெற்றது.[1]

இந்திய வாராந்திர நாளிதழான அவுட்லுக் 2002 ஆம் ஆண்டு நடத்திய கருத்துக்கணிப்பில் இந்தியாவின் சிறந்த கண் மருத்துவமனையாக சங்கர நேத்ராலயா மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டது.

இதுமட்டுமல்லாது 2005 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் தி வீக் பத்திரிக்கை நடத்திய கருத்துக் கணிப்பிலும் இந்திய அளவில் சிறந்த கண் மருத்துவமனையாக இம்மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டது.

2008 ஆம் ஆண்டு நாசுகாம் என்ற மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கம் சங்கர நேத்ராலயா மருத்துவமனையை சுகாதார நிறுவனங்களில் தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதில் முதன்மையான நிறுவனமாக தேர்ந்தெடுத்து விருது வழங்கி சிறப்பித்தது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர_நேத்ராலயா&oldid=3736684" இலிருந்து மீள்விக்கப்பட்டது