சகத்திறனாய்வுக்கு யார் பயப்படுகிறார்கள்?

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெத்தாரியா வுல்பினா (Letharia vulpina) என்ற இந்த கற்பாசி புற்றுநோயைக் குறைக்கும் மூலக்கூறுகளைக் கொண்டுள்ளதாக ஒரு போலியான ஆய்வறிக்கையில் கூறப்பட்டது.[1]

சகத்திறனாய்வுக்கு யார் பயப்படுகிறார்கள்? (Who's Afraid of Peer Review?) என்பது சயின்சு ஆய்விதழில் ஜான் பொஃகன்னன் (John Bohannon) என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையின் தலைப்பு ஆகும். இதில் திறந்த அணுக்க ஆய்விதழ்களில் கட்டணம் வசூலித்துப் பதிப்பிக்கும் (fee-charging open access journals) சகத்திறனாய்வினைக் குறித்த அவரது ஆய்வுகளை விளக்கியுள்ளார். 2013இன் சனவரியிலிருந்து ஆகஸ்ட் வரை பொஃகன்னன், 304 கட்டணம் வசூலிக்கும் ஆய்விதழ்களுக்குப் பொய்யான ஆய்வுக் கட்டுரை ஒன்றை அனுப்பி வைத்தார். அவ்வாய்வுக் கட்டுரை மிகவும் கடுமையான, கண்கூடான அறிவியல் குறைபாடுள் மிகுந்து இருக்குமாறும், உடனடியாகத் தொகுப்பாளர்களாலும் (editors) சகத்திறனாய்வாளர்களாலும் (peer reviewers) நிராகரிக்கப்படுமாறும் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அவற்றுள் 60% ஆய்விதழ்கள் அக்கட்டுரையை ஏற்றுக் கொண்டன. அக்கட்டுரையும் அதனோடு தொடர்புடைய அனைத்துத் தரவுகளும் "சயின்சு" இதழில் அக்டோபர் 4, 2013 அன்று வெளியிடப்பட்டன. மேலும், பொது அணுக்கமாகவும் திறந்து விடப்பட்டன.[2][3]

பின்னணி[தொகு]

முதன்முதலில் கட்டணம் வசூலிக்கும் அறிவியல் ஆய்விதழ்கள் 2000இல் வரத் தொடங்கின. இது பயோமெட் சென்ட்ரல் ஆய்விதழிலும் அடுத்து பப்ளிக் லைப்ரரி ஆஃப் சயின்ஸ் என்ற ஆய்விதழிலிருந்தும் தொடங்கியது. ஆய்விதழ்களைப் படிக்கும் பயனர்களிடமிருந்து சந்தாத் தொகை வசூல் செய்வதை மட்டும் நம்பியிராமல், இந்தக் கட்டணம் வசூலிக்கும் திறந்த அணுக்க ஆய்விதழ்கள் தங்களது செலவுகளுக்காக ஆய்வுக் கட்டுரை ஆசிரியர்களிடமிருந்தும் வசூலிக்கத் தொடங்கின. ஆய்விதழில் பின்னர் பதிப்பிக்கப்பட்ட கட்டுரைகள் இணையத்தில் தொடர்ந்து பல காலங்களுக்கு இருக்கும் (perpetuity). இந்த மாதிரி, தங்கத் திறவு அணுக்கம், திறந்த அணுக்க பதிப்பித்தல் வளங்குன்றாமலிருக்க ஏற்படுத்தப்பட்ட ஒன்றாகும்.[4] திறந்த அணுக்க ஆய்விதழ்களில் பதிப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கை உடனடியாக உயர்ந்தது. இந்த எண்ணிக்கை 2011இல் சந்தா கட்டிப் படிக்கும் ஆய்விதழ்களையும் மிஞ்சியது.[5]

இந்தச் சந்தையில் நுழைவதற்குக் குறைவான தடையே இருந்ததனாலும், முதலீட்டில் மிக வேகமான, மிக அதிகமான ஈட்டம் (Return on investment) இருந்ததாலும், வேட்டைக்காரத்தனமான பதிப்பிப்பாளர்கள் மிகவும் குறை தரம் கொண்ட ஆய்விதழ்களை உருவாக்கினர். அவற்றில் பொதுவாகக் குறைவான சகத்திறனாய்வோ அது இன்றியோ அல்லது தொகுப்பாளர் (editor) கட்டுப்பாடு இன்றி இருந்தது. மேலும், கட்டுரை ஆசிரியர்களிடமிருந்து பதிப்பித்தல் கட்டணம் என்று பணமும் வசூலிக்கப்பட்டது. அறிவியலாளர்களின் பெயர்களை தொகுப்பாளர்களாகவும் சக-ஆய்வாளர்களாகவும் அவர்களது ஒப்புதலின்றி இட்டுக் கொண்டன. மேலும் பதிப்பிப்பாளர்களின் உண்மையான இடத்தையும் அடையாளத்தையும் மறைத்துக் கொண்டனர்.[6] இவ்வாறான போலி பதிப்பாளர்களால் ஏற்படும்பாதிப்புகளைக் களைவதில் அறிவியல் சமூகம் என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற விடயங்கள் சூடான விவாதப் பொருளாயின.[7]

முறைகள்[தொகு]

போலி ஆய்வுக் கட்டுரைகள்[தொகு]

பொஃகன்னன் பைத்தான் நிரலாக்க மொழியைப் பயன்படுத்தி "மேட் லிப்சின் அறிவியல் பதிப்பை" உருவாக்கினார்.[2][8] அந்த ஆய்வுக் கட்டுரையின் வார்ப்புரு (template) "புற்றுநோய் செல் Z-இன் வளர்ச்சியைக் கற்பாசி இனமான Y-இலிருக்கும் X என்ற மூலக்கூறு தடுக்கிறது" என்றவாறு இருந்தது. அவர் மூலக்கூறுகள், கற்பாசிகள், புற்றுசெல்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு தரவுத்தளத்தை உருவாக்கி முறையே அதிலிருக்கும் தரவுகளைக் கொண்டு முறையே X, Y, Z ஆகியவற்றைப் பதிலீடு செய்தார். ஆயினும் பிற தரவுகளும் முடிவுகளும் அனைத்து ஆய்வறிக்கைகளிலுமே ஒரே மாதிரியாகவே இருந்தன. ஆய்வறிக்கை ஆசிரியர்களும் அவர்களது தகுதிகளும் (affiliation) தனித்தன்மையனதாகவும் போலியானதாகவும் இருந்தன. பெரும்பாலும் அவை வளரும் ஆப்பிரிக்க நாடுகளைச் சார்ந்ததாக உருவாக்கப்பட்டன. அப்போதுதான் சக ஆய்வு செய்பவரால் எளிதில் தேடி கண்டுபிடிக்க முடியாததாகவும் கண்டுபிடிக்க விழையாததாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக அவ்வாறு செய்யப்பட்டன. அந்த அனைத்து ஆய்வறிக்கைகளுமே ஒரு கற்பாசியிலிருந்து புதியதொரு புற்றுநோய் மருந்து பிரித்தெடுக்கப்பட்டதாக விளக்கின. ஆனால், தரப்பட்டிருந்த தரவுகள் எதுவும் அவ்வாறானதொரு முடிவினைத் தரவில்லை.[9][10]

மேற்கோள்கள்[தொகு]

  1. Paper 1 in the data supplement for Bohannon 2013.
  2. 2.0 2.1 Bohannon, John (2013). "Who's Afraid of Peer Review?". Science 342 (6154): 60–65. doi:10.1126/science.342.6154.60. பப்மெட்:24092725. http://www.sciencemag.org/content/342/6154/60.full. பார்த்த நாள்: 20 October 2013. 
  3. Bohannon, John (2013). "Who's Afraid of Peer Review: Data and Documents". Science 342 (6154): 60–5. doi:10.1126/science.342.6154.60. பப்மெட்:24092725. http://www.sciencemag.org/content/342/6154/60/suppl/DC1. 
  4. Suber, Peter. "Open Access Overview". Earlham College. பார்க்கப்பட்ட நாள் 21 October 2013.
  5. Van Noorden, Richard (20 August 2013). "Half of 2011 papers now free to read". Nature 500 (7463): 386–387. doi:10.1038/500386a. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. பப்மெட்:23969438. http://www.nature.com/news/half-of-2011-papers-now-free-to-read-1.13577. 
  6. Knox, Richard (3 October 2013). "Some Online Journals Will Publish Fake Science, For A Fee". NPR. http://www.npr.org/blogs/health/2013/10/03/228859954/some-online-journals-will-publish-fake-science-for-a-fee. பார்த்த நாள்: 20 October 2013. 
  7. Butler, Declan (27 March 2013). "Investigating journals: The dark side of publishing". Nature 495 (7442): 433–435. doi:10.1038/495433a. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. பப்மெட்:23538810. http://www.nature.com/news/investigating-journals-the-dark-side-of-publishing-1.12666. 
  8. Koebler, Jason. "Inside Science Magazine's 'Sting' of Open Access Journals". Motherboard. Archived from the original on 23 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 22 October 2013.
  9. "Science's Sokal moment". The Economist. 5 October 2013. http://www.economist.com/news/science-and-technology/21587197-it-seems-dangerously-easy-get-scientific-nonsense-published-sciences-sokal. பார்த்த நாள்: 20 October 2013. 
  10. Vergano, Dan (3 October 2013). "Fake Cancer Study Spotlights Bogus Science Journals". National Geographic. http://news.nationalgeographic.com/news/2013/10/131003-bohannon-science-spoof-open-access-peer-review-cancer/. பார்த்த நாள்: 22 October 2013. 

புற இணைப்புகள்[தொகு]