கோவெலமுடி பாப்பையா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோவெலமுடி பாப்பையா (Kovelamudi Bapayya) ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர்.[1] இவர், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் சுமார் 80 படங்களை இயக்கியுள்ளார். பாப்பையா பிரபல இயக்குனர் கோ. ராகவேந்திர ராவின் உறவினரும் மற்றும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கோ. சூ. பிரகாஷ் ராவின் மருமகனும் ஆவார்.

ஆரம்பகால வாழ்க்கை.[தொகு]

ஐதராபாத்தில் பிறந்த பாப்பையா தனது இளம் வயதிலேயே தனது பெற்றோர்களை இழந்தார். பிரபல திரைப்படத் தயாரிப்பாளரான தனது தந்தைவழி மாமா கோ. சூ. பிரகாஷ் ராவ்என்பவரால் இவர் வளர்க்கப்பட்டார். இவருக்கு பத்மா மற்றும் சாமுண்டீசுவரி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். [2] பாப்பையா விசயவாடா மற்றும் சென்னையில் படித்தார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

பிரபல இயக்குநர் கே. பி. திலக் என்பவரின் கீழ் முத்து பிட்டா (1956), எம். எல். ஏ. (1957), அட்டா ஒகிண்டி கோடலே (1958) போன்றத் திரைப்படங்களில் உதவியாளராக பணியாற்றி தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் சுரேஷ் புரொடக்சன் சார்பில் 1964 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட முதல் படமான ராமுடு பீமுடு படத்தில் தப்பி சாணக்கியாவுடன் பணியாற்றினார். இந்தப் படம் பின்னர், தமிழில் 1965ஆம் ஆண்டு எம். ஜி. ஆர், நம்பியார், சரோஜா தேவி, கே. ஏ. தங்கவேலு , நாகேஷ் ஆகியோரின் நடிப்பில் எங்க வீட்டுப் பிள்ளை என்ற பெயரில் வெளிவந்தது.

1970 ஆம் ஆண்டில் துரோகி என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்குத் திரைப்படத்துறையில் பாப்பையா அறிமுகமானார். தயாரிப்பாளர் டி. ராம நாயுடு இந்த படத்தை இயக்க இவருக்கு வாய்ப்பு வழங்கினார். இத்திரைப்படத்தில் வாணிஸ்ரீ மற்றும் ஜக்கையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். 1975 இல் சொக்காடு என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் பாப்பையா பெயரையும் புகழையும் சம்பாதித்தார். இது 19 டிசம்பர் 1975 அன்று வெள்ளித்திரைக்கு வந்து மீண்டும் 1 ஜனவரி 1976 அன்று வெளியிடப்பட்டது. இதில் சோபன் பாபு, ஜெயசித்ரா மற்றும் ஜெயசுதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் இரண்டு பிலிம்பேர் விருதுகளை வென்றது. அப்போதைய ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசத்திலிருந்த 17 திரையரங்குகளில் இந்தப் படம் நூறு நாட்கள் ஓடியது.

பாலிவுட்[தொகு]

பாப்பையா இந்தித் திரைப்படமான தில்தார் (1977) மூலம் பாலிவுட் திரைப்படத் துறையில் அறிமுகமானார். இது பாப்பையாவின் சொக்காடு படத்தின் மறு ஆக்கம் ஆகும். இது 1977 ஏப்ரல் 13 அன்று வெளியானது. இதில் ஜிதேந்திரா, ரேகா மற்றும் நஸ்னீன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 1990களின் நடுப்பகுதி வரை பாப்பையா திரைப்படத் துறையில் தீவிரமாக இருந்தார். தனது தொழில் வாழ்க்கையின் முடிவில், பாப்பையா பாலிவுட் திரைப்படங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கினார். 1991 இல் வெளியான பியார் ஹுவா சோரி இவரது மாபெரும் வெற்றிகளில் ஒன்று. இந்த காதல் படம் ஜூன் 7,1991 அன்று திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, கௌதமி, ஷிகா ஸ்வரூப், ஷாஃபி இனம்தாரி, சக்தி கபூர் மற்றும் அனுபம் கெர் ஆகியோர் நடித்திருந்தனர். இது கௌதமிக்கு இந்திப் படத்திலும், மலையாளப் படமான சித்திரத்தின் மறு ஆக்கத்திலும் அறிமுகமாக இருந்தது.

சங்கி பாண்டேவின் தனி வெற்றிப் படமாகவும், பாலிவுட் திரைப்படத் துறையில் தென்னிந்திய நடிகை மீனா அறிமுகமானதாகவும் நினைவுகூரப்படும் பர்தா ஹை பர்தா (1992) படத்தையும் இவர் இயக்கியுள்ளார். இந்த படம் 1992 ஜூலை 10 அன்று திரைக்கு வந்தது.

பாப்பையா நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஜித்தேந்திரா ஆகியோருடன் இணைந்து பல படங்களை இயக்கியுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Stars : Star Interviews : Interview with director K. Bapaiah". Telugucinema.com. January 7, 2009. Archived from the original on March 2, 2009. பார்க்கப்பட்ட நாள் 2012-10-31.
  2. "Tollywood Director Kovelamudi Bapaiah Biography, News, Photos, Videos". nettv4u (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-09.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவெலமுடி_பாப்பையா&oldid=3914003" இலிருந்து மீள்விக்கப்பட்டது