உள்ளடக்கத்துக்குச் செல்

கோள் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு கோள் தொகுதியைக் குறித்த ஓவியர் புனைவு

கோள் தொகுதி அல்லது கோட்டொகுதி (planetary system) ஈர்ப்பு விசையால் பிணையப்பட்டுள்ள விண்மீன்கள் அல்லாத பருப்பொருட்களின் தொகுதி ஆகும்; இவை விண்மீன் அல்லது விண்மீன் தொகுதி ஒன்றைச் சுற்றும் சுற்றுப்பாதையிலோ அல்லது அதற்கு வெளியிலோ இருக்கலாம். பொதுவாக ஒன்று அல்லது மேற்பட்ட கோள்கள் கோள் தொகுதியைக் குறிக்கும். இவை கோள் தொகுதி என குறிப்பிடப்பட்டாலும் இவற்றில் குறுங்கோள்கள், சிறுகோள்கள், இயற்கைத் துணைக்கோள்கள், எரிவெள்ளிகள், வால்வெள்ளிகள், கோளியப் பாறைகள்[1][2] விண்மீன்சூழ் வட்டுக்கள் போன்ற பருப்பொருட்களையும் உள்ளடக்கியதாகும். ஞாயிறும் புவி உள்ளிட்ட பிற கோள்களும் இணைந்து ஞாயிறுக் குடும்பம் எனப்படுகின்றது.[3][4] சில நேரங்களில் மற்ற கோட்டொகுதிகள் புறவெளிக் கோட்டொகுதி (exoplanetary system) எனக் குறிப்பிடப்படுகின்றன.

மே 1, 2018 நிலவரப்படி 3,767 உறுதி செய்யப்பட்ட கோள்கள் 2,816 தொகுதிகளில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளன; இவற்றில் 628 தொகுதிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட கோள்கள் உள்ளன.[5]

சிதைக்கூள வட்டுக்களும் பொதுவாக தொகுதியின் அங்கமாக இருக்கும். இருப்பினும் மீச்சிறிய பருப்பொருட்களை கவனித்து வருவது கடினமாகும்.

வானுயிரியலில் இக்கோட்டொகுதிகளில் உள்ள உயிரினங்களின் வாழ்தகமைக் கோள்கள் குறித்த ஆர்வம் குறிப்பானதாக உள்ளது; புவியைப் போல மேற்பரப்பில் நீர்ம நீர் உள்ள கோள்களுக்கானத் தேடல் தொடர்கிறது.

வரலாறு[தொகு]

ஞாயிற்றுமையக் கருதுகோள்[தொகு]

வரலாற்றில், ஞாயிற்றுமையக் கருதுகோள் (அண்டத்தின் மையமாக ஞாயிறைக் கருதும் கருத்து) எதிராக புவிமையக் கருதுகோள் (புவியை மையமாகக் கொண்ட கருத்து) இருந்து வந்துள்ளது.

ஞாயிறை மையமாகக் கொண்ட ஞாயிற்றுமைய சூரியக் குடும்பத்தைக் குறித்து தொன்மை இந்தியாவின் வேத இலக்கியத்தில் முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது. நவகோள்கள் வழிபாட்டிலும் சூரியன் நடுவில் அமைக்கப்பட்டு வழிபடப்படுகிறார். ஆரிய பட்டரின் ஆர்யபட்டியத்தில் ஞாயிற்றுமையக் கருதுகோள் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிலர் புரிந்து கொண்டுள்ளனர்.

மேற்கு, கிரேக்க வானியலில் இக்கருதுகோளை முதலில் முன்மொழிந்ததாக கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிசுட்டார்க்கசு கருதப்படுகிறார்.[6] ஆனால் அரிசுட்டார்க்கசு காலத்திய மற்ற வானியலாளர்கள் இதனை ஆதரிக்கவில்லை.

ஞாயிற்றுக் குடும்பம் கண்டுபிடிப்பு[தொகு]

நிக்கோலாஸ் கோப்பர்னிக்கசின் கையெழுத்துப்படியில் ஞாயிற்றுமையக் கருதுகோளின்படியான சூரியக் குடும்பம்

1543இல் நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் பதிப்பித்த நூலே முதன்முதலாக கணிதப்படி ஞாயிறை மையமாகக் கொண்ட மோட்டொகுதி முன்கூட்டியுரைத்தது. 17ஆம்-நூற்றாண்டில் தொடர்ந்து கலீலியோ கலிலி, யோகான்னசு கெப்லர், ஐசாக் நியூட்டன் ஆகியோரின் இயற்பியல் ஆய்வுகளையும் புரிதல்களையும் அடுத்து இக்கருதுகோள் ஏற்கப்படலாயிற்று. இதன் மூலம் புவி சூரியனைச் சுற்றுவதும் ஏனைய கோள்களும் புவியைப் போன்ற அதே இயற்பியல் விதிகளால் இயக்கப்படுவதும் உறுதியாக்கப்பட்டது.

புறவெளிக் கோட்டொகுதியைக் குறித்த ஊகங்களும் புத்தாய்வுத் தேடலும்[தொகு]

16ஆம் நூற்றாண்டில் இத்தாலிய மெய் நூலறிஞர் கியோர்டானோ புரூணோ தான் துவக்கத்தில் கோப்பர்னிகசின் கருதுகோளை ஏற்றுக்கொண்டவராவார். இவரே மேலும் நிலையான விண்மீன்களும் ஞாயிறை ஒத்தவை என்றும் அவற்றைச் சுற்றியும் கோள்கள் சுற்றக்கூடிய வாய்ப்பு உள்ளதென்றும் ஊகித்தார். இக்கூற்றுகளுக்காக 1600இல் உரோமானியக் கடும் விசாரணைக்குப் பிறகு உயிருடன் எரிக்கப்பட்டார். [7]

18ஆம் நூற்றாண்டில் இதே கருத்தை ஐசாக் நியூட்டன் தனது "ஜெனரல் இசுக்கோலியம்" கட்டுரையில் முன்வைத்துள்ளார்; இது பிரின்சிப்பியா நூலின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. ஞாயிறின் கோள்களுடன் ஒப்பிட்டு "நிலையான விண்மீன்கள் ஏதேனும் தொகுதிக்கு மையமாக இருந்தால் அவையும் இதே போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும்.[8]

நியூட்டனின் கருத்துக்கள், போதிய சான்றுகள் கிடைக்கப்பெறாவிடினும், 19ஆம், 20ஆம் நூற்றாண்டுகளில் வலுபெற்றன. இவற்றின் இருப்பை வானியலாளர்கள் உறுதிப்படுத்தும் நீண்ட காலத்துக்கு முன்னரே இது குறித்தும் புறக்கோட்டொகுதி உயிரினங்கள் குறித்தும் விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

புறவெளிக் கோட்டொகுதிகளின் கண்டுபிடிப்பு[தொகு]

ஒவ்வொரு ஆண்டும் கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள்கள் - (பெப்ரவரி 2014 வரையிலும்) வண்ணங்கள் கண்டறிந்த விதத்தைக் குறிக்கின்றன.
  ஆரைவேகம்
  கடப்பு
  நேரம்
  நேரடி கண்டறிதல்
  ஈர்ப்புவிசை குறுத்தோற்றுரு
மைய விண்மீன் வகைப்பாடை ஒட்டி கோட்டொகுதிகள்.

புறக்கோள் ஒன்று முதன்முதலாக கண்டறியப்பட்டது 1992இல் ஆகும்; துடிவிண்மீன் PSR B1257+12 சுற்றிப் பல நிலப் பரும கோள்கள் அந்தாண்டு கண்டுபிடிக்கப்பட்டன. முதன்மை ஒளிர்வுப்பட்டை விண்மீன் ஒன்றின் புறக்கோள்கள் முதலில் 1995இல் தான் உறுதிசெய்யப்பட்டன. விண்மீன் வகைப்பாடு 51 பெகாசியைச் சுற்றி நான்கு நாள் சுற்றுப்பாதையில் பெருங்கோள் 51 பெகாசி பி இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பிறகு அடிக்கடி புதிய கோள் தொகுதிகளும் புறக்கோள்களும் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன. புறக்கோள்களை கண்டறியும் நுட்பங்களில் ஏற்பட்டுள்ள மேம்பாடுகளால் இது சாத்தியமாயிற்று. கெப்லர் திட்டம் போன்ற புறக்கோள்களைக் கண்டுபிடிக்கவென்றே விண்வெளித் திட்டங்கள் தீட்டப்பட்டதும் ஒரு காரணமாக அமைந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. p. 394, The Universal Book of Astronomy, from the Andromeda Galaxy to the Zone of Avoidance, David J. Dsrling, Hoboken, New Jersey: Wiley, 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-26569-1.
  2. p. 314, Collins Dictionary of Astronomy, Valerie Illingworth, London: Collins, 2000. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-00-710297-6.
  3. p. 382, Collins Dictionary of Astronomy.
  4. p. 420, A Dictionary of Astronomy, Ian Ridpath, Oxford, New York: Oxford University Press, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-860513-7.
  5. Schneider, J. "Interactive Extra-solar Planets Catalog". The Extrasolar Planets Encyclopedia. பார்க்கப்பட்ட நாள் 1 மே 2018.
  6. Dreyer (1953), pp.135–48; Linton (2004), pp.38–9). ஞாயிற்றுமையக் கருத்தை முன்வைத்த அரிசுட்டார்க்கசின் படைப்பு கிடைக்கவில்லை. இது குறித்து சிறு குறிப்பொன்று ஆர்க்கிமிடீசின் தி சான்ட் ரெக்கனரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  7. "Cosmos" in The New Encyclopædia Britannica (15th edition, Chicago, 1991) 16:787:2a. "For his advocacy of an infinity of suns and earths, he was burned at the stake in 1600."
  8. Newton, Isaac; Cohen, I. Bernard; Whitman, Anne (1999) [First published 1713]. The Principia: A New Translation and Guide. University of California Press. p. 940. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-20217-1.

மேலும் படிக்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கோள் தொகுதி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோள்_தொகுதி&oldid=3577096" இலிருந்து மீள்விக்கப்பட்டது