கோரூர், ஹாசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோரூர் அணை நுழைவாயில்
கோரூர் பள்ளி

கோரூர் (Gorur) என்பது தென்னிந்திய மாநிலமான கர்நாடகவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமாகும்.

அமைவிடம்[தொகு]

கோரூர் ஹாசன் மாவட்டத்தில் ஹாசன் வட்டத்தில் உள்ளது. இது ஹாசன்-குசால்நகர் சாலையில் அமைந்துள்ளது.

சுற்றுலா[தொகு]

கோரூர் அணை தோட்டமும் கோரூர் கோயிலும் ஏராளமான பார்வையாளர்களை ஈர்க்கின்றன. 1979ஆம் ஆண்டு ஹேமாவதி ஆற்றின்குறுக்கே கோரூருக்கு மேலேயும் யாகச்சி சங்கமத்திலிருந்து கீழ்நோக்கியும் ஒரு அணை கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணை 58 மீட்டர் உயரமும், 4692 மீட்டர் நீளமும் கொண்டது. மேலும் 8502 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுகிறது.[1] ஹேமாவதி ஆறு தென்னிந்தியாவில் உள்ள கர்நாடகா மாநிலத்தின் சிக்மகளூர் மாவட்டத்தில் பல்லால ராயண கோட்டை அருகில் சுமார் 1,219 மீட்டர் [2] உயரத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்குகிறது. இது ஹாசன் மாவட்டத்தின் வழியாக பாய்கிறது. அங்கு அதன் முக்கிய துணை நதியான யாகச்சி நதியும், பின்னர் மாண்டியா மாவட்டத்தில் கிருஷ்ணராஜசாகர் அருகே காவிரியுடன் இணைகிறது. தோராயமாக 245 கிமீ நீளம் கொண்ட இது சுமார் 5,410 கிமீ² வடிகால் பகுதியைக் கொண்டுள்ளது.[3]

கோரூரைச் சேர்ந்த பிரபலங்கள்[தொகு]

சீறினிவாச ஐயங்கார் தாயார் இலட்சுமம்மாள் ஆகியோருக்கு பிறந்த கோரூரு என்றும் பிரபலமாக அறியப்பட்ட கோரூரு ராமசுவாமி ஐயங்கார் (1904-1991), ஓர் கன்னட எழுத்தாளர். இவரது நகைச்சுவைக்கும், நையாண்டிக்கும் நன்கு அறியப்பட்டவர். இவர் இந்திய சுதந்திர இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு மகாத்மா காந்தியின் தீவிர சீடர் ஆனார். 1942 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காகவும், 1947ஆம் ஆண்டு பிரிட்டிசு நிர்வாகத்தால் 2 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இவரது மகன் இராமச்சந்திரன் 1947இல் இதே காரணத்திற்காக தியாகி ஆனார். 1947இல் சுதந்திரத்திற்குப் பிறகு, கோரூரு காதி வாரியத் தொழிற்சாலைகளில் பணியாற்றினார். ஹல்லிய சித்திரகலு (1930), நம்ம ஊரின ரசிகரு (1932) ஆகிய புகழ்பெற்ற புத்தகங்களை இவர் தனது வாழ்க்கையின் ஆரம்பத்தில் எழுதத் தொடங்கினார். இவரது "அமெரிக்கடல்லி கோரூரு" 1979, என்பது அமெரிக்காவில் உள்ள ஒரு உண்மையான இந்தியரின் நையாண்டி பயணக் குறிப்பாகும். இது இவருக்கு 1981இல் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றுத் தந்தது.[4] இவரது சிறுகதையான " பூதய்யன மக அய்யு " (உண்மையான நிகழ்வுகளின் அடிப்படையில்) 1975இல் பிரபல இயக்குனர் எஸ். சித்தலிங்கய்யா அவர்களால் அதே பெயரில் கன்னடத் திரைப்படமாக எடுக்கப்பட்டது. ஹேமாவதி, ஊர்வசி ஆகிய புதினங்களும் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. இவரது பயணக் குறிப்பு தொலைக்காட்சி தொடராக வெளிவந்தது. ராசபலா, நம்ம ஊரின ரசிகரு, புட்ட மல்லிகே, ஹேமாவதி , கருடகம்பட தாசய்யா, மெரவணிகே ஆகியவை இவரது பிற படைப்புகள் . இவரது இலக்கியப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் 1952ஆம் ஆண்டு கர்நாடக சட்ட மேலவைக்கு பரிந்துரைக்கப்பட்டார். 1971 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தில் கௌரவ முனைவர் பட்டம் பெற்றார். பெங்களூர் இராசாசி நகரில் உள்ள ஒரு சாலைக்கு இவரது பெயரிடப்பட்டது. கோரூரு ராமசுவாமி ஐயங்கார் 1991ஆம் ஆண்டு தனது 87ஆவது வயதில் காலமானார். இவரது பிறந்த நூற்றாண்டு 2005இல் கொண்டாடப்பட்டது [5] இவரது குழந்தைப் பருவத்தின் நினைவுக் குறிப்புகள், கோரூரு அவர பால்யதா ஆத்மா கதை மரணத்திற்குப் பின் வெளியிடப்பட்டது.[6]

படத்தொகுப்பு[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரூர்,_ஹாசன்&oldid=3806364" இருந்து மீள்விக்கப்பட்டது