கோட்டின் கோட்டை

ஆள்கூறுகள்: 48°31′19″N 26°29′54″E / 48.52194°N 26.49833°E / 48.52194; 26.49833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோட்டின் கோட்டை
Хотинська фортеця
டினிசுட்ரோவசுக்கி மாவட்டம், செர்னிவ்சி மாகாணம், உக்ரைன்
ஆள்கூறுகள் 48°31′19″N 26°29′54″E / 48.52194°N 26.49833°E / 48.52194; 26.49833
வகை கோட்டை
இடத் தகவல்
இணையத்தளம் https://khotynska-fortecya.cv.ua/index-en
இட வரலாறு
கட்டிய காலம் கோட்டை

கோட்டின் கோட்டை (உக்ரைனியன்: Хотинська фортеця, போலிய: twierdza w Chocimiu, துருக்கியம்: Hotin Kalesi) உக்ரைன் நாட்டின் செர்னிவ்சி மாகாணத்தில் உள்ள ஓரு பழம்பெரும் கோட்டையாகும். இது உக்ரைன் மற்றும் உருமேனியா நாடுகளுக்கிடையே இருக்கும் பேசராபியா பிராந்தியத்தில், டினிசுடர் நதியின் வலது கரையில் அமைந்துள்ளது. மேலும் இது மற்றோரு பாரம்பரிய கோட்டையான காமின்ட்சு-போடில்சுகயிக்கு அருகில் அமைந்துள்ளது. தற்போது இருக்கும் கோட்டையானது 1375 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மேலும் 1380 ஆம் ஆண்டு இந்த கோட்டையின் சுவர்கள் மேம்பட்டடுத்தப்பட்டன. 1460 ஆம் ஆண்டு மோல்டாவிய இளவரசரான சுடீபனின் ஆணையின் பேரில் இந்த கோட்டை மேலும் பலப்படுத்தப்பட்டது.

வரலாறு[தொகு]

உருசிய கோட்டை[தொகு]

கோட்டின் கோட்டை முதலில் பத்தாம் நூற்றாண்டில் இளவரசர் வோலோடிமிர் சுவியாடோசுலாவோவிச்சால் கீவின் உருசிய அரசின் தென்மேற்கு எல்லை கோட்டைகளில் ஒன்றாக கட்டப்பட்டது. இவர் இந்த கோட்டையை சுற்றிய நிலங்களை ஆக்கிரமித்த போது, பாதுகாப்பிற்காக இது எழுப்பப்பட்டது. மேலும் இந்த கோட்டை கீவ் நகரை எசுக்காண்டினாவியா மற்றும் கருங்கடலில் உள்ள கிரேக்க நகரங்களுடன் இணைக்கும் ஓரு முக்கியமான வர்த்தக வழித்தடத்தில் அமைந்திருந்தது.[1]

இந்தக் கோட்டை ஒரு பாறைகள் நிறைந்த பகுதியில் டினிசுடர் நதியின் வலது கரையில் அமைந்துள்ளது. முதலில் இந்த கோட்டை மரச் சுவர்களுடன் பாதுகாப்பு அரண்களுடன் ஒரு பெரிய மண் குன்றின் மீது அமைக்கப்பட்டது. இது ஆற்றின் குறுக்கே உள்ள கோட்டின் குடியேற்றத்தைப் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதன் பிறகு கற்களை கொண்டு வடக்கே ஓரு பாதுகாப்பு கோபுரம் அமைக்கப்பட்டது. அடுத்த பல நூற்றாண்டுகளில், இந்த கோட்டை பல புனரமைப்புகள் மற்றும் விரிவாக்கங்களுக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் இந்த கோட்டை பல போர்களில் சேதப்படுத்தப்பட்டு, மீண்டும் கட்டப்பட்டது. பதினொன்றாம் நூற்றாண்டின் இறுதியில், கோட்டின் கோட்டை டெரெபோவலியா சமசுதானத்திற்கு சொந்தமானது. 1140களில் இந்தக் கோட்டை காலிக் அரசின் ஒரு பகுதியாக மாறியது.[2]

புனரமைப்பு[தொகு]

கோட்டை சுவர்களின் பரந்த பார்வை

1250 ஆண்டில் காலிக் அரசின் இளவரசர் டானிலோவும் அவரது மகன் லேவும் இந்த கோட்டையை மீண்டும் கட்டினர். அப்பொழுது கோட்டையைச் சுற்றி 20 அங்குலம் அகலம் கொண்ட ஓரு கற்சுவர் மற்றும் ஏறத்தாழ 6 அடி ஆழமுள்ள ஓர் அகழியையும் அமைத்தனர். கோட்டையின் வடக்குப் பகுதியில் புதிதாக இராணுவக் கட்டிடங்களும் சேர்க்கப்பட்டன. பதிமூன்றாம் நூற்றாண்டன் பிற்பகுதியில்  செனோவாக் குடியரசு இந்த கோட்டையை கைப்பற்றியபோது இது மேலும் மாற்றியமைக்கப்பட்டது.[1]

1340 ஆம் ஆண்டில் இந்த கோட்டை அங்கேரி இராச்சியத்தின் மோல்டாவிய இளவரசர் டிராகோசால் கைப்பற்றப்பட்டது. 1375க்குப் பிறகு இது மால்டாவியாவின் ஒரு பகுதியாக இருந்தது. மோல்டாவிய இளவரசர்கள் அலெக்சாண்டர் மற்றும் பின்னர் சுடீபன் ஆகியோரின் ஆட்சியின் கீழ் இந்த கோட்டை புதிதாக கட்டப்பட்டு மேலும்  விரிவுபடுத்தப்பட்டது. அந்த விரிவாக்கத்தின் போது புதிதாக 130 அடி உயரம் கொண்ட சுவர்கள் கட்டப்பட்டன. மேலும் புதிதாக மூன்று உயர்ந்த பாதுகாப்பு கோபுரங்களையும் எழுப்பினர். பின்னர் கோட்டை முற்றத்தில் வீரர்களுக்கு முகாம்கள் மற்றும் பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டன. இந்த புனரமைப்பு செய்யப்பட்ட கோட்டை பின்னர் 14 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை மால்டாவிய இளவரசர்களின் வசிப்பிடமாக இருந்தது.

1476 ஆம் ஆண்டில் இரண்டாம் முகம்மது தலைமையிலான துருக்கிய படைகள் இந்தக் கோட்டையை வெற்றிகரமாக கைப்பற்றின. 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மால்டாவியா ஒட்டோமான் பேரரசின் துணை மாநிலமாக மாறியது. அதன்பிறகு, மால்டாவிய துருப்புக்களுடன் கோட்டையின் உள்ளே ஒரு துருக்கிய படைப்பிரிவு நிறுத்தப்பட்டது. இந்தக் காலகட்டத்தில் துருக்கியர்கள் மேலும் கோட்டையை விரிவுபடுத்தி பலப்படுத்தினர்.

1538 இல் சான் டார்னோவசுகியின் தலைமையின் கீழ் போலந்து-லித்துவேனிய பொதுநலவாய படைகளால் இந்தக் கோட்டை கைப்பற்றப்பட்டது. இந்த போராட்டத்தின் போது கோட்டையின் சில பகுதிகள், மூன்று கோபுரங்கள் மற்றும் மேற்கத்திய சுவரின் பெரும்பகுதி ஆகியவை அழிக்கப்பட்டன. கைப்பற்றப்பட்ட பிறகு, 1540 மற்றும் 1544 க்கு இடையில் கோட்டின் கோட்டை மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 1563 இல் டிமிட்ரோ வைசுநோவெட்சுகி ஐநூறு கோசாக்கு வீரர்களுடன் கோட்டையைக் கைப்பற்றி சிறிது காலம் தன்வசம் வைத்திருந்தார்.

17 முதல் 19 ஆம் நூற்றாண்டுகள்[தொகு]

கோட்டின் நகரக் கொடியில் குறிப்பிடப்பட்டுள்ள கோட்டின் கோட்டை

1600 ஆம் ஆண்டில் மால்டாவியா மற்றும் வலாச்சியா ஆகிய நாடுகளின் முந்தைய ஆட்சியாளரான சிமியோன் மற்றும் மால்டாவியாவின் இளவரசர் ஐரேமியா மோவிலா ஆகியோர் போலந்தின் ஆதரவுடன் இந்தக் கோட்டையில் தஞ்சம் புகுந்தனர். இவர்கள் மால்டாவியா மற்றும் வால்லாச்சியாவில் அப்போது மைக்கேலுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வந்தனர்.[3]

1611 ஆம் ஆண்டில் இரண்டாம் சுடீபன் டோம்சா ஒட்டோமான் பேரரசின் ஆதரவுடன் மால்டோவாவை ஆட்சி செய்தார், மேலும் 1615 ஆம் ஆண்டில் அவர் பதவி நீக்கம் செய்யப்படும் வரை கோட்டின் கோட்டையை தன்வசம் வைத்திருந்தார். 1615 இல் போலந்து-லித்துவேனியா பொதுநலவாய இராணுவம் மீண்டும் கோட்டையைக் கைப்பற்றியது, ஆனால் 1617 இல் அதை மீண்டும் துருக்கியர்களிடம் இழந்தது. 1620 இல் இந்த நகரம் மீண்டும் போலந்து-லித்துவேனிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது.

1621 செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில், சான் கரோல் சோட்கீவிக்சு மற்றும் பெட்ரோ சகைடாசனி ஆகியோரின் தலைமையின் கீழ் போலந்து-லித்துவேனிய பொதுநலவாய இராணுவம் துருக்கிய அரசர் இரண்டாம் ஒசுமானின் இராணுவத்தை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியது. அதன் பிறகு இரு தரப்புக்குமிடையே கோட்டின் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம்  பொதுநலவாய நாட்டிற்குள் ஒட்டோமான் படைகள் முன்னேறுவதை தடுத்து நிறுத்தி, டினிசுடர் ஆற்றை பொதுநலவாய-ஒட்டோமான் எல்லையாக  உறுதிப்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தின் ஓரு பகுதியாக கோட்டின் கோட்டை மீண்டும் ஒட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த மால்டாவியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.[4]

முதலில் மோல்டாவியா மற்றும் வால்லாச்சியாவின் கூட்டாளியாக இருந்த போகுடன் கெம்லெனெட்சுகி, பின்னர் 1650 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் கோட்டின் கோட்டையை ஆக்கிரமித்தார். 1653 ஆம் ஆண்டு நிசுடர் நதியின் இடது கரையில் நடந்த சுவானெட்சு போரில், கோட்டின் கோட்டையை கைப்பற்ற துருக்கியர்களின் ஒரு படைப்பிரிவு மால்டாவியாவின் படைகளுடன் போரில் ஈடுபட்டது. 1673 இல், கோட்டின் கோட்டையை  சான் சோபீசுகி போலிசு-கோசாக் இராணுவத்தின் உதவியுடன் ஆக்கிரமிக்கத் தொடங்கினார்.[5]

1674 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்தக் கோட்டை துருக்கியப் படைகளால் மீண்டும் கைப்பற்றப்பட்டது. மீண்டும் போலந்து மன்னரான சான் சோபீசுகி 1684 இல் இதைக் கைப்பற்றினார். 1699 ஆம் ஆண்டின் அமைதி ஒப்பந்தத்தின் மூலம், கோட்டை போலந்து-லித்துவேனிய பொதுநலவாயத்திலிருந்து மால்டாவிய அரசுக்கு மாற்றப்பட்டது. 1711 ஆம் ஆண்டில் கோட்டின் கோட்டை மீண்டும் துருக்கியர்களால் கைப்பற்றப்பட்டது. ஆறு ஆண்டு கால புனரமைப்பைத் தொடர்ந்து துருக்கியர்கள் இந்தக் கோட்டையை மேலும் பலப்படுத்தினர், மேலும் இது கிழக்கு ஐரோப்பாவில் ஒட்டோமான் அரசின் பாதுகாப்பில் ஓர் முன்னணி கோட்டையாக மாறியது.[6]

1739  இல் உக்ரேனியர்கள், உருசியர்கள், சார்சியர்கள் மற்றும் மோல்டாவியர்களின் கூட்டு படைகள் மற்றும் துருக்கியர்கள் இடையே நடைபெற்ற சுடாவுச்சனி போரில் உருசியர்கள் துருக்கியர்களை தோற்கடித்து கோட்டின் கோட்டையை முற்றுகையிட்டனர். துருக்கியப் படைகளின் தளபதியான இலியாசு கொல்சியாக் உருசியத் தளபதி புர்கார்ட் கிறிசுடோப் வான் முனிச்சிடம் கோட்டையை ஒப்படைத்தார். பின்னர் இது மீண்டும் துருக்கியர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 1769 மற்றும் 1788 ஆம் ஆண்டுகளில், உருசியர்கள் மீண்டும் இந்த கோட்டையைத் தாக்கினர், ஆனால் ஒவ்வொரு முறையும் அது சமாதான ஒப்பந்தங்களின்படி துருக்கியர்களிடம் திருப்பி வழங்கப்பட்டது. பதினெட்டாம் நாட்டின் பிற்பகுதியில் நடந்த உருசிய-துருக்கியப் போருக்குப் பிறகு கோட்டின் கோட்டை உருசியாவின் நிரந்தரப் பகுதியாக மாறியது. இருப்பினும், துருக்கியர்கள் போரில் பின்வாங்கும்போது, அவர்கள் கோட்டையை கிட்டத்தட்ட முற்றிலுமாக அழித்தனர். 1826 ஆம் ஆண்டில், கோட்டின் நகரத்திற்கு ஒரு தனிப்பட்ட சின்னம் வழங்கப்பட்டது. 1832 ஆம் ஆண்டில், கோட்டையின் உள்ளே உள்ள பிராந்தியத்தில் ஒலெக்சாண்டர் நெவசுகி தேவாலயம் கட்டப்பட்டது. 1856 ஆம் ஆண்டில், கோட்டின் கோட்டையை இராணுவ உபயோகத்தில் இருந்து விலக்க உருசிய அரசாங்கம் முடிவு செய்தது.

20 மற்றும் 21ஆம் நூற்றாண்டுகள்[தொகு]

வடக்கிலிருந்து கோட்டை

முதல் உலகப் போரும் அதன் பிறகு நடந்த உருசிய உள்நாட்டுப் போரும் கோட்டின் மக்களை பெரிதும் பாதித்தன. 1918 ஆம் ஆண்டு சனவரியில் மால்டோவா தனது சுதந்திரத்தை அறிவித்து மார்ச் மாதத்தில் உருமேனியாவுடன் இணைந்தது. 1919 சனவரியில் உருசியாவில் சேர்ந்த போல்சிவிக்குகளால் திட்டமிடப்பட்ட ஓரு  எழுச்சி நடந்தது. இதற்கு பின் கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்திற்குப் பிறகு உருமேனியாவின் ஒரு பகுதியாக கோட்டின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டது. அதன் பிறகு 22 ஆண்டுகளாக உருமேனியாவின் ஒரு பகுதியாக கோட்டின் கோட்டை இருந்தது.[7]

28 சூன் 1940 அன்று, சோவியத் ஒன்றியம் இந்த பகுதிகளை ஆக்கிரமித்தது. மாஸ்கோவின் உத்தரவின் பேரில், கோட்டின் நகரம் உட்பட பெசராபியாவின் வடக்குப் பகுதி உக்ரேனிய சோவியத் குடியரசில் இணைக்கப்பட்டது. 6 சூலை 1941 அன்று, கோட்டின் நாசி ஜெர்மனி படைகளால் மீண்டும் கைப்பற்றப்பட்டு, உருமானியாவின் ஒரு பகுதியாக ஆக்கப்பட்டது. 1944 ஆம் ஆண்டு கோடை காலத்தில், சோவியத் சிவப்பு இராணுவம் இப்பகுதியை மீண்டும் ஆக்கிரமித்தது. பின்னர் 1991 இல் சோவியத் குடியரசு உடையும் வரை இது அந்த நாட்டின் ஓரு பகுதியாக இருந்தது. அதன் பிறகு கோட்டின் நகரம் உக்ரைன் நாட்டுக்கு மாற்றப்பட்டது. தற்போது கோட்டின் செர்னிவ்ட்சி மாகாணத்தின் முக்கியமான தொழில்துறை, சுற்றுலா மற்றும் கலாச்சார மையமாகும். 2002 ஆம் ஆண்டு இந்த பண்டைய நகரம் அதன் 1000 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.[8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Khotyn Fortress". World History Encyclopedia. பார்க்கப்பட்ட நாள் 4 June 2022.
  2. "History Khotyn fortress". khotynska-fortecya. பார்க்கப்பட்ட நாள் 4 June 2022.
  3. Ohloblyn, Oleksander "Mohyla, Petro". Encyclopedia of Ukraine.  
  4. Podhorodecki, Leszek (1971). "Chocim, 1621". Muzeum Pałac w Wlianowie. பார்க்கப்பட்ட நாள் 12 July 2008.
  5. History of cities and villages of the Ukrainian SSR. Kyiv. 1971. http://www.tovtry.km.ua/ua/history/kp/kp030.html. பார்த்த நாள்: 11 June 2008. 
  6. Khvorostenko, Sergey (2005). "Khotyn Ancient and Modern". Turizm. பார்க்கப்பட்ட நாள் 12 December 2008.
  7. Klymenko, Sergiy (July 2004). "On the southwest of Kiev, July 2004. Fourth day: Chernivsti -> Khotyn -> Kamianets-Podilskyi -> Chornokozyntsi -> Chernivsti". serg-klymenko. பார்க்கப்பட்ட நாள் 16 July 2008.
  8. Klymenko, Sergiy (July 2004). "On the southwest of Kiev, July 2004. Fourth day: Chernivsti -> Khotyn -> Kamianets-Podilskyi -> Chornokozyntsi -> Chernivsti". Serg-klymenko. பார்க்கப்பட்ட நாள் 16 July 2008.
  9. "About the governmental historical-architectural reserve "Khotyn Fortress"". Cabinet of Ministers decree. 12 October 2000.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டின்_கோட்டை&oldid=3907540" இலிருந்து மீள்விக்கப்பட்டது