குரஜாதா அப்பாராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குரஜாதா வெங்கட அப்பராவ் (Gurajada Venkata Apparao) (பிறப்பு:1862 செப்டம்பர் 21 - இறப்பு:1915 நவம்பர் 30) இவர் ஒரு புகழ்பெற்ற இந்திய நாடக ஆசிரியரும், கவிஞரும் மற்றும் எழுத்தாளருமாவார். தெலுங்கு நாடகத்தில் தனது படைப்புகளுக்கு இவர் பெயர் பெற்றவர். [1] [2] இராவ் கன்யாசுல்கம் என்ற நாடகத்தை 1892 இல் எழுதினார். இது பெரும்பாலும் தெலுங்கு மொழியில் மிகப் பெரிய நாடகமாகக் கருதப்படுகிறது. [3] [4] இந்திய நாடகத்தின் முன்னோடிகளில் ஒருவரான இராவ் கவிசேகர மற்றும் அபுதயா கவிதா பிதாமகடு என்ற பட்டங்களை வைத்திருக்கிறார். [5] [6] [7] [8] 1910 ஆம் ஆண்டில், பரவலாக அறியப்பட்ட தெலுங்கு தேசபக்தி பாடலான " தேசமுனு பிரேமிஞ்சுமன்னா " பாடலை இராவ் எழுதினார். [9] [10]

1897 ஆம் ஆண்டில், கன்யாசுல்கம் வெளியிடப்பட்டு மகாராஜா ஆனந்த கஜபதிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அப்பராவ் (அவரது சகோதரர் சியாமலா ராவ் உடன்) பல ஆங்கிலக் கவிதைகளை எழுதினார். "இந்தியன் லெஷர் ஹவர்" என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட இவரது சாரங்கதாராவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. [11] கல்கத்தாவை தளமாகக் கொண்ட "ரீஸ் அண்ட் ரியோட்" என்ற இதழின் ஆசிரியர் சம்பு சந்திர முகர்ஜி அதைப் படித்து மீண்டும் தனது பத்திரிகையில் வெளியிட்டார். "இந்தியன் லெஷர் ஹவர்" இன் ஆசிரியர் குண்டுகூர்த்தி வெங்கடரமணைய்யா அதே காலகட்டத்தில் அப்பாராவை பெரிதும் ஊக்குவித்தார். 1891 ஆம் ஆண்டில், விஜயநகரத்தின் மகாராஜாவுக்கு கல்வெட்டியயாளர் பதவிக்கு குரஜாதா நியமிக்கப்பட்டார். [9] [10]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

குரஜாதா 1862 செப்டம்பர் 21 அன்று விசாகப்பட்டினம் மாவட்டத்தின் எலமஞ்சிலிக்கு அருகிலுள்ள இராயவரம் கிராமத்தில் உள்ள தனது தாய் மாமாவின் வீட்டில் [9] [10] ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் வெங்கட ராம தாசு, கௌசல்யாம்மா. குரஜாதா தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை விஜயநகரத்திலும் அதைச் சுற்றியும் வாழ்ந்தார். இவரும்,இவரது தந்தையும் விஜயநகர சுதேச அரசில் பணியமர்த்தப்பட்டனர். குரஜாதா ஆளும் குடும்பத்துடன் நெருங்கிய உறவை கொண்டிருந்தார். இவரது தந்தை அங்கு பணிபுரிந்தபோது சீபுருப்பள்ளியில் ஆரம்ப பள்ளிப்படிப்பைப் பெற்றார். இவரது தந்தை இறந்த பிறகு விஜயநகரத்தில் மீதமுள்ள பள்ளிப்படிப்பினை முடித்தார். அந்த நேரத்தில், இவரை அப்போதைய எம்.ஆர் கல்லூரி முதல்வர் சி.சந்திரசேகர சாஸ்திரி கவனித்து வந்தார். இவருக்கு இலவச உணவு மற்றும் உறைவிடம் வழங்கினார். இஅவர் 1882 இல் தனது மெட்ரிகுலேஷனை முடித்து 1884 இல் பட்டம் பெற்றார். பின்னர், 1884 இல் இவர் எம்.ஆர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக ரூ .25 சம்பளத்துடன் பணிபுரிந்தார்.

1887 இல், விஜயநகரத்தில் நடந்த காங்கிரசு கட்சி கூட்டத்தில் குரஜாதா கலந்து கொண்டார். இவரது மகள் வோலெட்டி இலட்சுமி நரசம்மா 1887 இல் பிறந்தார். ஒரே நேரத்தில் சமூகப் பணிகளில் ஈடுபட்ட இவர் 1888 இல் விசாகப்பட்டினத்தில் உள்ள தன்னார்வ சேவைப் படையில் உறுப்பினரானார். இவர் 1889 இல் ஆனந்த கஜபதி விவாதக் கழகத்தின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது மகன் குரஜாதா வெங்கட ராமதாசு 1890 இல் பிறந்தார். 1891 ஆம் ஆண்டில் இவர் விரிவுரையாளராக (நிலை III) ரூ .125 சம்பளத்துடன் பதவி உயர்வு பெற்றார். இவர் ஆங்கில இலக்கணம், சமஸ்கிருத இலக்கியம், மொழிபெயர்ப்பு, கிரேக்கம் மற்றும் உரோமானிய வரலாறுகள் உட்பட பல பாடங்களை கற்பித்தார். இவரது தம்பி சியாமலா ராவ் 1892 இல் சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கும் போது இறந்தார். [9] [10]

ஓய்வு மற்றும் இறப்பு[தொகு]

குரஜாதா 1913 இல் ஓய்வு பெற்றார். அப்போதைய சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு "எமரிட்டஸ் ஃபெலோ" என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தது. [9] [10] இவர் 30 நவம்பர் 1915 இல் இறந்தார்.


குறிப்புகள்[தொகு]

 1. Reporter, Staff (22 September 2016). "Gurajada’s literary contribution recalled".
 2. Sarma, G. v Prasada (22 September 2016). "Gurajada’s patriotic song set to go places".
 3. Gopal, B. Madhu (26 December 2012). "Time we perpetuated Gurajada memory".
 4. Apparao, Gurujada Venkata (1 January 2002). "Kanyasulkam". Book Review Literacy Trust.
 5. "Forbes India Magazine - The next stage: The evolving face of theatre in India".
 6. "Gurajada remembered".
 7. 20th Century Telugu Luminaries, Potti Sriramulu Telugu University, Hyderabad, 2005
 8. "ಗುರಜಾಡ ವೆಂಕಟ ಅಪ್ಪಾರಾವ್ – ಚಿಲುಮೆ".
 9. 9.0 9.1 9.2 9.3 9.4 Rau, M. Chalapathi (1 January 1976). "Gurazada Commemorative Volume". South Delhi Andhra Association.
 10. 10.0 10.1 10.2 10.3 10.4 Suryanarayana, Peri (1 January 1968). "The life and greatness of Sri Gurajada Venkata Apparao". Vignana Sahiti Publications.
 11. Reporter, Staff (3 September 2012). "Call to propagate works of Gurajada Appa Rao".
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரஜாதா_அப்பாராவ்&oldid=2890173" இருந்து மீள்விக்கப்பட்டது