கும்பகோணப் பள்ளிக்கூடத் தீ விபத்து

ஆள்கூறுகள்: 10°58′12″N 79°25′12″E / 10.97000°N 79.42000°E / 10.97000; 79.42000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கும்பகோணப் பள்ளிக்கூடத் தீ விபத்து
நாள்சூலை 16, 2004 (2004-07-16)[1]
நிகழிடம்கும்பகோணம்
Coordinates10°58′12″N 79°25′12″E / 10.97000°N 79.42000°E / 10.97000; 79.42000
காரணம்தீ விபத்து
உயிரிழப்பு94
குற்றங்கள்21
தண்டனை(கள்)1 (ஆயுள் தண்டனை), 8 (5 ஆண்டு கடுங்காவல் ), 1 (5 ஆண்டு சிறை)10
கும்பகோணம் பள்ளிக்கூடத் தீ விபத்து நினைவுச் சின்னம்

கும்பகோணம் பள்ளிக்கூடத் தீ விபத்து என்பது 2004, சூலை 16 ஆம் தேதி கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தைப் பற்றியது. இவ்விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். இறந்த குழந்தைகள் அனைவரும் 7 வயதிலிருந்து 11 வயதுக்குட்பட்டவர்களாவர். 18 நபர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டது. இத்தீவிபத்து மதிய உணவு தயாரிக்கும்போது ஏற்பட்டது.[2]இவ்விபத்திற்கு பின் தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளும் கட்டமைப்பு விதிகளும் கொண்டுவரப்பட்டன.


பள்ளி வளாகம்[தொகு]

ஒரே கட்டிடத்தில் மூன்றுப் பள்ளிகள் அந்த வளாகத்தில் இயங்கி வந்தன. முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் 477 பிள்ளைகள் படித்து வந்தனர். சரஸ்வதி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் எல்.கே.ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை 126 பிள்ளைகள் படித்து வந்தனர். இது தவிர உயர் நிலைப்பள்ளியும் இயங்கி வந்தது. [3]

நீதிபதி சம்பத் கமிஷன்[தொகு]

இத்தீவிபத்தைப் பற்றி விசாரிக்க 2004 ஆம் ஆண்டு சம்பத் கமிஷன் அமைக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு அந்த கமிஷன் சமர்பித்த அறிக்கையின்படி, இரண்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன. அதன்படி பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவதற்கு வரைபட அனுமதியை உரிய அலுவலரிடம் முறையாகப் பெற வேண்டும். பள்ளி கட்டிடத்தின் மேற்கூரைக்கு செல்லும் வழி மூடப்பட்டிருக்க வேண்டும். சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும். 20 மாணவர்களுக்கு ஒரு குடிநீர் குழாய் இருக்க வேண்டும். 20 மாணவர்களுக்கு ஒரு கழிப்பறை இருக்க வேண்டும். மாணவர் அமரும் இருக்கைகள் பின்புறம் முதுகு சாய்வாக அமைக்க வேண்டும். ஆபத்துக் காலங்களில் முதலுதவி பெட்டிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இருந்தால் முழு நேர மருத்துவ வசதி அமைக்கப்பட வேண்டும். வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா என்பதை அறிய மாணவர்களின் பெற்றோர்கள் 5 பேர் கொண்ட குழுவாக ஒவ்வொரு வாரமும் பள்ளியில் ஆய்வு செய்யலாம்.[3][4]

இழப்பீடு[தொகு]

இந்தத் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா . 1 லட்சம் கருணைத் தொகையாகவும் கடுமையாகக் காயமுற்றோருக்கு தலா 25 ஆயிரமும் லேசாகக் காயமுற்றவர்களுக்கு தலா . 10 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்பட்டன. இவ் விபத்து குறித்து விசாரித்த நீதிபதி சம்பத் கமிஷன், இவ் விபத்துக்கு முற்றிலும் அரசு அதிகாரிகள்தான் பொறுப்பு என்று தெரிவித்தது. அந்த அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று வந்தபோது, ஏற்கெனவே .1 லட்சம் வழங்கப்பட்டுவிட்டது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு[தொகு]

இந்திய அரசியல் சாசனம் பிரிவு- 21 மக்களின் உயிர் வாழ்க்கைக்கும் மற்றும் தனிமனித சுதந்திரத்துக்கும் அரசே பொறுப்பு என்கிற அடிப்படையில் இழப்பீடு கோரி பெற்றோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2010இல் வழக்குத் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன், ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுப்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டார்.

தமிழக அரசின் மேல் முறையீடு[தொகு]

அந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 24.4.2014 அன்று நீதிபதி பால்வசந்தகுமார், சத்திய நாராயணா ஆகியோரைக் கொண்ட அமர்வு, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து, 2 வாரத்துக்குள் நீதிபதி சண்முகம் தலைமையில் குழு அமைப்பதற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டது. அதை தமிழக அரசு நிறைவேற்றாததால், பெற்றோர் தரப்பில் தமிழக அரசின் தலைமைச் செயலர், கல்வித் துறை செயலர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு ஜூன் மாதம் விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கேட்கப்பட்டது.

மேல் முறையீடு மனு தள்ளுபடி[தொகு]

இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா, நீதிபதிகள் ஜோசப் குரியன், ரோகின் டன் எப்.நாரிமன் அமர்வு முன்பு 30.07.2014 அன்று நடைபெற்றது. அப்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு தருவதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்தது.[5]

வழக்கின் தீர்ப்பு[தொகு]

இந்த வழக்கில் 25 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் பிரபாகரன் என்பவர் அப்ரூவராக மாறினார். இந்த வழக்கில் 488 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டு 3,126 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 60 ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. ஆரம்பகட்ட விசாரணை கும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், பின்னர் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு 2006 ஜூலை 12ல் மாற்றப்பட்டது. [6]இங்கு சாட்சிகள் விசாரணை 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து 22 மாதங்கள் நடைபெற்று வந்தன. விசாரணை 2014 , ஜூலை 17 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. [7]

தண்டனை பெற்றவர்கள்[தொகு]

பள்ளியின் நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், பழனிச்சாமியின் மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்த லெட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலெட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகியோருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டது. மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பாலாஜி, பொறியாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன் ஆகியோருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி முகமது அலி தீர்ப்பு வழங்கினார்.[6]பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை தவிர 51,65,700 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பொறியாளர் ஜெயச்சந்திரனுக்கு 50,000 ரூபாய் அபராதமும், கல்வித் துறை அதிகாரிகள் நான்கு பேருக்கு தலா 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையில் இருந்து இறந்த குழந்தைகள் குடும்பத்தினர், காயமடைந்த குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டுமெனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.[8]

விடுவிக்கப்பட்டவர்கள்[தொகு]

அதேநேரத்தில் இந்த வழக்கிலிருந்து 8 அதிகாரிகள், 3 ஆசிரியைகள் விடுவிக்கப்பட்டனர். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பழனிச்சாமி, உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் நாராயணசாமி, கூடுதல்உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் பாலகிருஷ்ணன், மாதவன், பாலசுப்பிரமணியம், ஆசிரியைகள் தேவி, மகாலெட்சுமி, அந்தோணியம்மாள், கும்பகோணம் நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி, நகர அமைப்பு அலுவலர் முருகன் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுதலை செய்தது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chronology of major fire accidents". Hindustan Times (New Delhi, India). 9 December 2011 இம் மூலத்தில் இருந்து 10 ஜூன் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140610085953/http://www.highbeam.com/doc/1P3-2531606241.html. பார்த்த நாள்: 30 November 2013. (subscription required)
  2. http://www.dinamani.com/edition/story.aspx?artid=483408[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 "கும்பகோணம் பள்ளி விபத்து: அரசு தப்பலாமோ?". மாற்று. 31 சூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 31 சூலை 2014.
  4. "Report of the Fire accident occurred at Sri Krishna Aided Primary School, Kumbakonam, Thanjavur District". பார்க்கப்பட்ட நாள் 31 சூலை 2014.
  5. "கும்பகோணம் பள்ளி தீ விபத்து கூடுதல் இழப்பீடு தருவதை எதிர்த்த தமிழக அரசின் மனு தள்ளுபடி :: உச்சநீதிமன்றம் அதிரடி". தீக்கதிர். 31 சூலை 2014. p. 3. பார்க்கப்பட்ட நாள் 31 சூலை 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. 6.0 6.1 6.2 "94 குழந்தைகள் உயிருடன் கருகிய கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு 10 பேருக்கு தண்டனை-11 பேர் விடுதலை". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 31 சூலை 2014. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 31 சூலை 2014.
  7. "கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கு: இன்று தீர்ப்பு". தினமணி. 30 சூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 31 சூலை 2014.
  8. "கும்பகோணம் பள்ளித் தீ விபத்து: பள்ளி நிறுவனருக்கு ஆயுள் தண்டனை". 30 சூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 31 சூலை 2014.