குன்றூர் கிழார் மகனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குன்றூர் கிழார் மகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். நற்றிணை 332, புறநானூறு 338 ஆகிய இரண்டு பாடல்கள் இவரால் பாடப்பட்டனவாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளன. இவரது பெயர் தெரியாத நிலையில் தந்தைப் பெயரைச் சொல்லி இன்னார் மகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

நற்றிணை 332 செய்தி[தொகு]

  • திணை - குறிஞ்சி

தலைவன் பிரிந்திருந்த காலத்தில் தலைவியின் தோள் மெலிந்து அவளது வளையல் கழன்றது. அது கண்ட தோழி பிரிவைப் பொறுத்துக்கொள் என்று தோழியை வற்புறுத்துகிறாள். தலைவி தன்னால் பிரிவைப் பொறுக்கமுடியாததற்கான காரணத்தைப் புலப்படுத்துகிறாள்.

இகுளை தோழி! இதனை என்னவென்று சொல்வது?

பழக்கம்[தொகு]

  • (தண்ணீரில் வளர்ந்திருக்கும் குவளைப் பூக்களை வயலிலிருந்து களைந்து எறிவோர் தாகம் எடுத்தால் குவளை பூத்திருக்கும் தண்டை ஒடித்துக் கலங்கல் நீராயினும் அதில் வைத்து உறிஞ்சி நீர் பருகுவர்)

குவளை குறுநர்க்குத் தண்ணீர்த் தாகம் எடுப்பது போல தலைவனுடன் சேர்ந்திருக்கும் தோள் சற்று விலகியபோதே மெலிந்து வளையல்கள் கழன்றன. இதனை என்னவென்று சொல்வது?

இப்போது அவர் பிரிந்து காட்டுவழியில் செல்கிறார். அந்தக் காட்டில் ஆண்புலி தன் பெண்புலி குட்டிப்போட்டுப் பசியுடன் இருப்பதை எண்ணி அதற்கு இரை தேடிவரச் செல்லும் அதே மலையிலுள்ள சிறு வழியில் சொல்கிறார். அதனை எண்ணும்போது பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

புறம் 338 செய்தி[தொகு]

  • துறை - மகட்பாற்காஞ்சி (அழகிய மகள் ஒருத்தியை மணக்க விரும்பியவரோடு காஞ்சிப்போர்)

மன்னன் ஒருவனின் ஓரெயில் கோட்டை கடலுக்கு நடுவில் காய்ந்து தோன்றும் மரக்கலம்(கப்பல்) போலத் தோன்றிற்று. அவன் மோந்தை போல் அழகுள்ள தன் மகளை மூவேந்தர் வந்து கேட்டாலும் பணிந்தால் அல்லது தரமாட்டானாம்.

மூவேந்தர் யாருக்கும் தலைவணங்குவதில்லை. இவனோ வணங்கினால்தான் தன் பெண்ணைத் தருவான். (இவள் நிலை என்ன ஆகுமோ) - என்கிறது பாடல்.

போந்தை[தொகு]

போந்தை ஏர் பரந்த புன்செய் வயல்களையும், நீர் பரந்த நன்செய் வயல்களையும், நெல் மலிந்த வீடுகளையும், பொன் மலிந்த தெருக்களையும், பூத்துக் குலுங்கும் பன்மலர்க் காடுகளையும் கொண்டு அழகுடன் திகழ்ந்தது.

போந்தை அரசன் நெடுவேள் ஆதன்[தொகு]

இக்காலத்துப் போத்தனூர் சங்ககாலத்தில் போந்தை என்னும் மரூஉப்பெயராலும் வழங்கப்பட்டது. நெல் விளையும் கழனியாக விளங்கிய இந்த ஊரைச் சங்ககாலத்தில் வேளிர்குடியைச் சேர்ந்த ஆதன் என்பவன் ஆண்டுவந்தான்.

மூவேந்தரின் குடிப் பூ[தொகு]

வேந்தர் தம் சென்னியில் வேம்பு, ஆர், போந்தை என்னும் மூன்று பூக்களைத் தம் குடியின் அடையாளப் பூக்களாக அணிவர். (பாண்டியனுக்கு வேம்பு. சோழனுக்கு ஆர் என்னும் ஆத்தி. சேரனுக்குப் போந்தை என்னும் பனை)