குடுமியான்மலை இசைக் கல்வெட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குடுமியான்மலை இசைக் கல்வெட்டு என்பது, தமிழ் நாட்டின், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குடுமியான்மலை என்னும் இடத்தில் காணப்படும் இசைத் தகவல்களைக் கொண்ட ஒரு கல்வெட்டு ஆகும். குடுமியான்மலை புதுக்கோட்டை நகரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ள ஒரு சிற்றூர். இவ்வூரில் உள்ள சிகாநாதசுவாமி கோயிலிலேயே மேற்படி கல்வெட்டுக் காணப்படுகிறது. இங்குள்ள பாறைச் சரிவு ஒன்றில், 13 அடி x 14 அடி இடப்பகுதியில் இக்கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. தேவநாகரி எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ள இக்கல்வெட்டின் இறுதியில் சில தமிழ்ச் சொற்களும் உள்ளன. இது 1904ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், இசை தொடர்பான இதன் முக்கியத்துவம் ஏறத்தாழ 27 ஆண்டுகளுக்குப் பின்பே உணரப்பட்டது. 1931ல் டி. என். இராமச்சந்திரன் என்பார் இதன் இசைசார்ந்த சிறப்புக் குறித்து அறிஞர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.[1]

இக்கல்வெட்டு பல்லவ அரசனான முதலாம் மகேந்திரவர்மன் காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது. இம்மன்னன், ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன். தமிழிசை தனது அடையாளத்தை இழப்பதற்குக் காரணமானது எனச் சில தமிழிசை அறிஞர்கள் கருதும் 13ம் நூற்றாண்டு இசை நூலான சாரங்கதேவரின் சங்கீத இரத்தினாகாரத்துக்கு[2] முற்பட்டது என்பதால், தமிழிசை குறித்த ஆய்வுகளில் இக்கல்வெட்டு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

கல்வெட்டு[தொகு]

இந்தக் கல்வெட்டு 38 கிடையாக அமைந்த இசைக் குறியீடுகளைக் கொண்ட வரிகளைக் கொண்டது. இடமிருந்து வலமாக வாசிக்கப்படக்கூடிய ஒவ்வொரு வரியிலும் 64 எழுத்துக்கள் உள்ளன. இந்த எழுத்துக்கள் 16 குழுக்களாக அமையும் வகையில் ஒவ்வொரு நான்கு எழுத்துக்களுக்கும் அடுத்து ஒரு சிறு இடைவெளி விடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு வரிகள் கிடைக் கோடுகளால் 7 பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு முதல் ஏழு வரையான வரிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவினதும் தலைப்பு குறியீடுகளின் இடப்பக்க நிரல் ஒன்றில் காட்டப்பட்டுள்ளது. இந்த நிரலின் மேற்பகுதியில், சிவனுக்கு வணக்கம் செலுத்தும் சிறிய பகுதி உள்ளது. அடிப்பக்கத்தில் சமசுக்கிருதத்தில் ஒன்றும் தமிழில் ஒன்றுமாக இரண்டு குறிப்புக்கள் உள்ளன.[3]

மேற்குறிக்கப்பட்ட தலைப்புக்கள் அவ்வப் பிரிவுகளில் காட்டப்பட்டுள்ள இசைக் குறியீடுகளைனால் குறிக்கப்படும் இராகத்தின் பெயர்கள் ஆகும். கல்வெட்டில் தரப்பட்டுள்ள ஏழு இராகங்களினதும் பெயர்கள் பின்வருமாறு:

பிரிவு 1 - மத்யமகிராம
பிரிவு 2 - சட்ஜகிராம
பிரிவு 3 - சாடவ
பிரிவு 4 - சதாரித
பிரிவு 5 - பஞ்சம
பிரிவு 6 - கைசிகமத்யம
பிரிவு 7 - கைசிக

இக்கல்வெட்டில் தரப்பட்டுள்ள இசைக் குறியீடுகளுக்கு 34 வெவ்வேறு எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் ஏழு சுரங்களைக் குறிக்கும் ச், ர், க் (G), ம், ப், த், ந் என்னும் மெய்களுடன் அ, இ, உ, எ ஆகிய உயிர்கள் சேரும்போது வருகின்ற 28 எழுத்துக்களும், புறம்பாக அ, உ, எ, க (K), கு (K), கெ (K) ஆகிய எழுத்துக்களும் உள்ளன. இந்த 34 எழுத்துக்களும் வருமாறு:

க (G) க (K)
சி ரி கி - மி பி தி நி -
சு ரு கு மு பு து நு கு
செ ரெ கெ மெ பெ தெ நெ கெ

இக்குறியீடுகள் எதைக் குறிக்கின்றன என்பது குறித்துப் பலரும் பல்வேறு வகையான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். எனினும், தெளிவான முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

ஆய்வுகள்[தொகு]

முதன் முதலில் 1914ல் இந்தக் கல்வெட்டை வாசித்து வெளியிட்டவர் பி. ஆர். பாண்டார்க்கர். இவர், இக்கல்வெட்டு இந்திய இசைக் குறியீடுகளுடன் கூடிய மிகப் பழைய மூலங்களில் ஒன்று என்ற அளவில் இதன் முக்கியத்துவத்தை அறிந்திருந்தார் எனினும், இதிலுள்ள வழமைக்கு மாறான அம்சங்கள் சிலவற்றை அவரால் விளக்க முடியவில்லை. இவருக்குப் பின்னர் சி. மீனாட்சி (1938), விபுலானந்த அடிகள் (1947), ஆர். சத்தியநாராயணன் (1957), பி. சாம்பமூர்த்தி (1959), வி. பிரேமலதா (1959), ஜே. ஆர். மார் (1972), எஸ். சீதா (1979), டி. ஆர். விட்டசு (1979), கௌரி குப்புசாமி (1984), என். அரிகரன் (1984) ஆகியோரும் குடுமியான்மலைக் கல்வெட்டுக்குறித்துத் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். முதலில் இக்கல்வெட்டுப் பற்றிய விரிவான ஆய்வொன்றை நிகழ்த்தியவர் விபுலானந்த அடிகள். இவரது யாழ் நூலில், இது குறித்த விரிவான விளக்கங்களையும் தமது கருத்துக்களையும் அவர் முன்வைக்கிறார். டி. ஆர். விட்டசு மேலும் விரிவாகப் புதிய கண்ணோட்டத்தில் ஆராய்ந்து கருத்துக்களை வெளியிட்டுள்ளதுடன்,[4] கல்வெட்டில் காணப்படும் குறியீடுகளை மேலைநாட்டு இசைக்குறியீட்டு முறைக்குப் பெயர்த்தெழுதித் தனது ஆய்வுக் கட்டுரையில் தந்துள்ளார்.[5]

பாண்டார்க்கர், இக்கல்வெட்டிற் காணும் இசைக் குறியீடுகள் வீணை போன்ற நரம்புக் கருவிக்கானது என்றும், கல்வெட்டிலுள்ள தலைப்புக்களில் காணப்படும் "சதுஸ்பிரகாரஸ்வராகமா" (நான்கு மீட்டல்கள் மூலம் உருவாகும் சுரங்களின் அதிகாரபூர்வ உரை) என்னும் சொல்லைச் சான்று காட்டி குறியீடுகளில் காணப்படும் அ, இ, உ, எ என்னும் நான்குவித உயிரேற்றம் நான்கு விதமான மீட்டும் முறைகளைக் குறிக்கக்கூடும் எனவும் கருதினார். விபுலானந்தரும் வேறு சில ஆய்வாளரும், மேற்படி குறியீடுகளில் உள்ள உயிரேற்றம் சுரத்தான வேறுபாடுகளைக் குறிக்கின்றன என எடுத்துக்கொண்டே தமது ஆய்வுகளைச் செய்துள்ளனர். இதை அடிப்படையாகக் கொண்டு விபுலானந்தர், இக்கல்வெட்டில் சொல்லப்பட்ட இராகங்களின் உருவத்தைக் கண்டறியவும் முயன்றுள்ளார். ஆனால், விட்டசு இந்த உயிரேற்றம், சுரத்தான வேறுபாடுகளைக் குறிக்கவில்லை என்று சான்றுகளைக் காட்டி வாதிப்பதுடன், அவை சுருதி வேறுபாடுகளைக் காட்டி நிற்கின்றன என்னும் கருத்தை முன்வைக்கிறார்.

கல்வெட்டின் இறுதியில் தமிழில் "(எ)ட்டிற்கும் ஏழிற்கும் (இ)வை உரிய" என்னும் குறிப்புக் காணப்படுகிறது. இக்கல்வெட்டுக் குறியீடுகள் நரம்பிசைக் கருவிகளுக்கு உரியவை என்பதால், எட்டு, ஏழு என்பன எட்டு நரம்புகள், ஏழு நரம்புகள் கொண்ட கருவிகளைக் குறிப்பதாக மீனாட்சி கருதுகிறார். ஆனால், விட்டசு இதைத் தாளத்தோடு தொடர்புள்ள ஒன்றாகக் கருதுகிறார்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Premalatha, V., Kudumiyamalai Inscription on Music, Heritage Treasure. 2017 சனவரி 01 அன்று பார்க்கப்பட்டது.
  2. மம்மது, நா., தமிழிசை வேர்கள், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி, 2008. பக். 70
  3. Widdes, D. R., The Kudumiyamalai inscription: a source of early Indian music in notation, Musica Asiatica, Oxford University Press, London, 1979. p. 117
  4. பாஸ்டின், மார்கரெட்., இன்னிசை யாழ் (விபுலானந்தரின் யாழ் நூல் ஒரு பார்வை), கலைக்காவிரி, 2006. பக். 304, 305
  5. Widdes, D. R., The Kudumiyamalai inscription: a source of early Indian music in notation, Musica Asiatica, Oxford University Press, London, 1979. pp. 104 - 150