உள்ளடக்கத்துக்குச் செல்

காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காரிக்கண்ணன் என்று தனித்தும், காரிக்கண்ணனார் என்று ‘ஆர்’விகுதி சேர்த்தும், காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்று ஊர்ப்பெயரை முன்னால் ஒட்டியும் அறியப்படுகிற இப்புலவர் சங்க இலக்கியங்களில் பத்துப் பாடல்களைப் பாடியிருக்கிறார். இவற்றில் ஐந்து பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. மற்ற ஐந்து பாடல்களில் மூன்று அகநானூற்றிலும் (107, 123, 285) ஒன்று நற்றிணையிலும் (237) ஒன்று குறுந்தொகையிலும் (297) உள்ளன.அகப்பாடலாயினும், புறப்பாடலாயினும், சமூகம், வரலாறு, கற்பனைவளம் ஆகியவற்றின் கலவையாக அவற்றைத் தரும் புலவர்களில் ஒருவராகவே காவிரிப்பூம்பட்டினத்துக்காரிக்கண்ணனார் விளங்குகிறார். எளிய சொற்கள்; இனிய கருத்துக்கள் இவரது பாடல்களின் சிறப்பு.[1]

பெயர் விளக்கம்[தொகு]

காரி என்னும் சொல் நீல நிறம் கொண்ட நஞ்சினை உணர்த்தும். இந்தச் சொல் ஆகுபெயராய் நஞ்சை உண்ட கடவுளை உணர்த்துவதாயிற்று.[2] சிவபெருமான் முப்புரம் எரித்த கண்ணினை உடையவர். எனவே காரிக்கண் என்பது சிவபெருமானின் கண். இந்தப் புலவர் பெயர் இவ்வாறு சிவபெருமானைக் குறிக்கும் புதுமையானப் பெயர்த்தொடரைக் கொண்டுள்ளது. மற்றும் காரி என்னும் கருநிறத்தைக் குறிக்கும் சொல் கறுப்பு என்னும் வடிவில் சினத்தைக் குறிக்கும்.[3] செந்நிறத்தால் மட்டுமல்லாது சிவந்த கண்ணாலும் இறைவன் சிவன் எனபட்டதை இங்கு ஒப்பிட்டு உணர்ந்துகொள்ளவேண்டும். மற்றும் உருத்திரங்கண்ணனார் என்னும் பெயரையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

இவரால் பாடப்பட்ட அரசர்கள்[தொகு]

பிட்டங்கொற்றன்[தொகு]

கருவூரை அடுத்த புகழூரில் சங்ககாலத் தமிழ்க் கல்வெட்டுகள் உள்ளன. அந்தக் கல்வெட்டை சேரமன்னன் கோஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ சமணத் துறவிகளுக்கு அங்குப் படுக்கை அமைத்துத் தந்ததைக் குறிப்பிடுகிறது. அந்தப் படுக்கைகள் இன்னின்னாருக்கு வழங்கப்பட்டுள்ளன என்னும் பெயர்களும் படுக்கையின் தலைமாட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. படுக்கையின் தலைமாட்டில் 'பிட்டன்', 'கொற்றன்' என்னும் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

பிட்டங்கொற்றனின் படை[தொகு]

வேந்தன் படையெடுத்துச் செல்லும்போது பிட்டங்கொற்றன் தன் படையை முன்னடத்திச் செல்வானாம். வேந்தன் வெற்றி பெற்றுத் திரும்பும்போது தன் படையைப் பின்தங்கி வரும் கூழைப்படையாக வைத்துக்கொள்வானாம்.

இளம்பல் கோசர்[தொகு]

இளம்பல் கோசர் முருக்க மரத்தை நட்டு அதன்மீது வேலைப் பாய்ச்சியும், அம்பு எய்தும் போர்ப்பயிற்சி செய்வார்களாம். பிட்டங்கொற்றன் கோசர்படை தாக்கும்போது அவர்களுக்கு ஈடுகொடுக்கும் முருக்கமரம் போல் நிற்பானாம்.

புறம் 169

பிட்டங்கொற்றனின் கொடை[தொகு]

புலவர் பிட்டங்கொற்றனிடல் பரிசில் வேண்டியபோது அவரது கொள்கலம் நிறையும்படி கொடுத்தானாம். அத்துடன் அவன் விரும்பும் பரிசுகளையும் வழங்கினானாம். இப்படி இவன் வழங்குவது இந்தப் புலவர்க்கு மட்டும் அன்றாம். எல்லாருக்கும் கொடுப்பானாம்.

புறம் 171

நன்மாறன்[தொகு]

பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் - புறம் 57

இந்த மாறன் வெற்றிகளைப் புலவர் புதுமையான முறையில் பாராட்டுகிறார். அத்துடன் தன் கருணை உள்ளத்தையும் புலப்படுத்துகிறார்.
வல்லவராயினும், வல்லவர் அல்லராயினும் புகழ்பவர்களுக்கெல்லாம் வேண்டியன எல்லாவற்றையும் தரும் மாயோன் போன்ற புகழ் கொண்ட மாற! உனக்கு ஒன்று கூறுகிறேன் கேள்! நீ பகைவர் நாட்டைக் கொள்ளும்போது உன் படைவீரர்கள் அந்நாட்டு விளைச்சலையெல்லாம் எடுத்துக்கொண்டாலும் எடுத்துக்கொள்ளட்டும். அவர்களின் ஊரை எரித்தாலும் எரிக்கட்டும். பகைவரைக் கொன்றாலும் கொன்று குவிக்கட்டும். எது வேண்டுமானாலும் செய்யட்டும். பகையரசர்களின் காவல்மரத்தை மட்டும் வெட்டவேண்டாம். உன் யானைகளை அந்நாட்டில் கட்ட இடம் இல்லாமல் போய்விடும் என்கிறார். (வென்ற நாட்டைப் பாழாக்கக் கூடாது என்பது புலவரின் உள்ளக் கிடக்கை.)

பெருந்திருமாவளவனும், பெருவழுதியும் ஒருங்கு இருந்தபோது[தொகு]

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கு இருந்தாரைப் பாடிய பாடல் புறநானூறு 58.

சோழன் இருக்கும் இடத்துக்குப் பாண்டியன் வந்திருந்தான். புலவர் சோழனை விளித்து இருவரையும் வாழ்த்துகிறார்.

இடப்புறம்-பனைக்கொடியோன். வலப்புறம்-திருமால்

நீ காவிரிக் கிழவன். இவன் முன்னோர் புகழைக் காப்பாற்றும் பஞ்சவர் ஏறு. நீ அறம் துஞ்சும் உறந்தை அரசன். இவன் நெல்லும் நீரும் எல்லாருக்கும் பொது பொது என்று எண்ணி (பொதியமலை) சந்தனம், (கொற்கை) முத்து, முழங்கும் முரசு மூன்றையும் வைத்துக்கொண்டு ஆளும் தமிழ்கெழு வேந்து. நீ பனைக்கொடி கொண்ட பலராமன் போன்றவன். இவன் சக்கரத்தைக் கொண்ட திருமாலைப்] போன்றவன். இப்படி இருபெருந் தெய்வங்கள் ஒருங்கிருப்பது போன்ற உங்களைக் காண்பது போன்ற இனிய காட்சி வேறு உண்டோ?

இன்னும் கேள். உங்களில் ஒருவர் மற்றவருக்கு உதவினால் இந்த உலகம் முழுவதும் உங்கள் கையில் இருக்கும். நீங்கள் நல்ல போலவும், நயவ போலவும் பகைவர் சொல்வனவற்றை நம்பாதீர்கள். பிறருடைய எல்லாக் குன்றுகளிலும் உன் புலியையும், இவன் கெண்டைமீனையும் சேர்த்துப் பொறிக்கலாம்.

தருமமோடு இயல்வோள்[தொகு]

இடுப்பில் பொன்னணியுடன் ஈகைத் தருமம் செய்துகொண்டிருக்கும் இவள் தொல்குடி மன்னன் ஒருவனின் மகள். முன்னாள் பெண் கேட்டு வந்த வேந்தரை இவளது தந்தை குருதிக்களமாக்கி ஓட்டிவிட்டான். போரின்போது இவளது தந்தை பட்ட புண்கூட இன்னும் ஆறவில்லை. அதற்குள் நீயும் ஒரு வேந்தனாயிருந்து பெண் கேட்டு வந்தால் எப்படி? என்கிறார் புலவர். - இப்பாடல் மகட்பாற்காஞ்சி என்னும் துறையைச் சேர்ந்தது.

புறம் 353

அகத்திணைப் பாடல்கள்[தொகு]

என் தோழியும் வரும்[தொகு]

தலைவன் பிரிவு உணர்த்துகிறான். என்தோயும் உன்னுடன் வரும் என்று தோழி குறிப்பிடுகிறாள். ஒவ்வொரு நாளும் பலவாறாக எண்ணிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு இங்கு இருக்கும் தன் துன்பம் தீர உன்னுடன் வரும் என்கிறாள். புலி தின்று எஞ்சிப் பாறைமீது கிடக்கும் மான் கறி, மூங்கில்நெல் அரிசி, பசு வெண்ணெய், ஆகியவற்றைக் கலந்து சமைத்துத் தேக்கிலையில் பகிர்ந்தளிக்கும் வடுகர் வாழும் பகுதியில் நீ செல்லும்போது தலைவி உடன் வரலாமே என்கிறாள். வடுகரின் சிறுவர்கள் வில்லெய்து இரும்பை இலையைப் பூவுடன் தன் பகடுகளுக்கு, அவற்றை உண்ண வரும் மான்களை ஓட்டிவிட்டு, ஊட்டும் வழியில் நீ செல்லும்போது தலைவி உடன் வருவதில் இன்னல் இல்லை என்கிறாள்.

அகம் 107

ஆடாப் படிவத்து ஆன்றோர்[தொகு]

அக்காலத்தில் சமணத் துறவிகள் நீராட கோலத்துன் வாழ்ந்தனர். இவர்கள் இங்கு 'ஆடாப் படிவத்து ஆன்றோர்' என்று குறிப்பிடப்படுகின்றனர். இவர்கள் சரியாக உண்ணாமையால் இவர்களின் வயிறு வற்றிப்போய்க் கிடந்ததாம்.

பொருளீட்டச் செல்லும் வழியில் தலைவன் தன் நெஞ்சோடு பேசுகிறான். காட்டு யானை ஆடாப் படிவத்து ஆன்றோர் போல காட்டிலுள்ள சின்னச் சின்னப் பாதைகளிலெல்லாம் செல்லுமாம். அது போலத் தலைவன் அலைகிறானாம்.

சோழர் காவிரி கடல் மண்டு பெருந்துறை[தொகு]

இத் தொடர் காவிரிப்பூம் பட்டினத்தைக் குறிக்கும். இந்தக் கடல்துறையில் அலை கரைநேறி மீள்வது போலத் தலைவன் நெஞ்சு அலைமோதுகிறதாம். தலைவியை விட்டுவிட்டுச் செல்லவும் மறுக்கிறதாம். செல்லாவிட்டால் வறுமையில் வாடவேண்டுமே என்று பொருளீட்டச் செல்லவும் செய்கிறதாம்.

அகம் 123

இவளும் நம்மொடு வரூஉம்[தொகு]

காதலர் சொல்கிறார். நீயும் அவரோடு செல்லப்போகிறாயாம். நம்மை விட்டுவிட்டுச் செல்லப்போகிறார் என்று நினைத்தோமே! அது இல்லை. இனி வருந்தவேண்டியதில்லை. ஆண்செந்நாய் தன் பெண்செந்நாய்க்குப், பெண்மான் அலற அதன் ஆண்மானின் கால்தொடையிலுள்ள தசையைப் பிடுங்கிக்கொண்டு சென்று தரும் வழியில் அழைத்துச் செல்வாராம். அங்கு வாழும் வம்பலர் வேங்கைப்புலியின் தோல் கோடு போல் கிழிந்துள்ள துணிக்குடையை நிழலுக்காக வழுயில் நட்டிருப்பார்களாம். பருந்து அதன்மேல் ஏறியமர்ந்து இரை தேடுமாம். தோழி! வருக! அவரைத் தழுவுக! - என்கிறாள் தோழி.

உண்மையில் தலைவனுடன் தலைவியைப் போகச் சொல்கிறாளா, போக வேண்டாம் என்கிறாளா? தலைவிதான் தீர்மானிக்க வேண்டும்.

அகம் 285

புணர்ந்து உடன்போதல்[தொகு]

மறவர் நீயா நானா என்னும் பகையை மறந்து வழியில் புதிதாகச் செல்வோரை மேட்டுநிலத்தில் அமைத்திருந்த தம் பதுக்கைக்கு அழைத்துச் செல்வதைக் கண்டேன். எனவே உனக்கும் உன் காதலனுக்கும் திருமணம் நடக்கப்போகிறது என்று தோழி தலைவிக்குக் கூறுகிறாள்.

குறுந்தொகை 297

அண்டிரன் நல்கும் யானை[தொகு]

தன்னை நாடி வருபவர்களுக்கு வழங்குவதற்காக வள்ளல் ஆய் அண்டிரன் தொகுத்து வைத்திருக்கும் யானைக்கூட்டம் போல மழைமேகம் பொழிவதற்காக வானில் ஏறுகிறது. இன்னும் திரும்பி வரவில்லையே என்று தலைவி தலைவன்மீது ஊடல் கொள்ளவில்லையே என்று தலைவியின் நற்பண்பை வியந்து கூறுகிறாள் தோழி.

நற்றிணை 237

மேற்கோள்கள்[தொகு]

  1. "சங்கப்புலவர்கள் - காரிக்கண்ணனார்". தீக்கதிர். 28 அக்டோபர் 2013. p. 8. Archived from the original on 2014-01-18. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2013.
  2. காரி உண்டிக் கடவுளது இயற்கையும், (மலைபடுகடாம் 83)
  3. கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள. (தொல்காப்பியம் 2-372, உரியியல்)

வெளி இணைப்புகள்[தொகு]