காமினி ராய்
காமினி ராய் | |
---|---|
பிறப்பு | 12 அக்டோபர் 1864 வசந்தா, பாரிசால் |
இறப்பு | 27 செப்டம்பர் 1933 ஹசாரிபாக் |
பணி | கவிஞர், அறிஞர் |
வாழ்க்கைத் துணை | கேதார்நாத் ராய் |
காமினி ராய் (அக்டோபர் 12, 1864 – செப்டம்பர் 27, 1933) ஒரு முன்னணி வங்காளப் பெண் கவிஞர், சமுதாயப் பணியாளர் மற்றும் பெண்ணியவாதி. இவர் இந்தியாவின் முதல் பெண் முதுகலைச் சிறப்புப் பட்டதாரி ஆவார்.[1]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]காமினி ராய் கிழக்கு வங்காளத்தில் பேக்கர்குஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தா கிராமத்தில் அக்டோபர் 12, 1864ல் பிறந்தார். இப்பொழுது அந்த ஊர் வங்காளதேசத்தில் பாரிசால் மாவட்டத்திலுள்ளது. காமினி கொல்கத்தாவிலுள்ள பெத்தூன் பள்ளியில் படித்தார். 1880ல் நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்று பெத்தூன் கல்லூரியில் 1883ல் எஃப். ஏ (ஃபர்ஸ்ட் ஆர்ட்ஸ்) பட்டம் பெற்றார். 1886ல் அதே கல்லூரியில் சமசுகிருதத்தில் சிறப்புப் பட்டம் படித்து முடித்தார். இந்தியாவிலேயே சிறப்புப் பட்டம் பெற்ற முதல் பெண் இவர் தான். பெத்தூன் கல்லூரியில் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார்.[1] கடம்பினி கங்கூலி அக்கல்லூரியில் இவருக்கு மூன்றாண்டுகளுக்கு முன் படித்தவர். அபலா போஸ் பெத்தூன் பள்ளியில் இவருடன் படித்தவர்.
காமினி ராய் வங்காளத்தைச் சேர்ந்த மேல்தட்டுக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை சாந்தி சரண் சென் ஒரு நீதிபதி, பிரம்ம சமாசத்தின் முன்னணித் தலைவர்களுள் ஒருவர் மற்றும் எழுத்தாளர். இவரது சகோதரர் நிசித் சந்திரா சென் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞராகவும் பின்னர் கொல்கத்தாவின் மேயராகவும் இருந்தவர். இவரது சகோதரி ஜாமினி நேபாள அரச குடும்பத்தின் குடும்ப மருத்துவர். 1894ல் காமினி, கேதார்நாத் ராயை மணந்தார்.[1]
இவருக்கு சிறு வயதிலேயே இலக்கியத்தில் அதிக ஈடுபாடிருந்தது. தனது எட்டு வயதிலேயே கவிதைகள் எழுத ஆரம்பித்தார். இவரது முதல் கவிதைப் புத்தகம் அலோ ஓ சாயா 1889ல் வெளியானது.[1] செப்டம்பர் 27, 1933ல் இவர் காலமானார்.
பெத்தூன் பள்ளியும் கல்லூரியும் காமினி ராயால் பெருமை அடைந்தன. காமினி ராய் (1864 -1933) முதல் பெண் பாடலாசிரியர். 1880லிருந்து கவிதைகள் எழுத ஆரம்பித்தார். 1889ல் பிரசுரமான இவரது அலோ சாயா, பெண்களின் ஆழமான சுயவெளிப்பாட்டினைக் காட்டும் அரிய உணர்வுகளால் இலக்கிய உலகத்தில் ஒரு பெரிய அலையை ஏற்படுத்தியது... கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் எழுத்துலகில் இருந்த காமினி ராய்க்குத் தங்களது சொந்த படைப்புகளால் வங்காளத்தின் சமூக, கலை, இலக்கிய வாழ்வை வளப்படுத்திய புதிய பெண்கள் தலைமுறையைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது[2]
காளிதாஸ் நாக்
சமுதாயப் பணிகள்
[தொகு]பெண்ணியவாதியாக
[தொகு]பெண்களுக்குக் கல்வி என்பது அறவே மறுக்கப்பட்டிருந்த அந்தக் காலத்தில் காமினி ராய் ஒரு பெண்ணியவாதியாக விளங்கினார். இவருடன் பெத்தூன் பள்ளியில் படித்த அபலா போஸ் காமினி ஒரு பெண்ணியவாதியாவதற்குத் தூண்டுதலாய் இருந்தவர். காமினி ராய், பன்முக முன்னேற்றமும் திறமைகளை வளர்ப்பதும்தான் பெண் கல்வியின் நோக்கமாக அமைய வேண்டுமென கல்கத்தாவிலுள்ள ஒரு பள்ளியில் பேசும்போது கூறினார்.[3]
தி ஃப்ரூட் ஆஃப் தி ட்ரீ ஆஃப் நாலெட்ஜ் என்ற வங்காளக் கட்டுரையில் அவர் கூறியது,
“ | பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடையாயிருக்கும் முக்கியக் காரணங்களில் ஒன்று ஆண்களின் அதிகார ஆசைதான்... பெண் விடுதலையை அவர்கள் மிகுந்த சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள். ஏன்? அதே பழைய பயம். எங்கே பெண்களும் தங்களைப் போல் உயர்ந்துவிடுவார்களோ என்ற பயம் தான்.[4] | ” |
காமினி ராய், 1921ல் பாங்கிய நாரி சமாஜின் சார்பில் மிருணாளினி சென், குமுதினி மித்ரா (பாசு) ஆகியோருடன் சேர்ந்து பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடினார். 1925ல் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. 1926ல் முதல் முறையாக வங்காளப் பெண்கள் வாக்களித்தனர்.[3] 1922-23 இல் பெண் தொழிலாளர் விசாரணை ஆணையத்தின் உறுப்பினராக இருந்தார்.[1]
இலக்கியவாதியாக
[தொகு]பிற எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் ஊக்குவிப்பதில் காமினி ஆர்வம் கொண்டிருந்தார். பாரிசாலில் வாழ்ந்த சுஃபியா கமல் என்ற இளம் பெண் தனது எழுத்துப் பணியைத் தொடர ஊக்கப்படுத்தினார். 1930ல் வங்காள இலக்கிய மாநாட்டிற்கு தலைவராக இருந்தார். 1932-33ல் பாங்கிய சாகித்திய பரிட்சத்தின் துணைத் தலைவராக இருந்தார்.[1]
இவர் 1909ல் தனது கணவரை இழந்தார். கணவரது மரணம் இவரை மிகவும் பாதித்தது. அத்துயரம் இவரது கவிதைகளிலும் பிரதிபலித்தது. ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளிலும் சமசுகிருத இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். கொல்கத்தாப் பல்கலைக்கழகம் ஜகத்தாரிணி தங்கப்பதக்கம் வழங்கி இவரைக் கெளரவித்தது.
காமினி ராய் தனது கடைசிகாலத்தில் சில ஆண்டுகள் ஹசாரிபாக் என்ற சிறிய நகரத்தில் வாழ்ந்தார். அங்கு மகேஷ் சந்திர கோஷ், திரேந்திரநாத் செளத்ரி போன்ற அறிஞர்களுடன் இலக்கியம் மற்றும் பிற தலைப்புகளில் கலந்துரையாடுவதில் தனது நேரத்தைக் கழித்தார்.
படைப்புகள்
[தொகு]இவரது இலக்கியப் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை:
- மகா ஸ்வேதா
- புண்டோரிக்
- பெளராணிகி
- தீப் ஓ தூப்
- ஜீவன் பதே
- நிர்மால்யா
- மால்யா ஓ நிர்மால்யா
- அசோக் சங்கீத்
- குஞ்சன் (குழந்தைகளுக்கானது)
- பாலிக சிக்கார் ஆதர்ஷா ( கட்டுரைப் புத்தகம்)[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Sengupta, Subodh Chandra and Bose, Anjali (editors), 1976/1998, Sansad Bangali Charitabhidhan (Biographical dictionary) Vol I, (வங்காள மொழியில்), p83, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8185626650
- ↑ Nag, Kalidas, Introduction to the Bethune School and College Centenary Volume, 1949.
- ↑ 3.0 3.1 Ray, Bharati, Women in Calcutta: the Years of Change, in Calcutta The Living City Vol II, edited by Sukanta Chaudhuri, Oxford University Press, first published 1990, paperback edition 2005, page 36-37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 019563697 X.
- ↑ This has been included in an English book Talking of Power - Early Writings of Bengali Women from the Mid-Nineteenth Century to the Beginning of the Twentieth Century edited by Malini Bhattacharya and Abhijit Sen.