கருணாகரப் பிள்ளையார் கோயிற் கல்வெட்டு
கருணாகரப் பிள்ளையார் கோயில் கல்வெட்டு என்பது, யாழ்ப்பாணத்தில் உள்ள உரும்பிராயில் அமைந்துள்ள கருணாகரப் பிள்ளையார் கோயிலில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டைக் குறிக்கும். ஒரே கல்லில் பொறிக்கப்பட்டிருந்தாலும், உண்மையில் இதில் இரண்டு கல்வெட்டுக்கள் அடங்கியுள்ளன. யாழ்ப்பாணத்தில் கோயில் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட கோயிலோடு தொடர்புள்ள கல்வெட்டுக்கள் இவை மட்டுமே.[1] இது ஒரு திரிசூலக்கல் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.[2]
அமைப்பு
[தொகு]இது ஒரு குட்டையான தூண் வடிவம் கொண்டது. இதன் உயரம் 2 அடி 4 அங்குலம். சதுரமான வெட்டுமுகம் கொண்ட இத்தூணின் ஒவ்வொரு பக்கமும் 11 அங்குல அகலமானது. இதில் கல்வெட்டுக் கொண்ட பகுதி மேலிருந்து ஏறத்தாழ ஒன்றரை அடியாகும். எஞ்சிய 10 அங்குல அளவு கொண்ட கீழ்ப்பகுதி நிலத்துள் புதைப்பதற்கு உரியது. முதல் கல்வெட்டுத் தூணின் நான்கு பக்கங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. இதில், எழுத்துக்கள் 11 வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் 11 வரிகளும் எழுதி முடித்த பின்னர் அடுத்த பக்கத்தில் எழுதத் தொடங்கும் வழமைக்கு மாறாக, இக்கல்வெட்டில் ஒவ்வொரு வரியும் தொடர்ச்சியாக நான்கு பக்கங்களிலும் பொறிக்கப்பட்ட பின்னரே அடுத்தவரி மீண்டும் முதல் பக்கத்தில் தொடங்குகிறது.[2] இரண்டாவது கல்வெட்டு தூணின் மேற்பக்கத்தில் உள்ளது. இது ஒரு சிறிய கல்வெட்டு.
வாசிப்பு முயற்சிகள்
[தொகு]முதன் முதலில் இக்கல்வெட்டுப் பற்றிய தகவலை வெளியிட்டவர் செ. இராசநாயகம். இவர் 1926ல் தான் எழுதிய Ancient Jaffna (பண்டைய யாழ்ப்பாணம்) என்னும் ஆங்கில நூலில் இத் தகவல் காணப்பட்டது. ஆனால், இதன் உள்ளடக்கம் பற்றிச் சரியான தகவல்கள் நூலில் இடம்பெறவில்லை.[3] எனினும், இது பற்றி அவர் எழுதிய விதத்தில் இருந்து அக்காலத்தில் இதை அவர் தானோ அல்லது பிறரைக் கொண்டோ வாசித்து இருக்கலாம் என்று தெரிகிறது. பிற்காலத்தில் இது கோயிலின் கருவறைக்குள் வைக்கப்பட்டது. இதனால், பிற்காலத்தில் இதை வாசித்து அறிந்துகொள்ள எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை. 1970ல் பேராசிரியர் கா. இந்திரபாலாவுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி மைப்பிரதி எடுக்க முயன்றாராயினும் அதன் அமைவிடம் காரணமாக முதற் கல்வெட்டின் முழுமையான மைப் பிரதியை எடுக்க முடியவில்லை. எனினும் இரண்டாவது கல்வெட்டின் பிரதியை எடுத்து வாசிக்க முடிந்தது. 1973ல் இடம்பெற்ற கோயில் திருப்பணி வேலைகளின் போது கல் முழுமையாக கருவறையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்ட போது இந்திரபாலாவினால் முறையாக மைப்பிரதி எடுக்க முடிந்தது.
காலம்
[தொகு]மேற் குறிப்பிட்ட இரண்டு கல்வெட்டுக்களுள் முதலாவது காலத்தால் முந்தியது. மற்றது பிற்காலத்தில் வெட்டப்பட்டது. முதலாவது கல்வெட்டு, 15 ஆம், 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு உரிய தமிழில் எழுதப்பட்டுள்ளது. ஆங்காங்கே வாசிக்க முடியாதபடி தெளிவற்று இருப்பதால் அதன் காலம் தொடர்பான முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால், பிரபவ வருடம் சித்திரை மாதம் என்பது தெளிவாகவே உள்ளது. எனினும் எந்த ஆண்டு என்பதை அறிவதற்கு இத்தகவல்கள் போதுமானவை அல்ல. ஆண்டு குறித்த பகுதிகள் வாசிக்க முடியாதபடி தெளிவற்று உள்ளன. எனினும், இராசநாயக முதலியார் இது 1567 ஆம் ஆண்டு எனத் தெளிவாகக் கூறுகிறார். அவர் காலத்தில் கல்வெட்டுத் தெளிவாக இருந்திருக்கக் கூடும். இரண்டாவது கல்வெட்டு 16 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியை அல்லது 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியைச் சேர்ந்தது என்பது இந்திரபாலாவின் கருத்து.
நோக்கமும், உள்ளடக்கமும்
[தொகு]முதல் கல்வெட்டுக் கோயில் ஒன்றுக்கு வழங்கப்பட்ட தானம் ஒன்று குறித்தது என்பது தெளிவானது. இதில் திரிசூலம் பொறிக்கப்பட்டு உள்ளதாலும், உள்ளே "திருச்சூல.." என்ற சொல் காணப்படுவதாலும், இது நிலத்தானம் குறித்ததே என்றும் ஊகிக்க முடியும்பொன்றுக்கு மேற்பட்ட தானம் வழங்கியவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருப்பதை ஆங்காங்கே தெளிவாக உள்ள பகுதிகள் மூலம் அறிந்துகொள்ள முடிந்தாலும், பெயர்களை அறிந்து கொள்ள முடியவில்லை. இராசநாயகம் "கருணாகரப் பிள்ளையார் கோயில்" என்பது கல்வெட்டில் குறிக்கப்பட்டு உள்ளதாகக் கூறுகிறார்.[3] எனவே இங்கு பேசப்படுவது அக் கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலத்தானத்தையே என்பது பொருந்தும். ஆனால், இந்திரபாலா வாசித்தபோது தெளிவான பகுதிகள் எதிலும் கோயிலின் பெயர் காணப்படவில்லை. இராசநாயகம் வாசித்த காலத்தில் இது தெளிவாக இருந்திருக்கலாம். கல்வெட்டின் இறுதியில் ஓம்படைக்கிளவி எனப்படும் பகுதி தெளிவாகவே உள்ளது. இதை, "இந்தப்படி சந்திராதித்த வரையும் நடக்கக் கடவதாகவும் இத்தன்மத்தை யாதாமொருவர் பொல்லாங்கு நினைத்தவர்கள் கெங்கைக் கரையிலே கோவதை செய்த பாவம் பெறக் கடவதாகவும்" என வாசித்துள்ளார்.[4]
குறிப்புகள்
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]- இந்திரபாலா, கா., உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயிலிலுள்ள கல்வெட்டுக்கள், உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயில் புனராவர்த்தன மகாகும்பாபிஷேக மலர், திருப்பணிச்சபை, 1973.
- Rasanayagam, C., Ancient Jaffna, Asian Educational Serveces, New Delhi, 1999 (First Edition: jaffna 1926)