ஓம்படைக்கிளவி (கல்வெட்டு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஓம்படைக்கிளவி என்பது கல்வெட்டியலில், கல்வெட்டு அமைப்பின் ஒரு பகுதியைக் குறிக்கும். இதை "முடிவுச் சொல்" எனவும் அழைப்பதுண்டு. கல்வெட்டின் உள்ளடக்கம் பொதுவாக மூன்று அல்லது நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்படுவதுண்டு. இவற்றில் இறுதிப் பகுதியின் ஒரு பகுதியே "ஓம்படைக்கிளவி" ஆகும்.

பெயர்[தொகு]

ஓம்படைக்கிளவி என்பது ஓம்படை, கிளவி என்னும் இரண்டு சொற்களின் சேர்க்கையால் உருவானது. ஓம்படை என்பது பாதுகாப்பு என்னும் பொருள் கொண்டது. கிளவி என்பது சொல்லைக் குறிக்கும். எனவே ஓம்படைக்கிளவி என்பது பாதுகாப்பின் பொருட்டுச் சொல்லப்படும் சொல்லைக் குறிக்கும். பழந்தமிழ் அகப்பொருள் இலக்கியத்தில், "தலைவியைப் பாதுகாத்துக்கொள்ளெனத் தலைவற்குத் தோழிகூறுங் கூற்று" ஓம்படைக்கிளவி எனப்பட்டது.[1]

கல்வெட்டில் ஓம்படைக்கிளவி[தொகு]

கல்வெட்டுக்களில் ஓம்படைக்கிளவியின் கூற்றுக்களில், கல்வெட்டில் கூறப்படும் தானங்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு, இத்தானத்தைப் பாதுகாப்பதனால் ஏற்படும் நன்மைகள், அவ்வாறு செய்யாமல் விடுவதனால் அல்லது அத்தானத்துக்குக் இடையூறு செய்வதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் போன்ற விபரங்கள் இடம்பெறும். இவ்வாறான விளைவுகள் அவ்வாறு குந்தகம் செய்வோருக்கு அச்சத்தையோ, அவமானத்தையோ ஏற்படுத்தும் வகையில் அமைவது உண்டு.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

வழங்கப்பட்ட தானங்களின் பயன்கள் நீண்டகாலம் நிலைத்திருக்க வேண்டும் என்பதைக் குறித்துக் காட்டும் பொருட்டு,

 • "கல்லும் காவேரியும் உள்ளமட்டும்"
 • "புல்லும் பூமியும் உள்ள மட்டும்"
 • "ஆத்துமணலும் ஆவாரம்பூவும் உள்ளமட்டும்"
 • சந்திரனும் சூரியனும் உள்ள மட்டும்"

போன்ற கூற்றுக்களை ஓம்படைக்கிளவியில் அமைப்பது உண்டு.[2]

தானத்தைப் பாதுகாப்பதினால் ஏற்படக்கூடிய நன்மையாக, அத்தகையோருக்கு மதிப்பு அளிக்கும் வகையில், "உங்கள் பாதங்கள் என்னுடைய தலைமேல்" போன்ற பொருளுடைய கூற்றுக்கள் ஓம்படைக்கிளவியில் இடம்பெறுவது உண்டு. பின்வருவன சில எடுத்துக்காட்டுகள்:

 • "அறம் ஓம்படைகளை காத்தார் செய்தார் பாதம் திறம்பாமல் சென்னிமேல் வைத்து"
 • "பன்மாஹேஷ்வர ரக்ஷை"
 • "இத்தன்மம் ரக்ஷிப்பார் ஸ்ரீ பாதம் என்றலை மேலன"
 • "ரக்ஷித்தாரடி என் தலைமேலின"

தர்மத்தைப் பாதுகாக்காமல் விடுபவன் அல்லது அதற்கு இடையூறு செய்பவர்கள் பெரும் பாவங்களைப் புரிந்ததற்கு ஈடான விளைவுகளைப் பெறவேண்டியிருக்கும் என்பதை,

 • "கங்கைக் கரையில் காராம்பசுவையும் மதாபிதாவையும் குருவையும் கொன்ற பாவத்திற் போகக் கடவார்"
 • "கங்கைக் கரையில் காராம்பசுவைக் கொன்ற பாவம் போகக் கடவார்"
 • "இது இறக்குவான் ஏழான் நரகத்துக் கீழான் நரகம் போவான்"
 • "இது மாறுவான் பிரம்மஹத்தி தோசம் கொள்வான்"

என்றவாறு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், சபிக்கும் பாணியிலும் கூற்றுக்கள் அமைவது உண்டு.[3]

குறிப்புக்கள்[தொகு]

 1. தமிழ்ப் பேரகராதியில் "ஓம்படைக்கிளவி" என்னும் சொல்லுக்கான பதிவு.]
 2. பவானி, மா.,கல்வெட்டு அமைப்பு, தமிழ் இணையக் கல்விக்கழக இணையத்தளத்தில்
 3. ஓம்படைக்கிளவி பற்றிய விளக்கமும், இலங்கைத் தமிழ்க் கல்வெட்டுக்களில் ஓம்படைக்கிளவியும் வரலாறு வலைப்பூவில்