கரிம ஆண்டிமனி வேதியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரிம ஆண்டிமனி வேதியியல் (Organoantimony chemistry) என்பது கார்பனும் ஆண்டிமனியும் வேதிப்பிணைப்பால் இணைந்திருக்கும் பிணைப்பைக் கொண்ட சேர்மங்களைப் பற்றிய வேதியியல் பிரிவு ஆகும். Sb(V) மற்றும் Sb(III) என்பவை இவற்றுடன் தொடர்புடைய ஆக்சிசனேற்ற நிலைகள் ஆகும். ஆண்டிமனியின் நச்சுத்தன்மை [1] கரிம வேதியியலில் கரிம ஆண்டிமனி சேர்மங்களின் நடைமுறைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது.[2]

கரிம ஆண்டிமனி(V) வேதியியல்[தொகு]

முன்னோடிச் சேர்மங்களான மூவிணைய ஆண்டிமனி சேர்மங்களிலிருந்து கரிம ஆண்டிமனி(V) (R5Sb) சேர்மங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை சிடிபோரேன்கள் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன.

Ph3Sb + Cl2 → Ph3SbCl2
Ph3SbCl2 + 2 PhLiPh5Sb

சிடிபோனியம் அயனியிலிருந்து சமச்சீரற்ற சேர்மங்களையும் பெறலாம்:

R5Sb + X2 → [R4Sb]+[X]
[R4Sb]+[X] + R'MgX → R4R'Sb

தொடர்புடைய இதே குழு 15 கரிமபிசுமத் சேர்மங்களைப் போலவே கரிம ஆண்டிமனி(V) சேர்மங்களும் ஓனியம் சேர்மங்களையும் யேட்டு ஒருங்கிணைவுச் சேர்மங்களையும் உருவாக்குகின்றன. பெண்டாபீனைல் ஆண்டிமனி சேர்மம் 200 பாகை செல்சியசு வெப்பநிலையில் முப்பீனைல்சிடிபைனாகவும் பைபீனைல்சிடிபைனாகவும் சிதைவடைகிறது. முக்கோண இரட்டைப்பட்டைக்கூம்பு மூலக்கூற்று வடிவியல் சேர்மமாகவும் இது உருவாகிறது. தொடர்புடைய பெண்டாமெத்தில் ஆண்டிமனி (Me5Sb) சேர்மங்களில் அனைத்து மெத்தில் புரோட்டான்களும் -100 பாகை செல்சியசு வெப்பநிலையில் புரோட்டான் அணுக்கரு காந்த ஒத்திசைவு நிறமாலையியலில் சமானமானவையாக உள்ளன. R4SbX சேர்மங்கள் இருபடிகளாக உருவாக முனைகின்றன.

கரிம ஆண்டிமனி(III) வேதியியல்[தொகு]

ஆண்டிமனி முக்குளோரைடுடன் கரிம இலித்தியம் அல்லது கிரிக்கனார்டு வினையாக்கியைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் R3Sb வகைச் சேர்மங்களை தயாரிக்கலாம். இவை சிடிபைன்கள் எனப்படுகின்றன.

SbCl3 + 3 RLi (or RMgCl) → R3Sb

குறிப்பிடத்தக்க சில வினைகள்:

R3Sb + Br2 → R3SbBr2
R3Sb + O2 → R3SbO
R3Sb + Na + NH3 → R2SbNa
R3Sb + B2H6 → R3Sb•BH3

சிடிபைன் சேர்மங்கள் யாவும் பலவீனமான இலூயிசு அமிலங்களாகும். எனவே இவை யேட்டு அணைவு சேர்மங்களாக உருவாவதில்லை ஆனால் இவை நல்ல நன்கொடையாளர் பண்புகளைக் கொண்டுள்ளன. எனவே இவை ஒருங்கிணைப்பு வேதியியலில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. R3Sb சேர்மங்கள் R5Sb சேர்மங்களை விட காற்று உணர்திறன் அதிகம் கொண்டவையாக உள்ளன.

ஆண்டிமனி மெட்டலோசீன்கள் இதற்காகவும் அறியப்படுகின்றன.  :

14SbI3 + 3 (Cp*Al)4 → [2Cp*Sb]+[AlI4] + 8Sb + 6 AlI3

Cp*-Sb-Cp* பிணைப்புக் கோணம் 154° ஆக உள்ளது.

வளைய சேர்மமான சிடைபோல் என்பது பிரோலின் கட்டமைப்பு ஒப்புமையாகும். இது தனித்துப் பிரிக்கப்படவில்லை என்றாலும் இதன் பதிலீட்டு வழிப்பெறுதிகள் அறியப்படுகின்றன.

கரிம ஆண்டிமனி(II) வேதியியல்[தொகு]

இருசிடிபைன்கள் Sb-Sb ஒற்றைப் பிணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளன. வெப்பப்படுத்தும்போது அல்லது குளிர்விக்கப்படும்போது இவை நிறமிழக்கின்றன. உதாரணமாக உருகுநிலையான 18.5 பாகை செல்சியசு வெப்பநிலையில் டெட்ராமெத்தில் இருசிடிபைன் வாயு நிறமற்றதாகவும் நீர்மம் மஞ்சள் நிறத்திலும், திண்மம் சிவப்பு நிறத்திலும் உள்ளன. உருகுநிலைக்கு கீழ் மீன்டும் மஞ்சள் நிறத்தை வெளிப்படுத்துகிறது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Filella, M. (2010). "Alkyl derivatives of antimony in the environment". Metal Ions in Life Sciences (Cambridge: RSC publishing) 7: 267–301. doi:10.1039/9781849730822-00267. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84755-177-1. 
  2. C. Elschenbroich, A. Salzer Organometallics : A Concise Introduction (2nd Ed) (1992) from Wiley-VCH: Weinheim. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-527-28165-7
  3. Organoantimony compounds with element-element bonds H.J. Breunig, R. Rosler Coordination Chemistry Reviews 163 (1997) 33-53
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரிம_ஆண்டிமனி_வேதியியல்&oldid=3354065" இலிருந்து மீள்விக்கப்பட்டது