உள்ளடக்கத்துக்குச் செல்

கந்நுதெளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கந்நுதெளி (kannutheli) என்பது இந்திய ஒன்றியம், கேரளத்தில் நடத்தப்படும் ஒரு பாரம்பரிய விளையாட்டு ஆகும். இது கர்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் நடத்தப்படும் கம்பளா விளையாட்டை ஒத்த ஒரு விளையாட்டு ஆகும். அறுவடை முடிந்து மாடுகளும், வேளாண் மக்களும் ஓய்வாக இருக்கும்போது போழுதுபோக்காக துவக்கப்பட்ட விளையாட்டான இது, கால ஓட்டத்தில் தனி விளையாட்டாக மாறியது. கேரள நாட்காட்டியில் சிங்ஙம் (ஆவணி) மாதத்தில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.[1]

இந்த விளையாட்டில் காளை+காளை, காளை+(ஆண்) எருமை ஆகியவற்றை நுகத்தடியில் பூட்டி சகதி நிறைந்த கழனியில் குறிப்பிட்ட தொலைவை வேகமாக கடப்பது ஆகும். முதலில் வரும் மாட்டுக்கும் ஓட்டி வருபவருக்கும் பரிசுகள் உண்டு. இந்த விளாயாட்டானது பாலக்காடு, மணப்புரம், கோழிக்கோடு, பட்டம்பி போன்ற பகுதிகளில் பிரபலமாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் போட்டிக்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் உண்டு என்றாலும் பொதுவான விதியாக வேகம் என்பது உள்ளது.[1]

மணப்புரம், கோழிக்கோடு, பட்டாம்பி பகுதிகளில் நடத்தப்படும் போட்டியானது வட்டத்தளி என்பதாகும். இதில் வயலைச் சுற்றி 200 மீட்டர் ஓடவேண்டும். பாலக்காட்டில் நடத்தப்படுவது நீளத்தளி என்பதாகும். இதில் நேராக 100 மீட்டர் ஓடவேண்டும். வெற்றிபெறும் மாட்டின் உரிமையாளருக்கும் மாட்டை ஓட்டுபவருக்கும் பணப்பரிசு உண்டு. போட்டியில் மாடுகளை ஓட்டிச் செல்பருக்கு பலத்த காயங்களும் ஏற்படுவதுண்டு.[1]

கந்நுதெளிக்காக பொதுவாக மைசூர் லம்பாடி காளைகள் பயன்படுத்துகின்றனர். காங்கேயம் காளைகளையும் பயன்படுத்துவதுண்டு. இந்தக் காளைகளை இதற்காகவே பிரத்தியேகமாக வளர்ப்பவர்கள் உள்ளனர். போட்டியில் கலந்துகொள்ளும் காளைகளுக்கும், போத்துவுக்கும் (எருமைக் கடா) தனியாக பயிற்சிகளும், சிறப்பு கவனிப்புகளும் உண்டு.[1]

கர்சாகர் தினமான (விவசாயிகள் நாள்) ஆவணி முதல் நாள் கோழிப்பாறையில் நடக்கும் கந்நுதெளியில் நூற்றுக் கணக்கான காளைகள் கலந்துகொள்ளும். அப்போது மூன்று பிரிவுகளில் மூன்று விதமான போட்டிகள் நடக்கும். மாடுகள் பிறக்கும்போதே அதற்கு பல் இருக்கும். அந்தப் பல் விழுந்து பிறகு முளைக்கும். பிறவிப் பல் விழாத மாடுகள் துணை இளையர் (சப் ஜூனியர்), பிறவிப் பல் விழுந்து இரண்டு முதல் நான்கு பற்கள் முளைத்திருந்தால் அது இளையர் (ஜூனியர்), ஆறு பற்களுக்கு மேல் முளைத்திருந்தால் அது மூத்தோர் (சீனியர்) என்ற பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 வெ. நீலகண்டன் (2015). தினகரன் தீபாவளி மலர் 2015. சென்னை: தினகரன். pp. 318–323.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்நுதெளி&oldid=3284140" இலிருந்து மீள்விக்கப்பட்டது