கணபதி (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணபதி (గణపతి)
நூலாசிரியர்சிலகமார்த்தி லட்சுமி நரசிம்மம்
உண்மையான தலைப்புగణపతి
நாடுஇந்தியா
மொழிதெலுங்கு
பொருண்மைஉயிரியல் நிகழ்வுகள்
வகைநகைச்சுவை புதினம்
வெளியீட்டாளர்மானசா பிராச்சுரனாலு
வெளியிடப்பட்ட நாள்
1920
ஊடக வகைஅச்சில் உள்ளது
ராஜமுந்திரியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்கள் பூங்காவில் சிலகமார்த்தி லட்சுமி நரசிம்மம் சிலை

கணபதி (Ganapati) (1920) என்பது சிலகமார்த்தி லட்சுமி நரசிம்மம் என்பவர் எழுதிய தெலுங்கு புதினம்.[1][2] இது நவீன தெலுங்கில் எழுதப்பட்ட முதல் தெலுங்கு புதினங்களில் ஒன்றாகும். மேலும்,ம் நவீன தெலுங்கு இலக்கியத்தின் உன்னதமான படைப்புகளில் ஒன்றாகவும் நவீன தெலுங்கு எழுத்தின் முதல் நகைச்சுவை புதினமாகவும் கருதப்படுகிறது.[3]

தலைப்பு[தொகு]

புதினத்தில் முக்கிய நாயகனின் பெயர் கணபதி. புதினம் கணபதி மற்றும் அவரது முந்தைய இரண்டு தலைமுறைகளின் (தாத்தா மற்றும் அப்பா) வாழ்க்கையை சித்தரிக்கிறது.

பின்னணி[தொகு]

1910-1920ல் நடந்த சமூக சூழலின் பின்னணியில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சுற்றி வரும் கதை, கன்யாசுல்கம் (இப்போது கைவிடப்பட்ட/தடைசெய்யப்பட்ட மணமகன் மணமகளின் தந்தைக்கு பணம் கொடுக்கும் பழக்கம்) நடைமுறையை நையாண்டியாக விமர்சிக்கிறது. படிப்பதற்கு நகைச்சுவையாகத் தோன்றினாலும், அடிப்படையான உண்மை பிராமணக் குடும்பங்களில் உள்ள கடுமையான வறுமையை புதினம் பிரதிபலிக்கிறது.

கதை[தொகு]

கதை சொல்பவர் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு இரவு உணவுக்காகக் காத்திருப்பதில் இருந்து கதை தொடங்குகிறது. ஏற்கனவே வெகுநேரமாகிவிட்டதால், இரசம் பரிமாறப்படும் வரை காத்திருந்து, மயங்கி விழுந்து கனவு காண்கிறார்.

கனவில் அவர் ஒரு குட்டையான, கொழுத்த மனிதனைக் காண்கிறார். அவர் தனது கதையை விவரிக்கிறார். மேலும், அதை உலகிற்கு வெளிபடுத்துமாறு கதை சொல்பவருக்கு அறிவுறுத்துகிறார். கதை கணபதியின் தாத்தா பாப்பையா சாஸ்திரி வசிக்கும் கிழக்கு கோதாவரியில் உள்ள மண்டப்பள்ளி என்ற கிராமத்தில் தொடங்குகிறது. பாப்பையா தனது கிராமத்தில் பல சிரமங்களை எதிர்கொள்கிறார், அதனால் அவர் மகாராட்டிடிராவில் உள்ள புனேவுக்குச் சென்று, பேஷ்வாக்களின் இராச்சியத்தில் வேலை செய்து கொஞ்சம் பணம் சம்பாதிக்கிறார். பின்னர், சொந்த ஊருக்கு வந்து கன்யாசுல்கம் செலுத்தி ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். ஒரு மகன் (கங்கதாருடு) பிறந்த பிறகு, பாப்பையா முதுமை காரணமாக இறந்து விடுகிறார்.

கங்கதாருடு (தெலுங்கு/சமசுகிருதத்தில் 'நீர் சுமப்பவர்' என்று பொருள்) அவரது தாயாருடன் கோதாவரி மாவட்டத்தின் மாவட்டத் தலைமையகமான காக்கிநாடாவுக்கு குடிபெயர்கிறார். இளம் வயதை அடைந்ததும், கங்கதாருடு குளத்தில் இருந்து வீடுகளுக்கு குடிநீர் விநியோகித்து சம்பாதிக்கத் தொடங்குகிறார். நாள் முழுவதும் உழைத்தாலும் குடும்பம் நடத்துவது சிரமமாக இருக்கிறது. பின்னர் கங்காதாருடுவின் தாய் இறந்துவிடுகிறார். இறுதியில் அவர் திருமணம் செய்து கொள்கிறார். அவரது மகன் கணபதி பிறந்தவுடன் விரைவில் இறந்துவிடுகிறார்.

அவர்களைக் கவனித்துக் கொள்ள யாரும் இல்லாததால், கணபதியின் தாய் தன் குழந்தையுடன் தன் சகோதரனின் கிராமத்திற்குச் செல்கிறாள். அண்ணன் வீட்டில் அவர்களுக்கு உணவும் தங்குமிடமும் கொடுக்கப்பட்டாலும் அண்ணனின் மனைவியால் கூடுதல் சுமையாகவே நடத்தப்படுகிறார்கள். சிறுவயதிலிருந்தே கணபதி கழுதை சவாரி செய்வது போன்ற வினோதமான மற்றும் நகைச்சுவையான செயல்களால் கிராமம் முழுவதையும் மகிழ்விக்கிறான். ஆரம்ப நிலையிலேயே பள்ளியை விட்டு வெளியேறி விடுகிறான். அவனுடைய செயல்களால் அவன் தன் தாயுடன் கிராமத்தை விட்டு வெளியேற வேண்டியதாயிற்று. பின்னர் அவர்கள் மற்றொரு கிராமத்தில் குடியேறுகின்றனர், அங்கு கணபதி குழந்தைகளுக்காக ஒரு பள்ளியைத் திறக்கிறார் (அவர் சரியாகப் படிக்கவில்லை என்றாலும்). கணபதிக்கு பொருத்தமான மணமகளைத் தேடும் கிராமத்து மக்கள் முயல்வதுடன் அடுத்தடுத்த காட்சிகள் நகைச்சுவை நிறைந்தவை. கணபதியின் தாயார் மற்ற ஊர் பெண்களுடன் தொலைதூர ஊர்களுக்கு புனித யாத்திரை சென்று அங்கேயே இறந்து விடுகிறார்.

கிராமவாசிகளின் நன்கொடையின் உதவியுடன் மணமகளின் தந்தைக்கு (அவர் உண்மையில் பெண்ணின் தந்தை அல்ல) கன்யாசுல்கம் செலுத்தி ஒரு பெண்ணை மணக்கிறார் கணபதி. ஆனால் அந்த பெண் ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிய வருகிறது. பெண்ணின் முதல் கணவர் கணபதி மீது தான் திருமணம் செய்த பெண்ணின் தந்தையுடன் சேர்ந்து வழக்குப் பதிவு செய்கிறார். கைதை தவிர்க்க அந்த கிராமத்தில் இருந்து கணபதி தப்பி ஓடுகிறார். இந்த புதினம் ஒரு வேடிக்கையான வகையில் முடிவடைகிறது, ஆசிரியர் திருமண விருந்தில் கையில் சூடான ரசத்தை பரிமாருபவர் ஊற்றுவதன் மூலம் தனது கனவிலிருந்து வெளியே வருகிறார்.

வானொலி தழுவல்[தொகு]

ஸ்தானம் நரசிம்ம ராவ் இந்தக் கதையை இதே கணபதி என்ற பெயரில் வானொலி நாடகமாக தயாரித்தார். இது அகில இந்திய வானொலியில் 1960கள் மற்றும் 1970களில் தெலுங்கு மொழியில் ஒலிபரப்பப்பட்டது. இந்த நகைச்சுவை நாடகத்தைக் கேட்பதற்காக வானொலிப் பெட்டிகளுக்கு அருகில் மக்கள் குழுவாகக் கூடியிருந்தது அந்த நாட்களில் மிகவும் வெற்றிகரமாக இருந்தது.

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணபதி_(புதினம்)&oldid=3790908" இலிருந்து மீள்விக்கப்பட்டது