உள்ளடக்கத்துக்குச் செல்

கடிதத்தாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1628ம் ஆண்டின் திறக்கப்பட்ட கடிதத்தாளில் எழுதப்பட்ட கடிதம். இதில் மடிப்புக்கள், முகவரி, புடைப்புருவ முத்திரை ஆகியவற்றைக் காணலாம். கடிதம் மறு பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

அஞ்சலியலில் கடிதத்தாள் என்பது அஞ்சல் நிர்வாகம் ஒன்றினால் வெளியிடப்படுகின்ற ஒரு அஞ்சல் எழுதுபொருள் ஆகும். கடிதம் எழுதக்கூடிய இந்தத்தாளை உரிய முறைப்படி மடித்து ஒட்டி, தேவையானால் அரக்கினால் முத்திரையிட்டுக் கடித உறை பயன்படுத்தாமல் அஞ்சலில் அனுப்ப முடியும். 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு முன் தாள்களில் கடிதங்களை எழுதி தாளின் எழுதப்படாத பின்பக்கம் வெளிப்புறம் வருமாறு மடித்து ஒட்டி வெளிப்பக்கத்தில் முகவரியை எழுதி அனுப்பும் வழக்கம் இருந்தது. அக்காலத்தில் கடிதப் பரிமாற்றங்களுக்குப் பயன்பட்ட இந்த முறையை அடியொற்றியே கடிதத்தாள் முறை உருவானது.

கடிதத்தாள் என்பது, கடித உறைகள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் பயன்பட்ட அஞ்சல்தலையிடப்படாத மடிப்புத்தாள் கடிதங்களையே குறித்தது. 19ம் நூற்றாண்டின் பின்பகுதிக்கு முன்னர் கடித உறைகள் பயன்பாட்டில் இருக்கவில்லை. பலநாடுகளில், கடித உறையையும் கூடுதல் தாளாகக் கருதிக் கட்டணம் அறவிடப்பட்டதால், அவ்வாறு அஞ்சல் அனுப்புவதற்கு கூடுதல் செலவானதே இதற்கான காரணம்.

முன்கட்டணம் செலுத்தப்பட்ட கடிதத்தாள்கள், அஞ்சல்தலை அச்சிடப்பட்டு அல்லது வேறு அடையாளம் இடப்பட்டு அஞ்சல் நிர்வாகங்களால் வெளியிடப்படுவதால் அவை அஞ்சல் எழுதுபொருட்கள் ஆகின்றன. முன்கட்டணம் அறவிடப்படுவதைக் குறிக்கும் அஞ்சல்தலை அச்சிடப்படாத கடிதத்தாள்களைத் தனியார் நிறுவனங்களும் வெளியிடுவது உண்டு. இவ்வாறான கடிதத்தாள்களில் கடிதம் அனுப்பும்போது அஞ்சல்தலை ஒட்ட வேண்டும். பெரும்பாலான நாடுகளின் அஞ்சல் நிர்வாகங்கள் ஏதோவொரு கட்டத்தில் கடிதத்தாள்களை வெளியிட்டுள்ளன. ஆனாலும், இப்போது கடித உறைகளில் கடிதம் அனுப்புவதே விரும்பப்படுவதால், பெரும்பாலானவை இப்போது வான்கடிதத்தாள் தவிர்ந்த கடிதத்தாள்கள் வெளியிடுவதை நிறுத்திவிட்டன.

வரலாறு

[தொகு]

முதல் அஞ்சல் எழுதுபொருளான ஏகியூ கடிதத்தாள், வெனிசின் அடையாளச் சின்னம் அச்சிடப்பட்டு 1608 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 1790ல் லக்சம்பர்க் 25 சதமமீட்டர் கடிதத்தாளை வெளியிட்டது. 1712–1870 காலப்பகுதியில் பிரித்தானியச் செய்திப் பத்திரிகை வெளியீட்டாளர்கள் அரசாங்கம் வழங்கிய தாள்களில் வண்ண முத்திரைகளை அச்சிட்டனர். 1840ல் மல்ரெடி கடிதத்தாள்கள் வெளியிடப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆசுத்திரேலியா கடிதத்தாள்களை வெளியிட்டது.[1] இக்காலத்தில் கடித உறைகள் மிக அரிதாகவே பயன்பட்டன. சிட்னி நகருக்குள் அஞ்சல் சேவைகளுக்கான முன்கட்டணத்துக்குச் சான்றாக மையிடாத புடைப்புருவ முத்திரையிட்ட கடிதத்தாள்களை நியூ சவுத் வேல்சு வெளியிட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. [1] பரணிடப்பட்டது 2012-05-03 at the வந்தவழி இயந்திரம் Linn's Stamp News: Postal stationery (retrieved 26 September 2006)
  2. [2] Ken Lawrence: Before the Penny Black Revisited (retrieved 27 September 2006)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடிதத்தாள்&oldid=3485398" இலிருந்து மீள்விக்கப்பட்டது