ஓய்வூதியர் நாள் (இந்தியா)
ஓய்வூதியர் நாள் (Pensioners’ Day), இந்தியாவில் ஆண்டு தோறும் டிசம்பர் 17 ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 17, 1982-ஆம் நாளில், இந்திய உச்ச நீதிமன்றம், ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூரும் வகையில் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியர்களால் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.[1]
வரலாறு
[தொகு]அரசுத் துறைகளில் பணி புரிந்து பணி ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் நிலை குறித்து பல்வேறு ஓய்வூதியர் சங்கங்கள் தாக்கல் செய்த வழக்குகள் மீது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஓய்வூதியர்கள் அனைவரும் ஒரே சீரான வகுப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தீர்ப்பளித்துள்ளது. இதில் ஓய்வு பெற்ற தேதியை அடிப்படையாக வைத்து ஓய்வூதியப் பலன்களை வழங்குவதில் பாகுபாடு செய்வது, ஓய்வூதியர்களைப் பிரிவினைச் செய்வதற்கு ஒப்பாகும் என்றும், மேலும் இவ்வாறு பாகுபாடு காட்டுவது இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 14-ஐ மீறுவதாகும் என்று 17 டிசம்பர் 1982 ஆண்டில் உச்சநீதிமன்றம், டி. எஸ். நகரா என்ற ஓய்வூதியர் தொடுத்த வழக்கில் வழங்கிய தீர்ப்பை மேற்கோள் காட்டி பல தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
மேலும் டி. எஸ். நகரா வழக்கில் அப்போதைய உச்ச நீதிமன்ற நீதியரசர் ஒய். வி. சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில், 17 டிசம்பர் 1982 அன்று அளித்த உரிமை சாசனத் தீர்ப்பின் ஒரு பகுதியில், ஓய்வூதியம் என்பது, உழைத்த உழைப்பிற்கு கொடுக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட ஊதியம் ஆகும் எனவும், அரசியல் அமைப்பு சட்டப்பிரிவுகள் 139 மற்றும் 148 (5)-இன் படி ஓய்வூதியம் என்பது ஓய்வூதியர்களுக்கு சொத்துரிமை போன்ற நிலைத்த சட்டபூர்வமான உரிமையாகும் என்றும் தெரிவித்தது.
ஆகவே ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 17-ஆம் நாள் ஓய்வூதியர் நாள், ஓய்வூதியர்களால் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது[1].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Pensioners' Day in India" (PDF).
வெளி இணைப்புகள்
[தொகு]- [https://web.archive.org/web/20140923090501/http://pensionersportal.gov.in/pa.asp பரணிடப்பட்டது 2014-09-23 at the வந்தவழி இயந்திரம் ஓய்வூதியர்கள் சங்கங்கள்]]
- இந்திய அரசின் ஓய்வூதியர்கள் இணையதளம்
- தமிழ்நாடு அரசின் ஓய்வூதியர்கள் இணையதளம்
- ஓய்வூதியர்கள் குறித்த மாநில கணக்காயரின் இணையதளம்