உள்ளடக்கத்துக்குச் செல்

ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வயது முதிர்வின் காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெறும் அலுவலர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் பயனாக ஓய்வூதியம் பெற்று வருவோர் திடீரென மரணம் அடையும் நிகழ்வில் அவர்களது குடும்பத்திற்கு உதவிபுரிய உருவாக்கப்பட்டத் திட்டமே ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு LLநிதிதிட்டம் ஆகும். 01.01.1997 முதல் இத்திட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தில் இணைய விரும்பும் ஓய்வூதியர்கள் இதற்காக தங்கள் ஓய்வூதியத்திலிருந்து சிறு தொகையை ஒவ்வொரு மாதமும் சந்தாவாகச் செலுத்த வேண்டும். இவ்வாறு மாதாந்திர பங்களிப்பு செய்து வரும் ஓய்வூதியர்கள் இறக்க நேரிட்டால் அவருடைய மனைவி/ கணவன் அல்லது நியமிக்கப்பட்டவருக்கு மொத்தமாக ஒரு தொகை இத்திட்டத்தின் கீழ் உதவியாக வழங்கப்படுகிறது. ஓய்வூதியர்களின் விருப்பத்தின் பேரில் அவர்களிடமிருந்து பெறப்படும் சந்தாத் தொகையைக் கொண்டு நிறைவேற்றப்படும் சுயநிதி நலத்திட்டமே ஓய்வூதியர் குடும்பப் பாதுகாப்பு நிதித் திட்டம் என்று அழைக்கப்படுகிறது.

ரூ 25000 ஒட்டு மொத்தத் தொகையாக வழங்கப்படும் என்ற துவக்கப்பட்ட இத்திட்டம், பின்னர் ரூ.35000 ஆக மாற்றம் பெற்று தற்பொழுது ரூ.50000 வழங்கப்படுவதாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

ஓய்வுதியர்களின் மாதாந்திர பங்களிப்புத் தொகை 01.01.1997 முதல் 31.03.1999 வரையிலான காலத்தில் மாதம் 20 ரூபாயாகவும் 01.04.1999 முதல் 31.05.2000 வரையிலான காலத்தில் மாதம் 40 ரூபாயாகவும் 01.06.2000 முதல் 31.10.2001 வரையிலான காலத்தில் 50 ரூபாயாகவும் 01.11.2011 முதல் மாதம் 70 ரூபாயுமாக மாற்றம் பெற்றது. தற்பொழுது இச்சந்தா தொகை 01.06.2013 முதல் மாதம் 80 ரூபாயாக உயர்த்தப்பட்டு பிடித்தம் செய்யப்படுகிறது.

துவக்கக் காலத்தில் இத்திட்டத்தின்படி, ஓய்வூதியர் ஒருவர் இறக்கும் நேர்வில், அவர் குறைந்தபட்சம் 12 மாதங்களுக்கு சந்தா செலுத்தியிருந்தால் மட்டுமே, அவர்தம் குடும்பத்திற்கு உதவித்தொகை வழங்க ஆணையிடப்பட்டது. இத்திட்டம் சுயநிதித் திட்டமாக நிறைவேற்றப்படுவதாலும் நிதி குறைவின் காரணமாகவும் இந்நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது இந்நிபந்தனையும் நீக்கப்பட்டு ஓய்வூதியர் ஒருவர் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கான சந்தா தொகையை செலுத்தியிருந்தால் கூட அவர் இறக்கும் நேர்வில் அவரது குடும்பத்திற்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று அரசாணை எண் 416,நாள் 18.11.2010 இல் தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.

திட்டத்தில் சேரத் தகுதியுடையவர்கள்

[தொகு]

இத்திட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர் மட்டுமே சேர்ந்து பயன்பெற இயலும். குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் சேர்ந்து பயன்பெற இயலாது.( அரசாணை எண் 762 நிதித்துறை நாள் 31.12.1996 )

தமிழக அரசின் நிதிஉதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் அலுவலர்களும் இத்திட்டத்தில் சேரலாம்.

தமிழகத்தில் பணிபுரியும் அகில இந்திய பணியினரும் அவர்கள் விரும்பினால் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். ( அரசாணை எண் 315 மற்றும் 639 நிதித்துறை நாள் 12.06.1997 மற்றும் 26.12.1997)

தற்காலிக ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் தமிழக அரசின் ஓய்வூதியம் பெறும் போக்குவரத்து கழகத்தால் ஈர்க்கப்பட்ட ஊழியர்கள் இத்திட்டத்தில் சேரலாம்.

இத்திட்டத்தில் சேர விருப்பமில்லை என்று எழுத்து மூலமாக தெரிவித்துவிட்ட ஓய்வூதியரும் பின்னர் எப்போதுமே இத்திட்டத்தில் சேர முடியாது.

திட்டத்தின் நடைமுறைகள்

[தொகு]

இத்திட்டத்தில் சேர விரும்பும் ஓய்வூதியர்களிடமிருந்து ச்ந்தா தொகையை அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் பிடித்தம் செய்வார். (அரசாணை எண் 639 நிதித்துறை நாள் 26.12.1997)

ஓய்வூதியர்கள் இத்திட்டத்தில் சேர்ந்துகொள்ள விருப்பப்படவில்லை என்றால், ஓய்வூதியம் பெறும் அலுவலகத்தில் அவர்களின் முதல் ஓய்வூதியத்தைப் பெறும்போது நான் இத்திட்டத்தில் சேரத் தயாராக இல்லை என்று எழுதி கொடுக்க வேண்டும். இத்திட்டத்தில் சேர்ந்து சந்தா செலுத்திவரும் ஒரு ஓய்வூதியர் விருப்பப்பட்டால் இடையிலும் இத்திட்டத்திலிருந்து விலகிக்கொள்ளலாம். அவ்வாறு அவர் விலகிக்கொள்வதாக எழுத்துமூலமாக அறிவிக்கும் தேதிவரை அவர் செலுத்திய சந்தா தொகை மட்டும் மீள அவருக்கு அளிக்கப்படும். ஓய்வூதியம் வழங்கும் அலுவலரின் பரிந்துரையின் பேரில் ஓய்வூதிய இயக்குநர் அவர்கள் இத்தொகையை வழங்குவார்

கணவன்/மனைவி உயிருடன் இருக்கும் பட்சத்தில் இத்தொகை அவர்களுக்கு இயற்கையாகவே கிடைத்துவிடும். அவர்கள் உயிருடன் இல்லாதபோது அவர்கள் உயிருடன் இருந்தபோது நியமனம் செய்த ஒருவருக்கு இத்தொகை கிடைக்கும். ஒருவேளை ஓய்வூதியர் யாரையும் நியமனம் செய்யாமல் இறந்துவிட்டார் எனில் அவருடைய வாரிசுகளுக்கு இத்தொகை சமமாகப் பகிர்ந்து வழங்கப்படும்.

கணவன்/மனைவி உயிருடன் இருக்கும் பட்சத்தில் ஓய்வூதியர், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் நியமனப் படிவம் எதுவும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. கணவன்/ மனைவி உயிருடன் இல்லாத பட்சத்தில் ஓய்வூதியர் கண்டிப்பாக நியமனப் படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.

கணவன்/மனைவி உயிருடன் இல்லாத ஓய்வூதியர்கள் இத்திட்டத் தொகையை தான் விரும்பும் வாரிசு அல்லது வாரிசுகளுக்கு வழங்கச் சொல்லி ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் நியமனப் படிவம் தாக்கல் செய்யலாம்.

ஓய்வூதியர் நியம்னப் படிவத்தைப் பூர்த்தி செய்து இரண்டு நகல்களை ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெறவேண்டும். அலுவலக கோப்பிற்காக ஒரு நகலைப் பெற்றுக்கொண்டு மற்றொரு நகலை ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் ஓய்வூதியரிடம் திரும்ப வழங்குவார்.

இவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர் அசம்பாவிதமாக இறக்க நேரிட்டால் ஓய்வூதியர் வேறு ஒருவரை புதியதாக நியம்னம் செய்து கொள்ளலாம்.

குடும்பமே இல்லாதவர் இத்திட்டத்திற்கு சந்தா தொகை செலுத்தியிருப்பின் அவர் தான் விரும்பும் எவரை வேண்டுமானாலும் நியமனம் செய்யலாம்.

விண்ணப்பிக்கும் முறை

[தொகு]

ஓய்வூதியர் இறக்க நேரிட்டால் தகுதியுடைய நியமனதாரர் ஓய்வுதியம் வழங்கும் அலுவலருக்கு விண்ணப்பம் அளிக்கவேண்டும். விண்ணப்பத்துடன் இறப்புச் சான்றிதழ், ஓய்வூதியக் கொடுப்பானையின் முதல் பக்க நகல், மாதிரிக் கையொப்பத்துடன் கூடிய ஆளறிச் சான்றிதழ், புகைப்படம், நியமனப் படிவம், தொகை பெற்றுக் கொண்டதற்கான முன் ஒப்புகை இரசீது ஆகிய ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.

நியமனதாரர் நியமிக்கப்படவில்லை என்றால் மேற்கண்ட ஆவணங்களுடன் வாரிசுச் சான்றிதழ் இணைத்து விண்னப்பம் செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வாரிசுதாரர்கள் இருப்பின் யாராவது ஒருவருக்கு வழங்க விருப்பம் தெரிவித்து கடிதம் அளிக்க வேண்டும். இக்கடிதம் ’அ’ அல்லது ’ஆ’ பிரிவு அலுவலரால் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

விண்னப்பம் பெறப்பட்டவுடன் ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் ஒப்புதல் வழங்கி அவ்வாணையை ஓய்வூதிய இயக்குனருக்கு அனுப்பி வைப்பார். ஒப்புதல் ஆணை பெறப்பட்டவுடன், ஓய்வூதிய இயக்குநர், தகுதியானவரின் பெயரில் காசோலை தயாரித்து நேரடியாக அஞ்சல் மூலமாக விண்னப்பதாரருக்கு அனுப்பி வைப்பார். நியமனப் படிவம் இல்லாத நிகழ்வில் வாரிசுச் சான்றிதழின் அடிப்படையில் உயிருடன் உள்ள அனைத்து குடும்ப வாரிசுகளுக்கும் சம்மாக இத்தொகை பகிர்ந்து அளிக்கப்படுகிறது

ஆதாரம்

[தொகு]

அரசாணைகள்

[தொகு]

1.G.O. Ms. No.762 FINANCE (Pension) DEPARTMENT Dt: December 31, 1996

2.G.O. Ms. No.413 FINANCE (Pension) DEPARTMENT Dt: October 17. 2001

3.G.O. Ms. No.416 FINANCE (Pension) DEPARTMENT Dt: November 18, 2010

4.G.O. Ms. No.184 FINANCE (Pension) DEPARTMENT Dt: June 01, 2012

5.G.O. Ms. No.189 FINANCE (Pension) DEPARTMENT Dt: June 07, 2013

இதனையும் காண்க

[தொகு]