ஒருங்கிணைந்த கடலோர கண்காணிப்பு அமைப்பு
ஒருங்கிணைந்த கடலோர கண்காணிப்பு அமைப்பு (Integrated Coastal Surveillance System ICSS) என்பது இந்தியாவால் இயக்கப்படும் ஒரு கடலோர கண்காணிப்பு அமைப்பாகும். இந்தியாவின் கடற்கரையை பாதுகாக்கவும், பிராந்திய பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்தியப் பெருங்கடலில் கடல்சார் செயல்பாடுகளை விரைவாகக் கண்டறிந்து, கண்காணிப்பதன் மூலம் நட்பு நாடுகளின் கடற்படைகளுக்கு உதவுகிறது.[1][2] இந்த அமைப்பு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றால் உருவாக்கப்பட்டது. மேலும் இது தேசிய கட்டளைக் கட்டுப்பாட்டு தகவல் தொடர்பு மற்றும் புலனாய்வு அமைப்பின் (NC3I)[3] ஒரு பகுதியாகும்.
இவ்வமைப்பு முதன்மையாக கடலோர மற்றும் கடல்சார் பாதுகாப்பிற்காக நிறுவப்பட்டது என்றாலும், கப்பல் போக்குவரத்து மேலாண்மை, துறைமுக கண்காணிப்பு மற்றும் வழிசெலுத்தலுக்கும் இந்த அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. இவ்வமைப்பு கடலோர கண்காணிப்பு வலையமைப்பு (CSN) எனப்படும் தொலைதூர ரேடார் நிலையங்களின் வலையமைப்பாகும். இதில் ரேடார்கள் தவிர ஆப்டிகல் சென்சார்கள், எலக்ட்ரோ ஆப்டிகல் சென்சார்கள், தெர்மல் இமேஜர்கள், கேமராக்கள், வானிலை அமைப்புகள், தானியங்கி அடையாள அமைப்பு (AIS), ஒரு டிஸ்ட்ரஸ் அலர்ட் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம் (DATS), மின்னணு போர் ஆதரவு நடவடிக்கைளுக்கான கருவிகள், உயர் அதிர்வெண் (VHF) வானொலி தொடர்பு அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.
கடலோர கண்காணிப்பு ரேடார் என்பது ஒருங்கிணைந்த கடலோர கண்காணிப்பு அமைப்பின் முதன்மை உணரி ஆகும், இதன் காரணமாக இவ்வமைப்பை சில நேரங்களில் கடலோர கண்காணிப்பு ரேடார் அமைப்பு என்று குறிப்பிடப்படுகிறது. கடலோர கண்காணிப்பு ரேடார்கள் அனைத்து வானிலை நிலைகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் மற்றும் கடலில் உள்ள இழுவை படகுகள், படகுகள், மீன்பிடி கப்பல்கள் மற்றும் மிதவைகள் போன்ற சிறிய கப்பல்களைக் கண்டறியும் திறன் கொண்டவை.
கடலோர கண்காணிப்பு வலையமைப்பின் தரவுகள், முக்கிய துறைமுகங்களில் அமைந்துள்ள கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள் (VTMS), நீண்ட தூர அடையாளம் காணுதல் மற்றும் கண்காணிப்பு (LRIT), மீன்பிடி கப்பல் கண்காணிப்பு அமைப்பு மற்றும் செயற்கைக்கோள் படங்கள் போன்ற பிற ஆதாரங்களில் இருந்து கூடுதல் உள்ளீடுகள் மூலம் கூடுதலாக வழங்கப்படுகிறது.[4]
கடலோர கண்காணிப்பு ரேடார் நிலையங்களில் இருந்து தரவுகள் நிகழ்நேரத்தில் அருகிலுள்ள தொலை இயக்க நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது. இது மும்பை, கொச்சி, விசாகப்பட்டினம் மற்றும் போர்ட் பிளேயரில் உள்ள நான்கு கூட்டு செயல்பாட்டு மையங்களில் (JOC) ஒன்றிற்கு தகவலை அனுப்புகிறது. குருகிராம் சார்ந்த தகவல் மேலாண்மை மற்றும் பகுப்பாய்வு மையம் (IMAC) மூலம் இயக்கப்படும் தேசிய கட்டளைக் கட்டுப்பாட்டு தகவல் தொடர்பு மற்றும் நுண்ணறிவு அமைப்பிற்கு (NC3I) தரவுகளை வழங்குகின்றது. இது கடல்சார் தரவுகளை ஒருங்கிணைப்பதற்கான முக்கிய நிறுவனமாகும்.[5]
இவ்வமைப்பு 2000ம் ஆண்டில் கார்கில் போர் மறுஆய்வுக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலிப்பதற்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் முன்மொழிவிலிருந்து உருவானது. 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தத் திட்டம் புத்துயிர் பெற்றது. இந்திய அரசு 46 கடலோர ரேடார் நிலையங்கள் மற்றும் 16 கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை பிப்ரவரி 2009ல் கட்டுவதற்கு ஒப்புதல் அளித்தது. இது டிசம்பர் 2016ல் நிறைவடைந்தது. கூடுதலாக 38 கடலோர ரேடார் நிலையங்கள், 4 நடமாடும் கண்காணிப்பு நிலையங்கள் மற்றும் 5 புதிய கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் அங்கீகரிக்கப்பட்டன.[6]
இந்தியப் பெருங்கடல் நட்பு நாடுகளில் கடலோர கண்காணிப்பு ரேடார்களை உருவாக்க இந்தியா முன்மொழிந்துள்ளது. முதல் வெளிநாட்டு கடலோர கண்காணிப்பு ரேடார்கள் மொரிசியசு மற்றும் இலங்கையில் நிறுவப்பட்டது. கடலோர கண்காணிப்பு அமைப்பு தற்போது இந்தியா, மாலத்தீவு, மொரீஷியஸ், சீஷெல்ஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிறது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Integrated Coastal Surveillance System". DRDO. பார்க்கப்பட்ட நாள் 4 November 2021.
- ↑ Bhalla, Abhishek. "Eye on China, India sets up coastal radars in neighbourhood". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
- ↑ National Command, Control, Communication And Intelligence Centre (NC3I)
- ↑ "India's Coastal Surveillance Network". Defense Media Network (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.
- ↑ Peri, Dinakar (9 January 2021). "Additional coastal radar stations to be completed by November 2021". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 5 November 2021.
- ↑ "Coast Guard to get 38 radar stations and four mobile stations by next year". The Indian Express (in ஆங்கிலம்). 2022-06-02. பார்க்கப்பட்ட நாள் 2022-10-20.