ஐரோம் சர்மிளா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐரோம் சானு சர்மிளா
கோழிக்கோட்டில் விருது வழங்கும் விழாவில் ஐரோம் சர்மிளா
பிறப்புமார்ச்சு 14, 1972 (1972-03-14) (அகவை 52)
கொங்பால், இம்பாலா, மணிப்பூர், இந்தியா
பணிமனித மற்றும் சமூக உரிமை ஆர்வலர், அரசியலாளர்
அறியப்படுவதுஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்திற்கு எதிரான உண்ணாநோன்பு
பெற்றோர்ஐரோம் சி நந்தா (தந்தை)
இரோம் ஓங்பி சக்தி (தாய்)

ஐரோம் சானு சர்மிளா (Irom Chanu Sharmila, பிறப்பு: மார்ச் 14, 1972) என்பவர் மணிப்பூரின் இரும்பு மங்கை என அழைக்கப்படுபவராவார். இவரை அவரது வட்டார மொழி மக்கள் மெங்ஙௌபி என அழைக்கின்றனர்[1]. மணிப்பூரில் நடந்த வன்முறைகளுக்கும் மற்றும் பிற வடகிழக்குப் பகுதிகளில் அதன் விளைவுகளுக்கும் காரணமான ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ [ASFPA] இந்திய அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என்று கூறி 2000ஆம் ஆண்டு நவம்பர் 2 அன்றிலிருந்து இவர் உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவந்தார்[2]. இது 500 வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து வந்தது. இதுவே உலகின் நீண்ட உண்ணாப் போராட்டமாகும்[3].

ஆகஸ்ட் 9, 2016 அன்று தனது 16 ஆண்டுகால உண்ணாநிலை போராட்டத்தை முடித்துக் கொண்டார். மணிப்பூர் முதல்வர் ஓக்ரம் இபோபி சிங்கிற்கு எதிராகத் தாம் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் அறிவித்தார்.[4]

உண்ணாநிலைப் போராட்டத்திற்கான முடிவு[தொகு]

நவம்பர் 2, 2000 அன்று மணிப்பூரின் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ள மலோம் என்ற சிற்றூரில் இந்தியப் படைத்துறையின் துணைப்படையான அசாம் ரைபிள்சினால் பேருந்து நிறுத்தமொன்றில் நின்றிருந்த பத்து குடிமக்கள் சுடப்பட்டு இறந்தனர்.[5][6] இந்த நிகழ்வு பின்னாளில் "மலோம் படுகொலை" என மனித உரிமை தன்னார்வலர்களால் குறிப்பிடப்படுகின்றது.[7] 1988ஆம் ஆண்டின் தேசிய சிறார் வீரதீர விருது பெற்ற 18 வயது சினம் சந்திரமணி மற்றும் 62 வயதுடைய பெண்மணி லெய்சங்பம் இபெடோமி உட்பட கொலையுண்டவர்களின் படங்களை உள்ளூர் நாளேடுகள் விவரமாக பதிப்பித்திருந்தன.[6]

நான்காம் நிலை கால்நடை ஊழியரொருவரின் மகளான 28 வயது சர்மிளா இந்தப் படுகொலைக்கு எதிராக உணவு மற்றும் நீர் உண்ணாப் போராட்டத்தை மேற்கொண்டார்.[8] அவரது உடன்பிறப்பு ஐரோம் சிங்கஜித் சிங்கின் கூற்றுப்படி "சிறுவயது முதலே வியாழக்கிழமைகளில் உண்ணாதிருக்கும் விரதத்தை கடைபிடிக்கும் சர்மிளா கொலை நிகழ்ந்த நாள் வியாழக்கிழமையாக அமைந்திருந்த காரணத்தால் தனது உண்ணாநிலையை அப்படியே தொடர்ந்தார்". அவர் உண்ணாநிலைப் போராட்டத்தை துவங்கிய நாள் நவம்பர் 4 என்றும் அதற்கு முந்தைய நாள் தனது இரவு உணவை முடித்துக்கொண்டு அன்னையின் கால்களில் விழுந்து வணங்கி அனுமதி பெற்றதாகவும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.[9] போராளி என ஐயுறும் எவரையும் காலவரையின்றி காவலில் வைக்க அதிகாரம் வழங்கும் ஆயுதப்படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958 (AFSPA) மீளப்பெற வேண்டும் என்பதே இவரது முதன்மையான கோரிக்கையாகும்.[5] சித்திரவதை, வலிய காணாமல் போவது, நீதித்துறைசாரா தண்டனைகள் போன்றவற்றிற்கு இந்த சட்டமே காரணமாக மனித உரிமை தன்னார்வலர்களும் எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன.[5][8]

உண்ணாநிலைப் போராட்டம் துவங்கிய மூன்றாம் நாளே சர்மிளா தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதித்துறை காவலில் வைக்கப்பட்டார்.[9] அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், காவல்துறையினர் அவருக்கு வலுக்கட்டாயமாக, நாசி மூலம் குழாய் வழியே உணவு வழங்கத் துவங்கினர்.[10] இந்தியக் குற்றவியல் சட்டத்தின்படி தற்கொலைக்கு முயலும் ஒருவரை ஓராண்டுக்கே சிறையிலடைக்க முடியும் என்பதால் அன்றிலிருந்து ஐரோம் சர்மிளா ஒவ்வொரு ஆண்டும் விடுதலை செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுகிறார்.[9][11]

தேர்தல்[தொகு]

மக்கள் மீளெழுச்சியும் நீதியும் இணைந்தது என்னும் அரசியல் கட்சியை 18 அக்டோபர் 2016 ஐரோம் சர்மிளா நிறுவினார்.[12]. 2017 அன்று நடக்கும் தேர்தலில் ஐரோம் சர்மிளா மணிப்பூர் முதல்வர் ஒக்ரோம் இபோபி சிங்கை எதிர்த்து தோபல் தொகுதியில் போட்டியிட்டார்[13] இத்தேர்தல் முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறிய சர்மிளா ஒக்ரோம் இபோபி சிங்கை எதிர்த்து தோபல் தொகுதியில் வெறும் 90 ஓட்டு பெற்று தோல்வி அடைந்தார். அதன்பிறகு அரசியலில் இருந்தும் விலகப் போவதாக அறிவித்தார்[14] ஆயுதப்படை (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம், 1958ஐ எதிர்ப்பதாகவும் உண்ணா விரதத்துக்கு பதில் உத்தியை மட்டுமே மாற்றியுள்ளதாகவும் கூறினார்[15]

மேற்கோள்[தொகு]

 1. Rituparna Chatterjee (20 April 2011). "Spot the Difference: Hazare vs. Irom Sharmila". Sinlung. Retrieved 30 April 2011.
 2. "Manipur Fasting Woman Re-arrested". BBC News. 9 March 2009. Retrieved 8 May 2011.
 3. Andrew Buncombe (4 November 2010). "A decade of starvation for Irom Sharmila". The Independent. Retrieved 8 May 2011.
 4. (ஆகத்து 9, 2016). "Irom Sharmila ends 16-year fast". (Web link). Retrieved on ஆகத்து 9, 2016.
 5. 5.0 5.1 5.2 Nilanjana S. Roy (8 February 2011). "Torchbearers for Victims in a Violent Land". New York Times. பார்க்கப்பட்ட நாள் 8 May 2011. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 6. 6.0 6.1 Rahul Pathak (6 August 2004). "Why Malom is a big reason for Manipur anger against Army Act". IndianExpress.com. பார்க்கப்பட்ட நாள் 8 May 2011.
 7. Malom Massacre
 8. 8.0 8.1 Shoma Chaudhury (5 December 2009). "Irom And The Iron In India's Soul". Tehelka. Archived from the original on 22 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 8 May 2011. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 9. 9.0 9.1 9.2 "Manipur fasting woman re-arrested". BBC News. 9 March 2009. பார்க்கப்பட்ட நாள் 8 May 2011.
 10. Andrew Buncombe (4 November 2010). "A decade of starvation for Irom Sharmila". The Independent. பார்க்கப்பட்ட நாள் 8 May 2011. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
 11. Section 309 in The Indian Penal Code, 1860
 12. "Irom Sharmila launches new party, to contest Manipur assembly polls next year". இந்துசுத்தான் டைம்சு. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 20, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 13. "Irom Sharmila, Ibobi Singh file nominations for Manipur polls". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 20, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 14. "Irom Sharmila to marry after Manipur polls". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 20, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
 15. "Fight against AFSPA: Sharmila says she has changed her strategy". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 20, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்[தொகு]

14 ஆண்டுகள் போராட்டத்துக்குப் பிறகு இரோம் ஷர்மிளா விடுதலையாக வாய்ப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐரோம்_சர்மிளா&oldid=3546817" இலிருந்து மீள்விக்கப்பட்டது