எரெசு
எரெசு | |
---|---|
அத்ரியன் வில்லாவில் உள்ள எரெசுவின் சிலை | |
இடம் | ஒலிம்பிய மலைச்சிகரம் |
துணை | அப்ரோடிட் |
பெற்றோர்கள் | சியுசு மற்றும் எரா |
சகோதரன்/சகோதரி | சியுசின் அனைத்து பிள்ளைகளும் |
குழந்தைகள் | எரோடிசு எரோசு மற்றும் அன்டெரோசு, போபோசு, தெய்மோசு, ஆர்மோனியா, திரேசு, அட்ரெசுடியா |
எரெசு என்பவர் கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்படும் போர்க் கடவுள் ஆவார். இவர் பன்னிரு ஒலிம்பியர்களில் ஒருவரும் சியுசு மற்றும் எரா ஆகியோரின் மகனும் ஆவார்.[1] இவருக்கு இணையான ரோமக்கடவுள் மார்ஸ் ஆவார்.
போர்க்கலையில் சிறந்தவராக எரெசு பொதுவாக அறியப்பட்டாலும், ஓமர் எழுதிய இலியட் காப்பியத்தில் எரெசு சற்று கோழையாகவே சித்தரிக்கப்படுகிறார். இவரது தமக்கையான ஏதெனா திட்டம் வகுத்து போரிடுவதால் போர்க்கலையில் சிறந்தவராகவும், எரெசு சற்றும் திட்டம் வகுக்காமல் வன்முறையில் இறங்குபவராகவும் வர்ணிக்கப்படுகிறார்கள்.
அப்ரோடிட் மற்றும் ஏரெசு ஆகிய இருவரும் காதலித்தனர். ஆனால் சியுசு அவரை எப்பெசுடசுவிற்கு கட்டாய திருமணம் செய்து வைத்தார். பிறகு எப்பெசுடசுவிடம் பாலுறவு திருப்தி கிடைக்காததால் அப்ரோடிட் பல அழகான ஆண்களுடன் உறவாடினார். அவருக்கு எரெசு மூலம் எரோசு, அன்டெரோசு, போபோசு, டெய்மோசு, ஆர்மோனியா மற்றும் அட்ரெசுடியா ஆகியோர் பிறந்தனர்.
எரேசு மற்றும் அப்ரோடிட்
[தொகு]ஒருமுறை, எப்பெசுடசு மண்டபத்தில் எரெசு மற்றும் அப்ரோடிட் ஆகிய இருவரும் உடலுறவில் ஈடுபட்டு இருந்தனர். அதைக் கதிரவ கடவுள் ஈலியோசு பார்த்துவிடுகிறார். ஆகவே அவர் அந்த நிகழ்வை அப்ரோடிட்டின் கணவர் எப்பெசுடசுவிடம் தெரிவிக்கிறார். இதனால் எப்பெசுடசு ஒரு நெருக்கமாக தைக்கப்பட்ட வலையைக் கொண்டு அவர்கள் இருவரையும் சிறைபிடித்து தண்டித்தார். பிறகு அதுபற்றி ஒலிம்பிய கடடவுள்களிடம் முறையிட்டார். ஆனால் அவர்களோ இருவரும் உடையின்றி இருந்த அந்த காட்சியைக் கண்டு கிண்டல் செய்தனர். பிறகு அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.
எரெசு தன் இளைய வீரனான அல்சைட்ரோன் என்பவரை காவலுக்கு நிறுத்திவிட்டு அப்ரோடிட்டுடன் உறவாடினர். ஆனால் அல்சைட்ரோன் தூங்கிவிடுகிறார். பிறகு அங்கு வந்த ஈலியோசு இருவரையும் கண்டு எப்பெசுடசுவிடம் தெரிவிக்கிறார். இதனால் கோபமடைந்த எரெசு, அல்சைட்ரோனை ஒரு சேவலாக மாற்றினார். ஆகவே சேவல் இன்றுவரை கதிரவனின் வருகையை தினமும் அறிவிப்பதற்கு இந்த கதையே காரணம் என்று கூறப்படுகிறது.