எமிலி டேவிசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எமிலி டேவிசன், அண். 1910–1912

எமிலி வைல்டிங் டேவிசன் (Emily Wilding Davison, 11 அக்டோபர் 1872 – 8 சூன் 1913) ஐக்கிய இராச்சியத்தில் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடிய மகளிர் வாக்குரிமைப் போராளி. மகளிர் சமூக அரசியல் ஒன்றியத்தின் உறுப்பினரான எமிலி அவரது போராட்டத்திற்காக ஒன்பது முறை கைது செய்யப்பட்டார்; ஏழுமுறை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டிருந்தார். 49 முறை அவருக்கு வலுக்கட்டாயமாக உணவு வழங்கப்பட்டது. 1913ஆம் ஆண்டு எப்சம் டெர்பியின் போது குதிரைப்பந்தய மைதானத்தில் அவர் அத்துமீறி நுழைந்தபோது ஐந்தாம் ஜோர்ஜ் மன்னரின் குதிரையால் அடிபட்டு இறந்தார்.

டேவிசன் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். இலண்டனிலுள்ள இலண்டன் பல்கலைக்கழகத்தின் ரோயல் ஓல்லோவே கல்லூரியிலும் ஆக்சுபோர்டின் புனித இஃயூ கல்லூரியிலும் படித்தார். பின்னர் ஆசிரியையாகவும் ஆயாவாகவும் பணி புரிந்தார். நவம்பர் 1906இல் மகளிர் சமூக அரசியல் ஒன்றியத்தில் இணைந்தார். இயக்கத்தின் அணிவகுப்புகளில் முதன்மை அதிகாரியாக முன்னேறினார். அவரது துணிச்சலான செயற்பாடுகளுக்காக அவ்வியக்கத்தில் பெரிதும் அறியப்பட்டார். போராட்டங்களின் போது சன்னல்களை உடைத்தல், கல்லெறிதல், அஞ்சற்பெட்டிகளுக்கு தீ வைத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டார்; மூன்று முறை வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் ஒளிந்து கொண்டு போராடினார். சூன் 14, 1913 அன்று நடந்த அவரது இறுதிச் சடங்கை இந்த இயக்கமே முன் நடத்தியது. அவரது சவப்பெட்டியுடன் 5,000 போராளிகள் அணியாக நடந்தனர்; 50,000 மக்கள் அந்த ஊர்வலம் சென்ற வழியில் நின்றுகொண்டு அஞ்சலி செலுத்தினர். அவரது சவப்பெட்டி தொடர்வண்டி மூலமாக குடும்ப நிலமிருந்த நார்த் உம்பர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

டேவிசன் தீவிரமான பெண்ணியவாதியாகவும் ஆர்வமிக்க கிறித்தவராகவும் விளங்கினார். சமூகவுடைமை சமயத்தின்படியும் அரசியல் இயக்கத்திற்கும் தேவையானதாகக் கருதினார். அவரது மரணம் நிகழ்ந்த விதமே அவரது வாழ்க்கையை பிரதிபலிப்பதாக உள்ளது. டெர்பியின்போது தான் என்ன செய்யப்போகிறேன் என்பதை முன்னரே அறிவிக்கவில்லை; அவரது நோக்கங்களும் இலக்குகளும் தெளிவின்றி இருந்தது வரலாற்றுப் பக்கங்களில் அவரை தவறாகச் சித்தரித்துள்ளது. அந்த நிகழ்வு குறித்து விபத்து, தற்கொலை, மன்னர் குதிரை மீது வாக்குரிமை கோரல் பதாகையை இணைப்பது எனப் பல கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன; எதுவே மெய்யென நிரூபிக்கப்படவில்லை.

இளமையும் கல்வியும்[தொகு]

1908இல் எமிலி டேவிசன்

எமிலி வைல்டிங் டேவிசன் தென்கிழக்கு இலண்டனில் உள்ள கிரீன்விச் பகுதியில் ராக்சுபர்கு இல்லத்தில் அக்டோபர் 11,1872இல் பிறந்தார். அவரது தந்தை சார்லசு டேவிசன் வணிகராகவிருந்து ஓய்வு பெற்றவர்; தாயார் மார்கெரெட் கைய்சிலி. பெற்றோர் இருவருமே நார்த் உம்பர்லாந்திலுள்ள மோர்பத்தைச் சேர்ந்தவர்கள்.[1] 1868இல் 19 அகவையர் மார்கெரட்டை மணக்கும் போது சார்லசுக்கு 45 அகவைகள்.[2] அவர்களுக்குப் பிறந்த நால்வரில் எமிலி மூன்றாவதாகும். எமிலியின் தங்கை 1880இல் ஆறாம் வயதிலேயே திஃப்தீரியா என்ற தொண்டை அழற்சி நோய்க்குப் பலியானார்.[3][4][5] இதற்கு முந்தைய திருமணத்தில் சார்லசிற்கு 9 குழந்தைகள் பிறந்திருந்தன.[1]

எமிலி சிறு குழந்தையாக இருக்கும்போதே அவரது குடும்பம் எர்போர்டுசையரிலுள்ள சாபிரிட்ச்வர்த் நகருக்கு குடிபெயர்ந்தனர். 11 அகவை வரை வீட்டிலேயே கற்று வந்தார். குடும்பம் மூண்டும் இலண்டனுக்குத் திரும்பியதும் பள்ளிக்குச் சென்றார். ஓராண்டு பிரான்சிலுள்ள டன்கிர்க்கில் படித்தார்.[6] அவருக்கு 13 வயதிருக்கும்போது கென்சிங்டன் உயர்நிலைப்பள்ளியில் படித்தார். 1891இல் ரோயல் ஓலோவே கல்லூரியில் படிக்க உதவிச் சம்பளம் பெற்று இலக்கியம் பயின்றார். 1893இல் எமிலியின் தந்தை இறந்தார். எனவே தனது கல்வியை நிறுத்திக் கொண்டு பணிபுரியத் தொடங்கினார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 San Vito 2008.
 2. Sleight 1988, ப. 22–23.
 3. Howes 2013, 410–422.
 4. Sleight 1988, ப. 22–24.
 5. Tanner 2013, ப. 156.
 6. Colmore 1988, ப. 5, 9.
 7. Sleight 1988, ப. 26–27.

வெளி இணைப்புகள்[தொகு]

 • An exhibit on Emily Davison, London School of Economics.
 • The original Pathé footage of Emily Davison running out of the crowds at the Derby பரணிடப்பட்டது 2018-03-27 at the வந்தவழி இயந்திரம்
 • "Emily Wilding Davison". Find a Grave. 11 April 2005. பார்க்கப்பட்ட நாள் 18 August 2011.
 • BBC profile
 • Archives of Emily Davison[தொடர்பிழந்த இணைப்பு] at the Women's Library at the Library of the London School of Economics
"https://ta.wikipedia.org/w/index.php?title=எமிலி_டேவிசன்&oldid=3730942" இலிருந்து மீள்விக்கப்பட்டது