எந்திரப் பிணைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுழலும் கணைப் பிணைப்பு
பல்வகை எந்திர பிணைப்புகள் உடைய, மெர்சிடிசு நிறுவன எந்திரம் (Mercedes V6 DTM)

எந்திரப் பிணைப்பு (mechanical joint) என்பதில் எந்திரப் பகுதிகளைச் சமநிலைப்படுத்தல், அதிர்வு முதலிய பல்வேறு பிரச்சினைகள் ஆராயப்படுகின்றன. [1] ஓர் எந்திரத்தில் பயன்படும் பல்வகையான பிணைப்புக்களை, அதற்கொப்ப வடிவ கணித முறைப்படி ஆராய்ந்து, எளிய எந்திரத்தின் அமைப்பை அறியலாம். ஓர் எந்திரத்தின் உறுப்புக்களில் இரண்டு தொட்டவாறு இருந்தால், அவற்றை ஓர் இயக்கவியல் இணையுறுப்பு (Kinematic pair) எனலாம்.[2] இது ஒரு பரப்பில் தொட்டவாறு இருந்தால், அவை தாழ்ந்த இணையுறுப்பு எனவும், ஒரு வரையில் தொட்டவாறிருந்தால் உயர்ந்த இணையுறுப்பு என்பர். பிணைப்புக்களின் எண்ணிக்கைக்கும், இணையுறுப்புகளின் எண்ணிக்கைக்கும் இடையே, ஓர் இயற்கணிதத் தொடர்பைப் பெறலாம். இதைப் போலவே, பிணைப்புக்களுக்கும், இணைப்புக்களுக்கும் உள்ள தொடர்பையும் பெறலாம். ஓர் உயர்ந்த இணையுறுப்புப் பதிலாக, இரு தாழ்ந்த இணையுறுப்புகளையும், மேலுமொரு பிணைப்பையும் எந்திரத்தில் பயன்படுத்தலாம்

உராய்வு[தொகு]

ஒரு பிணைப்பின் வேகத்தையும், வேக வளர்ச்சியையும் அறியலாம். ஒரு பிணைப்பின் வேகப்படம் பிணைப்பின் வடிவத்தையே ஒத்திருக்கும். ஆனால், பிணைப்பின் வடிவத்தை வேகத்தின் திசையில் 90 திருப்பி, அதன் வேக பிம்பத்தைப் பெறலாம். வேகவளர்ச்சியும், இதையே ஒத்திருக்கும். ஆனால், அது 90 க்கும் அதிகமான கோணத்தில் திருப்பிப் பெறப்படும். இயக்கம் எந்திரங்களின் சிறப்பியல்பாகும். இயக்கம் உள்ள இடத்தில் உராய்வும், இருக்குமாதலால் எந்திரங்களைப் பற்றிய கொள்கைக்கு உராய்வு முக்கியமானதாகும்.. உராய்வினால் தொல்லை விளையும்போது, அதைக் குறைக்க முயல்கிறார்கள். விசைப்பொறியின் இறுக்குத் தடையைப் போன்ற உறுப்பில் உராய்வு தேவையாகும் போது, குறைவான இடத்தில் அதிகமான உராய்வைப் பெற முயல்வார்கள். உயவிடும்போது உராய்வு குறைவதால் அதுவும் முக்கியமானது.

போக்குமாற்றி[தொகு]

முன்னரே தீர்மானிக்கப்பட்ட பலவகை இயக்கங்களைப் பெறப் போக்குமாற்றிகள் (Cams) பயன்படுகின்றன. ஓர் எஞ்சின் உருளைக்குள் நுழையும் காற்றை அனுமதிக்கும் வால்வுகளும், கழிவு வாயுக்களை வெளியேற்றும் வால்வுகளும், போக்குமாற்றிகளால் இயங்குகின்றன. தானாக இயங்கும் கடைச்சல் எந்திரம், எல்லாவகைகளிலும் இயங்க, அதிலுள்ள உருளைப் போக்குமாற்றி உதவுகிறது. இதன் உதவியால் நிலையான வேகத்தையும், நிலையான வேகவளர்ச்சியையும், சுத்த ஹார்மானிக் இயக்கம் போன்ற பல்வேறு இயக்கங்களையும் பெறலாம். இயக்கத்தைத் தடை செய்ய பிரேக்குப் பயன்படுகிறது. அகத்தே விரிந்து தடுக்கும் பிரேக்கு மோட்டார் வண்டியில் பயன்படுகிறது. தோற்றுவிக்கப்படும் திறனை அளவிட விசைமானி (Dynamometer) பயன்படுகிறது.[3] இது சக்தியை முற்றிலும் ஏற்றோ அல்லது கடத்தியோ அதை அளவிடும் திறன் பெற்றுள்ளது.

பல்லிணைப்பு[தொகு]

பல்லிணைகளும், பல்லிணைத்தொடர்களும், இயக்கத்தைக் கடத்தும் சாதனங்களில் வேறொருவகையாகும். கடிகாநத்திலும் மோட்டாரிலும் உள்ள பல்லிணைகளின் பற்கள் மிக உறுதியாகவும் நழுவாதனவாகவும் இருக்க வேண்டும். இரு சக்கரங்களின் அச்சுக்கள் இணையாகவும், பற்கள் நேராகவும், சாதாரணமாகச் சக்கரங்களின் தளத்திற்கு நேர்க்குத்தாகவும் இருப்பது மேட்டுப் பல்லிணைகள் (Spur gear) எனப்படும். பல்லிணைகளால் இணைக்கப்படும் தண்டுகள் ஒரே தளத்தில் இல்லாவிட்டால் தண்டுகளை இணைக்கும் உராய்வுப் பரப்பில் ஒரு பகுதியைப் பல்லிணைகளையும் இணைக்கப் பயன்படுத்தவேண்டும். இவ்வாறு செய்து சுருள் பல்லிணைகளையும், புழுப்பல்லிணைகளையும் பெறலாம். ஒரு தொடராகப் பின்னியிருக்கும் பல்லிணைகளை, ஒரு சுழலும் பிணைப்புக் கடத்திச் செல்லுமாறு அமைத்துச் சூரியகிரகப் பல்லிணை அமைப்பைப் பெறலாம்.

சம இயக்கச் சக்கரம் (Fly wheel) எந்திரத்தின் வேகத்தை ஒரே நிலையில் கட்டுப்படுத்துகிறது. எந்திரம் வேகமாக ஓட முயன்றால் மிகுதியாக வெளிப்படும் சக்தி சம இயக்கச் சக்கரத்தில் சேமித்து வைக்கப்படுகிறது. தேவையானபோது இந்தச் சக்தி வெளிவருகிறது. சம இயக்கச் சக்கரத்தினால் எந்திரத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த இயலாதுபோனால் 'கவர்னர்' பயன்படுகிறது.


மேற்கோள்கள்[தொகு]

துணை நூல்கள்[தொகு]

  • நூல்கள் - T. Bevan, The Theory of Machines R. F. Mckay, The Theory of Machines..
"https://ta.wikipedia.org/w/index.php?title=எந்திரப்_பிணைப்பு&oldid=2890110" இருந்து மீள்விக்கப்பட்டது