உள்ளடக்கத்துக்குச் செல்

உளநிலைப் பகுப்பாய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உளநிலைப் பகுப்பாய்வு
இடையீடு
ICD-9-CM94.31
MeSHD011572

உளநிலைப் பகுப்பாய்வு என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதிகளிலும் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் ஆஸ்திரியா நரம்பியலாளர் சிக்மண்ட் பிராய்ட் உருவாக்கிய உளவியல் மற்றும் உளவியற் சிகிச்சை முறையாகும். உளநிலைப் பகுப்பாய்வு பல பகுதிகளிலும் வளர்ச்சியுற்று, விமர்சனத்திற்கு உள்ளாகி, விரிவடைந்து காணப்படுகின்றது. பிராய்ட் சில மாணவர்கள் இதில் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

அடிப்படை

[தொகு]

பின்வரும் அடிப்படைக் கோட்பாடுகளை கொண்டு உளநிலைப் பகுப்பாய்வு காணப்படுகின்றது:

  1. மனித நடத்தை, அனுபவம் மற்றும் புலனறிவு என்பன பகுத்தறிவுக்கு மாறான தூண்டுதலால் பாரியளவில் முடிவு செய்யப்படுகிறது.
  2. இத்தூண்டுதல்கள் அனேகமானவை நினைவிழந்தவையாகும்.
  3. இத்தூண்டுதல்கள் விழிப்புணர்வுவை சந்திக்கும் முயற்சி உளவியல் தடையை பாதுகாப்பு செயலமைவு எனும் வடிவில் சந்திக்கின்றது.
  4. ஆளுமையின் மரபுரிமையாய்ப் பெறப்பட்ட இயற்கை மனநிலை தவிர ஒருவருடைய அபிவிருத்தி ஆரம்ப கால குழந்தைப் பருவ சம்பவங்களால் முடிவு செய்யப்படுகின்றது.
  5. உண்மை நிலையின் உணர்வுநிலைப் பார்வை மற்றும் உணர்வற்ற பொருள் என்பவற்றுக்கிடையேயான முரண்பாடு மன தொந்தரவுகளான நரம்புக் கோளாறு, நரம்புக் கோளாற்றுத் தொடர்ச்சி, திகில், மன அழுத்தம் போன்றவற்றை உருவாக்கவல்லன.
  6. உணர்வற்ற பொருளின் தாக்கத்திலிருந்து விடுபடுதல் பொருள் நிலையை உணர்வுநிலைக்கு கொண்டு வருதலால் அடையக்கூடியதாய் இருக்கின்றது.[1]

உளப்பகுப்பு

[தொகு]

உளப்பகுப்பியல் (Psycho-analysis) என்பது பொதுவாக உளக்கோளாறு மருத்துவத்தையோ அல்லது பிறழ்வான உளவியலையோ குறிப்பதாகக் கருதுவர். ஆனால் அறிவியல் முறைப்படி பார்த்தால் இந்தச் சொற்றொடர் பிராய்டு என்பவர் வகுத்த உளவியல் பகுதியும், அதன் கருத்து அடிநிலைகளும், உளக் கோளாறுகளைக் குணப்படுத்துவதற்கான முறையும், அதன் கருத்து அடிநிலைகளும் என்னும் இரண்டு பொருளையுமே குறிக்கும்.

பிராய்டு வகுத்த உளவியல் பகுதியின் அடிப்படையான கொள்கைகள் அவர் நனவிலி உளம்பற்றி வகுத்துள்ள கொள்கையுடன் தொடர்புடையனவாகும். பிராய்டு வகுத்த கொள்கையை உளவியல் நியதிக் கொள்கை (Psychic determinism) என்று பலகால் கூறுவதுண்டு. ஒரு குறிப்பிட்ட வேளையில் ஒருவர் செய்யும் செயலுக்குக் காரணம் முன்னால் உளத்தில் அதிலும் முக்கியமாக நனவிலி உளத்தில் நிகழ்ந்தனவே என்று அவர் கூறுகறார். எந்த உளநிகழ்ச்சியும் முற்றிலும் மறைந்து போவதில்லை என்பதும், அது நனவிலி உளம் என்னும் உளப்பெரும் பகுதியில் சேர்ந்துவிடுகிறது என்பதும் அவர் கருத்து ஆக்கம்.

பாலின உந்துதல்

[தொகு]

மனிதர் செய்யும் செயல்களுக்கெல்லாம் வேண்டிய ஊக்கநிலையும் ஆற்றலும் பால் இயல்பூக்கத்தினின்றே உண்டாகின்றன என்று பிராய்டு கூறுகிறார். குழவிகளிடமும் பால் உணர்ச்சி காணப்படுகிறது என்று ஈறி, இவர் உலகத்தைத் திடுக்கிடச் செய்தார். குழவிகளிடமும் குழந்தைகளிடமும் காணப்படும் பால் உந்தலால் (Sex urge) உண்டாகும் எழுச்சிகள், அவற்றால் ஏற்படும் முரண்பாடுகள் முதலியவற்றை அடிநிலையாக வைத்து, இவர் உளவியல் ஒன்றை நிறுவியுள்ளார். இது போலவே இவர் ஈடிப்பஸ் கோட்டம், எலக்டிராகோட்டம் என்பவற்றை வகுத்துள்ளார். இந்தக் கோட்டங்கள் ஆண் குழந்தைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதில் தங்கள் தாயரிடம் பால் பற்றும், தந்தையரிடம் பால் அழுக்காறும் உடையவர் என்றும், பெண் குழந்தைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதில் தங்கள் தந்தையரிடம் பால் பற்றும், தாயரிடம் பால் அழுக்காறும் உடையவர் என்றும் முறையே பொருள்படும். ஆகவே பிராய்டு வகுத்த உளப்பாகு பாட்டியலானது மனிதனுடைய வாழ்க்கை நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் அடிப்படைக் காரணங்கள் இந்தக் கோட்டங்களே (Complexes) என்று கூறுவதாகும். ஈடிப்பஸ் கோட்ட முண்டாகும் வயதில் குழந்தைக்கு ஏற்படும் உளச்சிக்கல்களையும் அதன் ஆளுமை வளர்ச்சி அடையும் ஆறுகளையும் இந்த இயலானது மிக்க திறமையுடன் விளக்குகின்றது. இந்த இயலார் கூறுவனவற்றில் பெரும்பாலான கருத்துக்கள் பின்னர்ச் செய்த ஆராய்ச்சிகளாலும் அனுபவங்களாலும் வலியுறுகின்றன. நம்முடைய நாகரிகம், வாழ்க்கையில் ஏற்படும் இன்பதுன்பங்கள், பெருந்தகைமையின் அழகு, பிறழ்வான நடத்தையில் ஏற்படும் சிக்கல்கள் ஆகியவை அனைத்துக்கும் காரணம் பால் உந்தலின் பலவிதத் தோற்றங்களும், பலவகைச் சூழ்நிலைகளால் குழந்தைக்கு ஏற்படும் எதிர்ப்புக்களுமே காரணம் என்று இந்த இயலார் கூறுவர்.

இரட்டைமுரண்கள்

[தொகு]

உளப்பகுப்பியலார் கூறும் மற்றொரு கருத்து யாதெனில், பலவித இரட்டைமுரண்கள் வாழ்க்கையை உருவாக்குவன என்பதாகும். எடுத்துக் காட்டாக, உண்மைத் தத்துவம் - இன்பத் தத்துவம் ; உயிர் இயல் பூக்கங்கள் - இறப்பு இயல்பூக்கங்கள், அகம்- இத்(Id); நனவிலி உளம் கண்டனம் முதலியனவாம். ஒருவருடைய வாழ்க்கையும் ஆளுமையும் கொண்டுள்ள உருவம் இந்த முரண்களின் விளைவேயாகும். இதுகாறும் பிராய்டின் உளவியலின் அடிப்படைக் கருத்துக்களைக் கூறினோம். பிராய்டு நரம்பு மண்டல மருத்துவராயிருந்தார். அவர் நரம்பு மண்டலக் கோளாறுகளையுடைய நோயாளிகளுக்குச் சிகிச்சை செய்துவந்ததன் பயனாகவே உளவியல் ஆராய்ச்சிகள் நடத்த நேர்ந்தது. இவ்வாறு இவர் பிறழ்வான உளம்பற்றி அடைந்த அனுபவங்களை வைத்தே தம் உளவியல் உண்மைகளை நிறுவுவதால் இவர் கூறும் உண்மைகள் முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கன் அல்ல என்று சில வேளைகளில் கூறப்படுகிறது.

பிராய்டு வகுத்த உளப்பகுப்பியலானது உளக்கோளாறுகளைக் குணப்படுத்துவதற்காக, அக்காலத்தில் கையாண்ட உளநோய் சிகிச்சை (Psychiatric) முறைகளைவிடச் சிறந்த முறையாக இருந்தது. நனவிலி உளத்தின் தன்மையையும், அது உளக்கோளாறுகளை உண்டாக்கும் தன்மையையும் அறிந்த பிராய்டு நனவிலி உளத்தைப் பாகுபாடு செய்யும் முறைகளைக் காணும் முயற்சியில் ஈடுபட்டார். உளப்பகுப்பியலின் முக்கிய நோக்கம் உளக்கோளாறுகள் உண்டாவதற்கு அனுகூல காரணங்களாக (Predisposing causes) உளத்தினுள்ளவற்றை நன்றாக அறிவதும் பாகுபாடு செய்வதுமேயாகும். ஆனால் தூண்டுங் காரணம் (Exciting c.), நோய்க்குறி உண்டாக்கும் காரணம், நோயை நிலைபெறுத்தும் காரணம் போன்ற பிற காரணங்கள் பற்றி இவருடைய இயல் அழுத்திக் கூறுவதில்லை. இந்த அனுகூலக் காரணங்களே குழந்தைப் பருவத்திலிருந்து ஒருவருடைய நனவிலி உளத்தில் அடங்கியனவாகும்.

விருப்பக் கருத்தியைபு முறை

[தொகு]

நனவிலி உளத்தைப் பாகுபாடு செய்து வெளியில் புலனாகும்படி செய்வதற்குப் பிராய்டு தொடக்கத்தில் உளவசிய முறையைக் கையாண்டார். ஆனால் அம்முறையைக் கையாள்வதில் சில இடையூறுகளும் சில கருத்துக் குறைகளும் தோன்றியபடியால் இவர் அம்முறையை விட்டுவிட்டு, 'விருப்பக் கருத்தியைபு முறை' (Free association method) என்பதை வகுத்தார். நோயாளியைப் படுக்கச் செய்து, தசைகளை எல்லாம் தளர்த்தி, முழு ஓய்வுநிலை அடையுமாறு செய்யவேண்டும். அதன்பின் அவர் உளத்தில் தாமாக வரும் கருத்துக்களைத் தடைசெய்யாதிருக்கவேண்டும்; அவ்வாறு வரும் கருத்துக்களை மருத்துவரிடம் கூறுமாறு சொல்லவேண்டும்.

நோயாளியை ஏதேனும் ஒரு குறிப்பிட்ட கருத்தைத் தொடர்ந்து வரும் கருத்துக்களைத் தடைசெய்யாதிருந்து, அவற்றை மருத்துவரிடம் கூறும்படி சிலவேளைகளில் சொல்லுவதுண்டு. இதற்கு அடிப்படையாகவுள்ள தத்துவம், கருத்துக்கள் தாமாக வருவதில்லை என்பதும், நனவிலி உளத்திலுள்ளவையே அவற்றை நடத்துவன என்பதுமாகும். ஆனால் இப்படிக் கூறுவதிலிருந்து இந்நிகழ்ச்சி எளிதானது என்பதில்லை. நனவிலி உளத்தில் அடங்கியிருப்பவற்றை எளிதில் வெளியே புலனாக வொட்டாமல் உளத்திலுள்ள தணிக்கைப்பான்மை அல்லது எதிர்ப்புத்தன்மை (Censor or Resistance) தடுத்து விடுகின்றது. நோயாளி தன் உள்ளத்தில் தோன்றுவனவற்றை ஒளியாமல் கூற அவருடைய உள்ளம் எளிதில் இசைவதில்லை.

ஆதலால் உளப்பகுப்பியல் வல்லுநர் நோயாளி கூறுவதைக் கவனிப்பதுபோல, கூறாது விடுப்பதையும் கவனிப்பார். கூறாது விடுப்பவை எவை என்பதை நோயாளியின் தயங்குதல், தவறுதல், முகத்தோற்ற மாறுதல்கள் போன்றவற்றைக் கவனித்து அறிந்து கொள்வார். தம்முடைய உளநோய் தீர்ந்து, நலம்பெற வேண்டும் என்று மிகுந்த ஆவலுடன் வரும் நோயாளியுங்கூட மேலெழுந்தவாரியாகவுள்ள கருத்துக்களைக் கூறிய பின்னர், எதிர்ப்பு மனப்பான்மையைக் காட்டத் தொடங்கிவிடுகிறார். இந்த எதிர்ப்பு மனப்பான்மை மிகவும் முக்கியமானதோர் உளவியல் கருத்தாயிருப்பதால் ஆராய்ச்சியாளர் அதைப்பற்றி மிகுந்த பயன் தரத்தக்க உண்மைகள் பலவற்றைக் கண்டு கூறியுள்ளனர்.

கனவுப்பகுப்பு

[தொகு]

தாமாக இணைந்துவரும் கருத்துக்களைக் கூறுமாறு சொல்லும் முறையுடன், கனவுப்பகுப்பு (Dream analysis) முறையும் பயன்படுத்தப்படுகிறது. கனவே நனவிலி உளம் பேசும் மொழி என்று கருதப்படுகிறது. கனவுகளின் உட்பொருளை விளக்குவதற்கு வேண்டிய விஞ்ஞான முறைகளைப் பிராய்டு மிக விரிவாக வகுத்துளர். கனவில் காணும் பொருள்களையும் அவை கூறும் கதையையும் முக்கியமானவைகளாகக் கருதுவதில்லை. நனவிலி உளத்திலுள்ளவை குறியீட்டு உருவத்திலேயே கனவுகளில் தோன்றுகின்றன. அதனால் கனவுகளைப் பாகுபாடு செய்வது என்பது மிகுந்த சிக்கலானதொரு வேலையாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Erich Fromm (1992:13–14) The Revision of Psychoanalysis

ஆதாரங்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உளநிலைப்_பகுப்பாய்வு&oldid=3668911" இலிருந்து மீள்விக்கப்பட்டது