ஈயம் பூசுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பித்தளைப் பாத்திரத்தில் புளி முதலியவற்றால் ஆகும் இரசாயன மாற்றத்தைத் தடுக்க அவற்றின் உட்பகுதியில் தகரத்தை (Tin) உருக்கித் தடவுதல், ஈயம் பூசுதல் அல்லது கலாய் பூசுதல் எனப்படும்.

மரபு சார்ந்த தொழில்[தொகு]

ஈயம் பூசுதல் என்பது மரபு சார்ந்த தொழில். நாம் அன்றாடம் உபயோகப் படுத்தும் செம்பு, பித்தளை, மற்றும் வெங்கலப் பாத்திரங்கள் புளி சேர்த்து சமைத்த பொருட்களை சேமித்து வைத்தால் நாளடைவில் பச்சை நிறக் களிம்பு படிந்து உணவை நஞ்சாக்கிவிடும் அபாயம் உண்டு. இதைத் தடுக்க பாத்திரங்களில் ஈயம் பூசினார்கள்.

தமிழர்கள் உலோகவியல்[தொகு]

சமையல் பாத்திரங்கள்[தொகு]

தமிழர்கள் அன்றாட உபயோகத்தில் ஐந்து உலோகங்கள் இருந்தன. இவை பொன், வெள்ளி, செம்பு, பித்தளை மற்றும் வெண்கலம் என்பன. பொன் மற்றும் வெள்ளி விலை உயர்ந்தவை. ஆபரணங்கள் செய்ய உதவும். செம்பு சூடு தாங்கும் உறுதியான தாமிர பாத்திரம் நெடுங்காலம் நிற்கும். ஆனால் அதிகம் களிம்பு பிடிக்கும். இரண்டு பங்கு செம்பும் ஒரு பங்கு நாகமும் சேர்த்து உண்டாக்குவது பித்தளை. பித்தளையில் செய்யும் பாத்திரங்கள் உறுதியானவை. அடுப்பில் சூடு தாங்கும். எனினும் சற்று களிம்பேறும் தன்மையுடையது. செம்பையும் வெள்ளீயத்தையும் கலந்து வெண்கலம் உண்டாக்கப்படுகிறது. வெண்கலப் பாத்திரங்கள் பயன்படுத்த எளிதானது. சூடு தாங்கும் என்றாலும் சிறிது களிம்பு பிடிக்கும். எனவே களிம்பு படிதலைத் தவிர்க்க ஒரு சிறப்பு உலோகம் பூச்சாக உருக்கி உள்ளிடப்படுகிறது.

ஈயம் பூசுதல்[தொகு]

ஆனால் நாம் ஈயம் பூசுதல் என்று குறிப்பிடுவது தகரம் (Tin) என்ற உலோகப் பூச்சைத் தான். ஈயம் கொடிய விஷமுள்ளது. எனவே இவ்வுலோகத்தை செம்பு, பித்தளை மற்றும் வெண்கலப் பாத்திரங்களில் களிம்பு படிவதைத் தடுப்பதற்காக பூச இயலாது. மாற்றாக தகரம் உணவுப் பொருட்களைப் பாதுகாக்கும் குணநலனுடையது. எனவேதான் பழம், ஈரட்டி (பிஸ்கட்), பழரசம் போன்ற உணவுப் பொருட்கள் தகரத்தால் செய்த டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. எனினும் தகரத்தில் குறைந்த அளவு ஈயம் கலக்கப்படுவதுண்டாம்.

ஈயம் பூசும் தொழிலாளர்கள்[தொகு]

ஈயம் பூசும் தொழிலாளர்கள் இதை ஒரு மரபுத் தொழிலாகச் செய்து வருகிறார்கள். கிராமங்களிலும் நகரங்களிலும் இவர்கள் தற்காலிகமான இடத்தில் இந்தத் தொழிலைச் செய்கிறார்கள். கிராமங்களில் குடும்பத்துடன் மரத்தடிகளில் அமர்ந்து இந்தத் தொழிலில் ஈடுபடுகிறார்கள். ஆனால் துருவுறா எஃகு கொண்டு செய்யப்படும் பாத்திரங்கள் அதிகமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளபடியால் ஈயம் பூசுதல் என்ற இந்தத் தொழில் அருகி வருகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈயம்_பூசுதல்&oldid=2943630" இலிருந்து மீள்விக்கப்பட்டது