இராஜஸ்ரீ ஓஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜஸ்ரீ ஓஜா
பிறப்புகொல்கத்தா, இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2005–தற்போது

இராஜஸ்ரீ ஓஜா (Rajshree Ojha, பிறப்பு 1976) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் ஆயிஷா (2010) மற்றும் சௌரஹேன் (2007) ஆகிய படங்களை இயக்கியதற்காக அறியப்படுகிறார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கொல்கத்தாவை சேர்ந்தவரான இராஜஸ்ரீ 1976 இல் பிறந்தார். என்றாலும் இவர் பெங்களூரில் வளர்ந்தார். பின்னர் கணினி அறிவியலில் பட்டப்படிப்புக்காக நியூயார்க் நகரத்திற்குச் சென்றார். பட்டப்படிப்பை முடித்த பிறகு, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் திரைப்படத் தயாரிப்பைக் கற்றுக் கொள்ளச் சென்றார். [1] அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் திரைப்படத் தயாரிப்பில் முதுகலை பட்டம் பெற்றார். இவரது பட்டயப்படிப்பின் ஒரு பகுதியாக எடுத்த பேட்ஜர் என்ற இவரது குறும்படம், சிறந்த இயக்கத்திற்கான அமெரிக்கன் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டின் ஸ்பிரிட் ஆஃப் எக்ஸலன்ஸ் விருதைப் பெற்றது. டைரக்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்காவால் ஆசிய குரல் என்ற பெருமையையும் பெற்றார். [2] இவர் 2005 இல் இந்தியா திரும்பினார்.

பிரபல இந்தி புதின எழுத்தாளர் நிர்மல் வர்மாவின் நான்கு சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட படமான சௌரஹேன் திரைப்படமே இராஜஸ்ரீயின் முதல் படமாகும். இந்த படத்தின் பணிகள் 2002 ஆம் ஆண்டின் துவக்கத்தில் தொடங்கின. இப்படத்தில் சோஹா அலி கான், சீனத் அமான், கீரா சாப்ளின், நெடுமுடி வேணு போன்ற நடிகர்கள் நடிக்க அமர்த்தப்பட்டனர். இருப்பினும் தயாரிப்பாளர் இறுதி நேரத்தில் படத்தயாரிப்பில் இருந்து விலகினார். இதனால் இராஜஸ்ரீ படத்தை தானே தயாரிக்க முடிவு செய்தார். இறுதியாக படம் 2005 இல் தொடங்கப்பட்டது. 2007 இல் 1.80 கோடி செலவில் படத்தின் பணிகள் முடிக்கப்பட்டன. நிதிச் சிக்கல்கள் காரணமாக இந்தப் படத்தின் பணிகள் பலமுறை கிடப்பில் போடப்பட்டன. இறுதியாக 2012 ஆம் ஆண்டு பிவிஆர் பிக்சர்ஸின் முயற்சியான டைரக்டர்ஸ் ரேர் மூலம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இதற்கிடையில், இப் படம் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. [3] [4] [5]

சௌரஹேன் இராஜஸ்ரீயின் முதல் படம் என்றாலும், ஆயிஷா படமே இவருக்கு பரவலான அறிமுகத்தைப் பெற்றுத் தந்ததாகக் கருதப்படுகிறது. இப்படத்திற்கான பணிகள் 2009ல் துவங்கின. சோனம் கபூர் மற்றும் அபய் தியோல் நடித்துள்ள இந்த படத்தை அனில் கபூர் தயாரித்தார். ஜே ஆஸ்டினின் எம்மா என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் திரைக்கதையை தேவிகா பகத் எழுதினார். இப்படம் 2010இல் வெளியாகி கலவையான வரவேற்பைப் பெற்றது. பின்னர் ராஜ்ஸ்ரீ, படத்தின் இறுதிக் கட்டத்தை வடிவமைத்ததில் தனக்கு எந்த சுதந்திரமும் இல்லை என்றும், அதை தயாரிப்பாளர் அனில் கபூரே முழுமையாக வடிவமைத்ததாகவும் கூறினார். திரையில் காணப்பட்டவை இவருடைய கற்பனைக்கு அருகில் இல்லை. [6]

ராஜ்ஸ்ரீயின் அடுத்த படம் எக்ஸ்: பாஸ்ட் ஈஸ் பிரசண்ட் திரைப்படமாகும், இது எட்டு இயக்குனர்களை உள்ளடக்கிய ஒரு தொகைப்படத் திரைப்படமாகும். ராதிகா ஆப்தே மற்றும் ரஜத் கபூர் முன்னணி பாத்திரதில் நடித்த பிரியாணி என்ற குறும்படப் பகுதியை இவர் இயக்கினார். இது தங்கள் திருமண நாள் விழாவில் பிரிந்த ஒரு இணையர் பற்றியது ஆகும். [7]

  • சௌரஹேன் (2007) (இயக்குநர் மற்றும் எழுத்தாளர்)
  • ஆயிஷா (2010) (இயக்குநர்)
  • எஸ்: பாஸ்ட் ஈஸ் பிரசண்ட் (2015) ( பிரியாணி பகுதியின் இயக்குநர் மற்றும் எழுத்தாளர்)
  • பின் குச் கஹே (2017) (எழுத்தாளர், தயாரிப்பாளர்)
  • பொட்லக் (இந்திய வலை தொடர்) (2021) (இயக்குநர்)
  • பொட்லக் பருவம் 2 (2023) (இயக்குநர்)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rajshree Ojha on directing Aisha - Rediff.com".
  2. "I know the box office outcome of Chaurahen won't be great at all: Rajshree Ojha". 29 February 2012.
  3. "Second debut? - The Hindu". தி இந்து.
  4. "Rajshree Ojha returns with Chaurahen, says no compromise this time".
  5. "A Decade of Despair". 15 March 2012.
  6. "Aisha was not my film - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  7. "Rajshree Ojha's next stars Radhika Apte and is called 'Biryani'".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜஸ்ரீ_ஓஜா&oldid=3908769" இலிருந்து மீள்விக்கப்பட்டது