இந்திய செம்மார்புக் குக்குறுவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய செம்மார்புக் குக்குறுவான் (அறிவியல் பெயர்: Psilopogon haemacephalus indicus என்பது செம்மார்புக் குக்குறுவானின் துணையினம் ஆகும்.[1] இது வடகிழக்கு பாக்கித்தானிலிருந்து இலங்கை, சீனா, வியட்நாம், சிங்கப்பூர் வரை பரவியுள்ளது.

விளக்கம்[தொகு]

இது சிட்டுக்குருவியை விடச் சற்று பெரியதாக சற்று பருத்த தோற்றத்துடன் சுமார் 16 செ. மீ. நீளம் இருக்கும். இதன் அலகு கறுப்பாகவும் பருத்தும் இருக்கும். அலகடி கம்பித் தூவிகள் நீளமாக இருக்கும். விழிப்படலம் பழுப்பாகவும், கால்கள் பவளச் சிவப்பாகவும் இருக்கும். இதன் நெற்றியும் மார்பும் ஆழ்ந்த சிவப்பு நிற்றத்தில் இருக்கும். உடலின் மேற்பகுதி புல் பச்சை நிறத்திலும், தொண்டை மஞ்சள் நிறத்திலும் இருக்கும். உடலின் கீழ்ப்பகுதி பசுங்கோடுகள் நிறைந்த வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் வால் குறுகலாக நுனி உட் குழிந்து காணப்படும்.[2]

பரவலும் வாழிடமும்[தொகு]

இந்திய செம்மார்புக் குக்குறுவான் பறவையானது வடகிழக்கு பாக்கித்தானிலிருந்து இலங்கை, சீனா, வியட்நாம், சிங்கப்பூர் வரை பரவியுள்ளது. தென்னிந்தியா முழுவதும் சமவெளிகளில் எங்கும் சாதாரணமாகக் காணப்படும் குக்குறுவான் இதுவாகும்.

நடத்தை[தொகு]

இப்பறவை சமவெளிப் பகுதிகளில் உள்ள மரங்களில் உயரத்தில் தனித்தோ, இணையாகவோ சிறு கூட்டமாகவோ அமர்ந்திருக்கும். இப்பறவை மரங்களில் உயரமாக அமர்ந்து 'டொக்.. டொக்.. டொக்கு' என்று குரல் எழுப்பும். இதன் ஒலியானது பாத்திர வேலை செய்வோர் தகட்டினை தொடர்ந்து தட்டுவது போன்று இருக்கும். இது இவ்வாறு தொடர்ந்து ஒலி எழுப்பினாலும் இதனைக் கண்டு கொள்வது கடினம், காரணம் உருவில் சிறியதான இப்பறவை, பசுமையான நிறத்தில் உள்ளதும், பிற பறவைகள் போல கிளைக்கு கிளை தாவி ஆர்பாட்டம் செய்யாமல் ஒரே இடத்தில் நெருநேரம் இருப்பதும் இது பார்வையில் படாமல் இருப்பதற்கு காரணங்கள் ஆகும். இதன் முதன்மை உணவாக சிறு பழங்கள் உள்ளன. சிலசமயங்களில் பறக்கும் பூச்சிகளை பிடித்து உண்ணும்.[2]

இனப்பெருக்கம்[தொகு]

இவை பெப்ரவரி முதல் ஏப்ரல் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. இவை முள்முருக்கு, முருங்கை போன்ற மரங்களின் காய்ந்த கிளையில் பொந்து குடைந்து அதில் மூன்று அல்லது நான்கு முட்டைகளை இடும். முட்டைகள் வெண்மையாக இருக்கும். ஆணும் பெண்ணும் இணைந்து அடைகாத்து குஞ்சுகளைப் பேணும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Short, L.L.; Horne, J. F. M.; Kirwan, G. M. (2020). "Coppersmith Barbet (Psilopogon haemacephalus)". in del Hoyo, J.. Handbook of the Birds of the World and BirdLife International Illustrated Checklist of the Birds of the World. 7: Jacamars to Woodpeckers. Barcelona, Spain and Cambridge, UK: Lynx Edicions and BirdLife International. doi:10.2173/bow.copbar1.01. https://www.hbw.com/species/coppersmith-barbet-psilopogon-haemacephalus. 
  2. 2.0 2.1 2.2 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 317-318.