இந்தியத் தவிட்டுப்புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியத் தவிட்டுப்புறா அல்லது இந்தியச் சிவப்பு கள்ளிப் புறா[1] (உயிரியல் பெயர்: Streptopelia tranquebarica tranquebarica) (Indian red collared dove) என்பது தவிட்டுப்புறாவின் துணையினம் ஆகும்.[2] இப்பறவை பாக்கித்தான், தீபகற்ப இந்தியா, மேற்கு நேபாளம் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.

விளக்கம்[தொகு]

மைனா அளவுள்ள இப்பறவை சுமார் 23 செ.மீ. நீளம் இருக்கும். தலையும் பிடரியும் வெளிர் சாம்பல் நிறத்தில் இருக்கும். கழுத்தில் ஒரு கறுப்புக் கோடு காணப்படும். உடலின் மேற்பகுதி, மார்பு, வயிறு ஆகியவை 'ஒயின்' சிவப்பு நிறத்தில் இருக்கும். போர்வைச் சிறகுகள் கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கும். வால் பழுப்பும் சாம்பலும் கலந்து காணப்படும். வாலின் ஓர இறகுகளும் முனையும் வெண்மையாக இருக்கும். பெண் பறவை பழுப்பு கலந்த சாம்பல் நிறத்தில் ஐரோவாசிய கழுத்துப்பட்டைக் கள்ளிப் புறாவை பெரிதும் ஒத்து இருக்கும்.[1]

பரவலும் வாழிடமும்[தொகு]

இப்பறவை பாக்கித்தான், தீபகற்ப இந்தியா, மேற்கு நேபாளம் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது. தென்னிந்தியாவின் வடக்குப் பகுதிகளில் ஆங்காங்கே சிறு புதர் காடுகளிலும், விளை நிலங்களின் இடையே உள்ள இலையுதிர் காடுகளிலும் காணப்படும். தென் பகுதிகளில் அரிதாக காணலாம்.[1]

நடத்தை[தொகு]

இதன் பழக்க வழக்கங்கள் ஐரோவாசிய கழுத்துப்பட்டைக் கள்ளிப் புறாவை ஒத்தவை. ஆனால் அவை போல மனித நடமாட்டமுள்ள பகுதிகளில் அச்சமின்றி நெருங்கிப் பழகுவது இல்லை என்பதால் அதனைப் போல மிகுதியாகக் காண முடியாது. இது தானியங்களை முதன்மையாக உண்கிறது. க்ரூஉ கூக், க்ரூஉ உ குரூர் என உரத்தக் குரலில் ஒலி எழுப்பும்.

இவை ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்பவை. மரங்களில் ஏழு முதல் எட்டு மீட்டர் உயரத்தில் குச்சிகளைப் பரப்பி இரண்டு வெள்ளை முட்டைகளை இடும். அரிதாக மூன்று முட்டைகளை இடுவதும் உண்டு. ஆண் பறவையும் பெண் பறவையும் கூடு கட்டுவதிலும், அடை காப்புப் பொறுப்பில் பங்கேற்கும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 220-221. 
  2. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Pigeons". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 28 February 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியத்_தவிட்டுப்புறா&oldid=3776868" இலிருந்து மீள்விக்கப்பட்டது