இட்சுகுசிமா கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இட்சுகுசிமா சிற்றாலயம் (厳島神社 Itsukushima-jinja?) என்பது இட்சுகுசிமா தீவில் அமைந்துள்ள ஒரு சின்டோ சிற்றாலயம் ஆகும். இத்தீவு அங்குள்ள மிதக்கும் தோரீ வாயிலுக்காகப் பெரிதும் அறியப்படுகின்றது.[1] இது சப்பானின், இரோசிமா மாகாணத்தில் உள்ள அட்சுகைச்சி நகரத்தில் உள்ளது. இந்தச் சிற்றாலயத் தொகுதி யுனெசுக்கோவின் உலக பாரம்பரியக் களமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன் இத்தொகுதியில் உள்ள பல கட்டிடங்களைச் சப்பானிய அரசாங்கம் தேசியச் செல்வங்களாக அறிவித்துள்ளது.[2]

இட்சுகுசிமா சிற்றாலயம் சப்பானின் மிகவும் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகின்றது. இதன் மிதக்கும் வாயிலுக்கும்,[2] மிசென் மலையின் புனிதமான சிகரங்களுக்கும், விரிந்த காடுகளுக்கும், கடற் காட்சிகளுக்கும் இது பெயர் பெற்றது. சிற்றாலயத் தொகுதி ஒன்சா சிற்றாலயம், செசா மரோடோ-சிஞ்சா ஆகிய முக்கியமான கட்டிடங்களுடன் மேலும் 17 கட்டிடங்களையும் அமைப்புக்களையும் உள்ளடக்கியது.[3]

வரலாறு[தொகு]

இது 593 ஆம் ஆண்டு சுயிக்கோ காலத்தில் சயேக்கி குராமோட்டா என்பவரால் கட்டப்பட்டது எனக் கூறப்படுகின்றது.[2] ஆனாலும் தற்போதைய சிற்றாலயம் முன்னணிப் போர்த் தலைவனான தைரா நோ கியோமோரி என்பவரால் கட்டப்பட்டது எனபது பரவலான நம்பிக்கை. 1168 இல் இவர் அக்கி மாகாணத்தின் ஆளுனராக இருந்தபோது இச்சிற்றாலயக் கட்டிடங்களைக் கட்டுவதற்குப் பெருமளவு உதவியதாகத் தெரிகின்றது.[4] இதற்கு உதவிய இன்னொருவர் சோசுவின் தலைவனாக இருந்த மோரி மோட்டோனாரி.[2][4] இவர் 1571 இல் ஒன்டென் (சின்டோ ஆலயங்களின் மிகப்புனிதமான பகுதி) கட்டிடத்தை மீளக் கட்டுவித்தார். 1555 இல் சூவே தக்கஃபூசாவுக்கு எதிராக நடத்திய போரின்போது இத்தீவில் சண்டையில் ஈடுபட்டதால் இத்தீவின் நிலங்களை மோட்டோனாரி தூய்மை இழக்கச் செய்ததாக நம்பப்படுகின்றது. இது சின்டோ ஆலயங்கள் நிலைநாட்ட விழையும் புனிதமான தூய்மை என்னும் இறுக்கமான கருத்தமைவுடன் தொடர்புள்ளது.[4] காமக்குரா காலப்பகுதியிலிருந்து இட்சுகுசிமா சிற்றாலயத்தில் தப்பியிருப்பது கியாகுடென் என்னும் ஒரு அமைப்பு மட்டுமே.

கியோமோரி[தொகு]

16 ஆம் நூற்றாண்டில் போர்த் தலைவர்கள் தமது அதிகார பலத்தையும் சிறப்பையும் எடுத்துக் காட்டுவதற்காகக் கோயில்களைக் கட்டுவதும், பிற கட்டிடத் திட்டங்களை முன்னெடுப்பதும் வழக்கம்.[5] தைராக்கள், சுங் வம்சத்துடன் கொண்டிருந்த கடல்வழி வணிகத் தொடர்புகளுக்காகவும், உள்நாட்டுக் கடற் பகுதிகளின் வெளிநாட்டு வணிகத்தில் தனியுடமையை நிலைநாட்ட முயன்றது தொடர்பிலும் பெரிதும் அறியப்படுகின்றனர்.[6] தீவின்மீது தைரா மேலாட்சியை நிறுவியபோது கியோமோரியின் அதிகார பலம் மிக உயர்ந்த நிலையில் இருந்தது. கடற்பயணப் பாதுகாப்புக்கான கடவுளை வழிபாட்டுக்காகவும், கடல்சார்ந்த நடவடிக்கைகளுக்குத் தளமாகப் பயன்படுவதற்காகவும் இட்சுகுசிமா கோயிலின் முதன்மை மண்டபத்தைக் கட்டும்படி கியோமோரி உத்தரவிட்டார். இட்சுகுசிமா கோயில் விரைவிலேயே தைராக்களின் குடும்பக் கோயில் ஆகியது.[2] பெருமளவு பணத்தை இட்சுகுசிமாவில் செலவு செய்த கியோமோரி அவ்விடத்தை நண்பர்களுக்கும், சில சமயங்களில் அரச ஆளுமைகளுக்கும் காட்டி மகிழ்ந்தார்.

இட்சுகுசிமாத் தீவில் கோயில் ஒன்றைக் கட்டி அங்கே உறையும் கடவுளை வழிபட்டால் சப்பானின் மீது மேலாட்சி கிடைக்கும் எனக் கனவொன்றில் வந்த வயதான குருவானவர் உருதிமொழி கொடுத்ததனால், கியோமோரி கோயிலை மீளக் கட்டியதாகவும் சொல்லப்படுகின்றது.[4][2] தைராவினால் நிதி வழங்கப்பட்டு இடம்பெற்ற திருத்த வேலைகளினால், இட்சுகுசிமா ஒரு முக்கிய மத நிலையமாக வளர்ச்சியுற்றது. "[7]

மத முக்கியத்துவம்[தொகு]

இட்சுகுசிமாக் கோயில் சுசானோ-ஓ நோ மிக்கோட்டோவின் மூன்று மகள்களான இச்சிகிசிமகிமே நோ மிக்கோட்டோ, தகோரிகொமே நோ மிக்கோட்டோ, தசிட்சுகிமே நோ மிக்கோட்டோ ஆகியோருக்கு உரித்தாக்கப்பட்டது. இவர்கள் கடலுக்கும், புயலுக்குமான சின்டோ கடவுள்கள் ஆவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Louis-Frédéric|Nussbaum, Louis-Frédéric (2005). "Itsukushima-jinja" in Japan Encyclopedia, p. 407.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Cali, Joseph; Dougill, John; Ciotti, Geoff (2013). Shinto Shrines: A Guide to the Sacred Sites of Japan's Ancient Religion. University of Hawai'i Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780824837136. 
  3. "Ramsar and World Heritage Conventions: Converging towards success - Case study: Itsukushima Shinto Shrine, Japan" (PDF). Ramsar. 15 September 2017.
  4. 4.0 4.1 4.2 4.3 Sadler, A.L. (1963). A Short History of Japanese Architecture. https://archive.org/details/shorthistoryofja0000sadl. 
  5. Calza, Gian Carlo (2002). Japan Style. Phaidon. பக். 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1100744452. 
  6. Shively, Donald H. (1999). The Cambridge History of Japan, Volume 2: Heian Japan. Cambridge University Press. பக். 635. 
  7. BLAIR, HEATHER (2013). "Rites and Rule: Kiyomori at Itsukushima and Fukuhara". Harvard Journal of Asiatic Studies 73 (1): 1–42. பன்னாட்டுத் தர தொடர் எண்:0073-0548. https://archive.org/details/sim_harvard-journal-of-asiatic-studies_2013-06_73_1/page/1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்சுகுசிமா_கோயில்&oldid=3794383" இலிருந்து மீள்விக்கப்பட்டது