உள்ளடக்கத்துக்குச் செல்

இங்காங்கட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இங்காங்கட் என்பது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் வர்தா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். பரப்பளவு மற்றும் மக்கட் தொகை அடிப்படையில் இங்காங்காட் வர்தா மாவட்டத்தின் மிகப்பெரிய நகரமாகும். இந்த நகரம் நகராட்சி மன்றத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது வர்தாவிலிருந்து 34 கிமீ (21 மைல்) தொலைவிலும், மகாராஷ்டிராவின் இரண்டாவது தலைநகரான நாக்பூரிலிருந்து 75 கிமீ (47 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இங்காங்கட் நகரம் இயற்கை வளங்களை வழங்கும் வேனா நதி நகரின் இரு பக்கங்களிலும் சூழப்பட்டுள்ளது. வடக்கு-தெற்கு நடைபாதையின் ஒரு பகுதியான தேசிய நெடுஞ்சாலை 44 (பழைய பெயர் என்எச்7) நகரம் வழியாக செல்கிறது. மேலும் இந்த நகரம் வளமான வர்தா பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இங்காங்கட் வரலாற்று ரீதியாக இந்திய பருத்தி வர்த்தகத்தின் மையமாகவும், தானியங்களுக்கான முக்கிய மையமாகவும் திகழ்ந்தது. இங்கன்காட் தெஹ்ஸில் சுமார் 76 கிராமங்களை உள்ளடக்கியது. நகரில் பேசப்படும் முக்கிய மொழி மராத்திய மொழியாகும். இந்த நகரம் மகாராஷ்டிராவின் விதர்பா பிராந்தியத்தில் ஒன்பதாவது பெரிய நகரமாகும். மேலும் இந்தியாவில் 437 வது இடத்தில் உள்ளது [2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]. தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய சமூக சேவகர் பாபா அம்தே இங்காங்காட்டில் பிறந்தார். பிரபல பாடகர் வைஷாலி மேட் மற்றும் நகைச்சுவை நடிகர் சுனில் பால் ஆகியோரும் இந்த நகரைச் சேரந்தவர்கள். இது மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக எழுத்தறிவு விகிதம் (94.30%) உள்ள நகரமாகும். இது மகாராஷ்டிரா மாநிலத்தில் மிகப்பெரிய பருத்தி மண்டி இங்கு அமைந்துள்ளது. மேலும் வேனா நதிக்கரையில் மிக உயரமான வித்தோபாவின் (52 அடி) சிலை காணப்படுகின்றது.

வரலாறு[தொகு]

பிரித்தானிய ஆட்சியில் இங்கங்கட் நகராட்சி மன்றம் 1873 ஆம் ஆண்டு மே 17 அன்று நிறுவப்பட்டது. நகரத்தின் முதல் நீர் தொட்டி 1873 ஆம் ஆண்டில் இல் கட்டப்பட்டது. நகராட்சி மன்றத்தின் மண்டபம் 1904 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. 1927 ஆம் ஆண்டில் நகராட்சி மன்றத்தின் முதல் தேர்தல் நடைபெற்றது. மேலும் வேனா அணை நகராட்சி மன்றத்தால் உருவாக்கப்பட்டது. தற்போது இந்த நகரத்தில் ​​ஏழு நீர் தொட்டிகள் உள்ளன. இந்த நகரம் வரலாற்று ரீதியாக பருத்தி, சோயா அவரை எண்ணெயின் முக்கிய மையமாக இருந்தது. தற்போது ​​இங்காங்கட் வர்தா மாவட்டத்தில் மிகப்பெரிய தொழிற்துறை மையமாகவும், தொழிற்துறையில் நாக்பூர் பிரிவில் 4 வது இடத்திலும் காணப்படுகின்றது. இங்கு எண்ணெய் ஆலைகள் அமைந்துள்ளன.

புவியியல்[தொகு]

இங்காங்கட் 20.57 ° வடக்கு 78.83 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[1] நகரம் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 215 மீ (705 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது. இது சுற்றியுள்ள பகுதியுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளது. வேனா நதியினால் நகரம் சூழப்பட்டிருப்பதால் வறட்சியினால் பாதிப்படைவதில்லை. நகரத்தில் நிலத்தடி நீரின் சராசரி ஆழம் சுமார் 120 அடி (37 மீ) ஆகும்.

புள்ளிவிபரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின் படி, இங்காங்கட் நகரில் சுமார் 100,400 மக்கள் வசிக்கின்றனர். 2015 ஆம் ஆண்டில் சுமார் 129,567 ஆக சனத்தொகை இருந்தது.[2] அவ்வாண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி சனத் தொகையில் 52% வீதம் ஆண்களாவர். இங்கங்காட்டின் சராசரி கல்வியறிவு விகிதம் 94% ஆகும். இது இந்திய தேசிய சராசரியான 74% ஐ விட அதிகமாக இருந்தது. ஆண்களின் கல்வியறிவு விகிதம் 97% வீதமாகவும், பெண் கல்வியறிவு விகிதம் 90% வீதமாகவும் இருந்தது. டைம்ஸ் ஆப் இந்தியாவின் கூற்றின்படி மகாராஷ்டிராவின் அதிக கல்வியறிவு விகிதம் கொண்ட நகரமாக இங்காங்கட் திகழ்கின்றது.[3] 100,000க்கும் அதிகமான மக்கட் தொகை கொண்ட நகரங்களுக்கான யுனிசெஃப் இன் கல்வியறிவு பகுப்பாய்வின் அடிப்படையில் 94.34% விகிதத்தில் இங்காங்கட் முதலிடத்தில் காணப்படுகின்றது. அதைத் தொடர்ந்து வர்தா (94.05%), பன்வெல் (93.98%) மற்றும் கோண்டியா (93.70%) என்பன தரவரிசைப்படுத்தப்படுகின்றன.[4]

போக்குவரத்து[தொகு]

இங்காங்கட் ரயில் நிலையம் தில்லி- சென்னை ரயில் பாதையில் அமைந்துள்ளது. இது பிராந்தியத்தின் முக்கிய ரயில் நிலையம் ஆகும். இந்த நிலையத்தில் பல ரயில்கள் நிறுத்தப்படுகின்றன.

அருகிலுள்ள விமான நிலையம் நாக்பூரின் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலையம் ஆகும். இது நகர மையத்திலிருந்து 70 கி.மீ தூரத்தில் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை 44 இங்கங்காட் வழியாக செல்கிறது.

சான்றுகள்[தொகு]

  1. "Maps, Weather, and Airports for Hinganghat, India". www.fallingrain.com. பார்க்கப்பட்ட நாள் 2019-12-07.
  2. "Hinganghat City Population Census 2011-2019 | Maharashtra". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2019-12-07.
  3. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  4. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இங்காங்கட்&oldid=2869949" இலிருந்து மீள்விக்கப்பட்டது