ஆலாவெர்தி
ஆலாவெர்தி Alaverdi | |
---|---|
Country | ஆர்மீனியா |
Marz | Lori |
First mentioned | 17th century |
அரசு | |
• Mayor | Karen Premuzyan |
பரப்பளவு | |
• மொத்தம் | 18 km2 (7 sq mi) |
ஏற்றம் | 1,000 m (3,000 ft) |
மக்கள்தொகை (2011 census) | |
• மொத்தம் | 13,343 |
• அடர்த்தி | 740/km2 (1,900/sq mi) |
நேர வலயம் | ஒசநே+4 (UTC) |
இடக் குறியீடு | (+374) 253 |
இணையதளம் | Official website |
Sources: Population[1] |
ஆலாவெர்தி (Alaverdi) :
(ஆர்மீனிய மொழியில்: Ալավերդի, ஆர்மீனிய உச்சரிப்பு : [ɑlɑvɛɾˈdi])
ஆலாவெர்தி என்பது ஆர்மீனியாவின் வடகிழக்குப் பகுதியில் சியார்சியாவின் எல்லைக்கு அருகில் உள்ள உலோரி மாகாணத்தில் இருக்கும் ஒரு நகரமாகும். ஆர்மீனியா மற்றும் சியார்சியா நகரங்களுக்கு இடையில் நேரடியான இரயில் இணைப்பில் இந்நகரம் அமைந்துள்ளது.
தெபெட் அல்லது தெபெடா அல்லது டோனா என்றழைக்கப்படும் ஆற்றுப் பள்ளத்தாக்கில் இந்நகரம் அமைந்துள்ளது. மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல் முழுக்குடியரசுக்கும் இந்நகரம் ஒரு முக்கியமான வணிக மற்றும் தொழில்துறை நகரமாகத் திகழ்கிறது.
இடைக்காலத்தில் ஆலாவெர்தியைச் சூழ்ந்துள்ள பகுதிகள் மானாசுகோமர் அல்லது மானிட்சுகோம் என்றழைக்க்ப்பட்டன. இருப்பினும் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் போது இந்நகரம் மானெசு எனப்பட்டது. புதிய செப்பு ஆலை அமைவதற்குக் காரணமானவர்களில் ஒருவரான 19 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பிரெஞ்சுப் பொறியாளர் மானெசு அவர்களின் நினைவாக இப்பெயர் இந்நகருக்குச் சூட்டப்பட்டது.[2]
2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கள் தொகை 13,373 ஆகும். ஆனால் 1989 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இத்தொகை 26300 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வரலாறு
[தொகு]வரலாற்றில், மானெசு-ஆலாவெர்தி நகரமானது, ஆர்மீனியாவின் குகார்க் மாகாணத்தின் ஒரு மண்டலமான துசோரோபோரின் ஒரு பகுதியாகும். 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து இக்குடியேற்றப்பகுதி ஆலாவெர்தி என்றழைக்கப்படுகிறது. 17 ஆம் நூற்றாண்டின் தர்கிக் போர்கலு பழங்குடியினத் தலைவரான ஆலாவெர்தி மொல்லா ஒக்லு தர்கான் என்ற பெயரில் இருந்து இந்நகரின் பெயர் வருவிக்கப்பட்டது ஆகும்.[3]
தொழிற்சாலை
[தொகு]ஆலாவெர்தி நகரம் சியார்சியாவின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பொழுது, சியார்சிய அரசர் இரண்டாம் எரெக்லியின் ஆணைக்கிணங்க 1770 ஆம் ஆண்டில் செப்பு உருக்கு உலை நிறுவப்பட்டது . 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், உருசியா மற்றும் பிரான்சு நாடுகள் உலோகவியல் வர்த்தகத்தில் முதலீடு செய்ததைத் தொடர்ந்து இந்நகரம் செல்வச் செழிப்பில் சிறந்து விளங்கியது. 1903 ஆம் ஆண்டில் ஆலாவெர்தி நகரத்தில் உற்பத்தி செய்யப்பட்ட செப்பின் அளவு உருசிய பேரரசில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த செப்பு உற்பத்தியில் 13 சதவீதமாகும்.
1909 ஆம் ஆண்டின் இறுதியில் தெபெட் நதியின் நீர் மின் திறன் திட்டம் துவக்கப்பட்டது. வளர்ந்துவரும் உலோகவியல் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மின்னாற்றலை உற்பத்தி செய்து வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாக இருந்தது.
உருசிய ஆட்சிக்காலத்தில் ஆலாவெர்தி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சனாகின் நகரம் மற்றும் சில கிராமங்களில் பெருமளவிலான கட்டுமானப் பணிகள் நடைபெற்றன. சோவியத் அரசு சில குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு இப்பகுதியில் இருந்த உலோகவியல் தொழிற்சாலைகளை விரிவுபடுத்தியது. இதனால், சிறிய தொழில் நகரமாக இருந்த ஆலாவெர்தி நகரம் சோவியத் ஆர்மீனியாவிற்குள் நவீனமயமான ஒரு நகரமாக மாறியது.
சமீபத்தில், ஆலாவெர்தியில் செப்பு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்திற்காகவும், புதிய செப்புச் சுரங்கங்களை வளர்க்கவும் ஆர்மீனியன் செப்பு திட்டத்தின் ஒரு கூறாகவே பல புதியத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதனால் செப்புத் தொழிற்சாலைகளில் புதியதாக மேலும் 500 வேலை வாய்ப்புகள் உருவாகின.
கல்வியும் மதமும்
[தொகு]கி.பி 966 ஆம் ஆண்டில் பக்ராதுனி ராணியான கோசுரோவானுசுவின் முயற்சியால் ஆலாவெர்தி நகரில் துவக்கப்பட்ட சனாகின் பல்கலைகழகமே இப்பகுதியின் முதலாவது கல்வி மையமாகும்.
உலோரி மாகாணத்தில் உள்ள முக்கியமான கல்வி மையங்களுள் இந்நகரும் ஒன்றாகும். 2009 ஆம் ஆண்டு நிலவரப்படி கிட்டத்தட்ட 2000 மாண்வர்களுடன் 10 பொதுக் கல்வி நிறுவனங்கள் மற்றும் சுமார் 400 குழந்தைகளுடன் 6 மழலையர் பள்ளிகளும் ஆலாவெர்தி நகரில் இயங்குகின்றன. ஆலாவெர்தி மாநிலக் கல்லூரி, கற்பிக்கும் கலை தொடர்பான இரண்டாண்டு படிப்பு வாய்ப்பை வழங்கியது. அதேபோல வடக்கு பல்கலைக்கழகத்தின் துமாண்யன் கிளையில் செவிலியப் பட்டம் மற்றும் பல் கூட்டுப்பொருள் மருத்துவப் பட்டப் படிப்பு வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
ரொமனோசு மெலிக்கியன் என்று பெயரிடப்பட்ட ஒரு இசைக் கழகம் மற்றும் 3 கலைப் பள்ளிகள் 2009 ஆம் ஆண்டில் 600 மாணவர்களுடன் ஆலாவெர்தி நகரில் செயல்பட்டன.[4]
1997 ஆம் ஆண்டில் ஆலாவெர்தி கலாச்சார அரண்மனை நிறுவப்பட்டது. இதில் மிகப்பெரிய திரையரங்கமும் பொது நூலகமும் இடம் பெற்றிருந்தன. நவம்பர் 2001 இல் ஆலாவெர்தி செப்புத் தொழிற்சாலை மற்றும் கௌகார்க் மறை மாவட்டம் மற்றும் சில உள்ளூர் பொதுமக்களின் முயற்சியால் நகரில் செயிண்ட் கிரிகோரி மாதாக் கோவில் திறக்கப்பட்டது.[5]
விளையாட்டு
[தொகு]ஆர்மீனியாவில் இருந்த பிரதானமான விளையாட்டு மையங்களில் ஆலாவெர்தி நகரமும் முக்கியமான ஒரு நகரமாகும். 1936 இல் உலோகவிய கால்பந்துக் கழகம், கீழ்நிலை சோவியத் கால்பந்து போட்டிகளில் ஆர்மீனியா சார்பாக பங்கேற்று விளையாடியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lori
- ↑ [М. А. Цатурян, В. А. Мелконян “Алавердскому меднохимическому комбинату 200 лет”, Ереван, 1971]
- ↑ "Ալավերդի տեղանունը պետք է ջնջել սերունդների հիշողությունից". Archived from the original on 2016-03-10. பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.
- ↑ "Education in Alaverdi". Alaverdi town official website. Archived from the original on 2012-07-18. பார்க்கப்பட்ட நாள் 2009-08-14.
- ↑ Alaverdi Church
புற இணைப்புகள்
[தொகு]- Official web site
- A brief description at Cilicia.com பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம்