உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்தர் பெவர்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர்தர் பெவர்லி (Arthur Beverly) நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு கடிகாரத் தயாரிப்பாளர் ஆவார். கண்காணிப்பாளர், கணிதவியலாளர் மற்றும் வானியலாளர் என்ற பன்முகங்களும் இவருக்கு இருந்தன.[1] 1822 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 22 ஆம் நாள் இவர் பிறந்தார்.

ஒடாகோபல்கலைக்கழகத்தில் பெவர்லி கடிகாரம்

இசுக்காட்லாந்தின் அபெர்தீன்சையர் உள்ளாட்சிப் பிரிவிலுள்ள மிகப்பெரிய கிராமமான ஆல்போர்டில் விவசாயி சியார்ச்சு பெவர்லியின் மகனாக ஆர்தர் பெவர்லி பிறந்தார். வீட்டிலும் உள்ளூர் காலணி தயாரிப்பாளர் ஒருவரின் உதவியில் மாலை நேரங்களிலும் இவர் கல்வி கற்றார். அபெர்தீன்சையரைச் சேர்ந்த கடிகாரத் தயாரிப்பாளர் மற்றும் ஒளியியல் நிபுணர் ஒருவரிடம் 14 வயது முதல் பயிற்சிபெற்றார். இங்குதான் கண்ணாடி வில்லைகள் தயாரிப்பாளராக இவர் புகழ்பெற்றார். அபெர்தீன் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பேராசிரியரான முனைவர் சியார்ச்சு டிக்கிக்கு நுண்ணோக்கி கண்ணாடி வில்லைகள் தயாரித்துக் கொடுத்த பிறகு பேராசிரியர் டிக்கி ஆர்தரை மற்ற விஞ்ஞானிகளுக்கு பரிந்துரைத்தார்.

1852 ஆம் ஆண்டில் ஆர்தர் ஆத்திரேலியாவுக்குப் பயணம் செய்தார். சிலகாலம் தங்கச் சுரங்கங்களில் பணியாற்றிய பின்னர் மெல்போர்னுக்கு இடம்பெயர்ந்து கடிகாரத் தயாரிப்பாளராக பணிபுரிந்தார். 1858 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்குச் சென்றார். துனெடின் நகரில் ஒரு வர்த்தகத் தொழிலை தொடங்கினார். 1865 ஆம் ஆண்டு நியூசிலாந்து கண்காட்சியில் பெவர்லி கடிகாரம் என்று அழைக்கப்படும் ஒரு கடிகாரத்தை காட்சிப்படுத்தினார். காற்றின் தினசரி வெப்பநிலை மாறுபாட்டிற்கேற்ப தன்னைத்தானே சுற்றிக் கொள்ளவும், ஒழுங்கற்ற வடிவங்களின் பரப்பை அளவிட உதவும் ஒரு தளப்பரப்புமானியாகவும் இக்கடிகாரம் பயன்பட்டது.[2] தளப்பரப்புமானியின் வடிவமைப்பிற்காக 1865 ஆம் ஆண்டில் இராயல் இசுக்காட்லாந்திய கலைக் கழகத்தின் மக்தோகல் பிரிசுபேன் பதக்கம் ஆர்தருக்கு வழங்கப்பட்டது.

ஆர்தர் வானவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தனது சொந்த 3 அங்குல தொலைநோக்கியை உருவாக்கினார். ஆர்தரைச் சிறப்பிக்கும் வகையில் உள்ளூரில் நிறுவப்பட்ட வானாய்வகத்திற்கு பெவர்லி-பெக் ஆய்வகம் எனப் பெயரிடப்பட்டது.

இறுதிகாலம் வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த ஆர்தர் 1907 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார். தனது சொத்துகள் அனைத்தையும் ஒடாகொ பல்கலைக்கழகத்திற்காக விட்டுச் சென்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Story: Beverly, Arthur". Te Ara. பார்க்கப்பட்ட நாள் 4 April 2017.
  2. Amon, Hardwicke Knight and L. E. S. "Arthur Beverly". Dictionary of New Zealand Biography. Ministry for Culture and Heritage. பார்க்கப்பட்ட நாள் 1 December 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்தர்_பெவர்லி&oldid=3052854" இலிருந்து மீள்விக்கப்பட்டது