அல்-நசீர்
அபுல்-அப்பாஸ் அகமத் இப்னு ஹசன் அல்-முஸ்தாதி என்பவர் பகுதாதின் அப்பாசியக் கலீபகத்தின் கலீபா ஆவார். இவர் அல்-நசீர் இல்-தின் அல்லா என்ற அரேபிய பெயரால் அல்லது எளிமையாக அல்-நசீர் என்ற பெயரால் பொதுவாக அறியப்படுகிறார். இவர் 6 ஆகத்து 1158 அன்று பிறந்து 5 அக்டோபர் 1225 அன்று இறந்தார். 1180 முதல் தான் இறக்கும் வரையில் கலீபாவாக இருந்தார். இவரது அரேபியப் பெயருக்கு கடவுளின் மதத்திற்கு வெற்றியைக் கொடுப்பவன் என்று பொருள்.[1]
இவரது ஆட்சிக்காலம் தாதர் தலைவர்களுடன் இவர் செய்த கூட்டணிகளுக்காக அறியப்படுகிறது. மங்கோலியர்களிடம் இவர் வைத்த ஆபத்தான வேண்டுதலுக்காகவும் அறியப்படுகிறார். இவ்வேண்டுதல் இவரது சொந்த அரசமரபையே சீக்கிரமாக முடிவுக்குக் கொண்டு வந்தது.
குவாரசமிய ஷா தெகிசின் மகன் இரண்டாம் முகமது கலீபின் நடவடிக்கைகளால் வெறுப்படைந்திருந்தார். அல்-நசீரின் ஆன்மீக அதிகாரத்தைக் குறைப்பதற்காக ஒரு சியா கலீபை நிறுவினார். பிறகு தனது இராணுவத்தை பகுதாதை நோக்கி திருப்பினார். சில நடுக்கால வரலாற்றாளர்கள் எழுதியபடி, பதிலுக்கு கலீப் அந்நேரத்தில் வளர்ந்த வந்த மங்கோலியத் தலைவரான செங்கிஸ் கானிடம் முறையிட்டார். முகமதுவின் நடவடிக்கைகளை அடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எனினும் இந்நிகழ்வு சர்ச்சைக்குரியதாக உள்ளது. ஆனால், கலீப் முஸ்லீமல்லாத மங்கோலியர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார் என்றே கருதப்படுகிறது.
செங்கிஸ் கான் மிகுந்த ஆபத்தானவர் என்று கலீப் சீக்கிரமே அறிந்தார். நடு ஆசியாவின் புல்வெளிகள் செங்கிஸ் கானைக் கண்டு நடுங்கின. அவரது நாடோடிக் கூட்டங்கள் குவாரசமிய ஷா முகமதுவை ஓட வைத்தன. தன் நாட்டைவிட்டு ஓடிய ஷா காசுப்பியன் கடலில் இருந்த ஒரு தீவில் இறந்தார்.
உசாத்துணை
[தொகு]- ↑ Hanne, Eric J. (2007). Putting the Caliph in His Place: Power, Authority, and the Late Abbasid Caliphate. Fairleigh Dickinson University Press. p. 204. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8386-4113-2.